Monday, August 13, 2012

இலங்கைக்கு எந்த விட பதக்கமும் கிடைக்காத நிலையில் ஒலிம்பிக் நிறைவு



கடந்த மாதம் 25-ம் திகதி கோலாகலமாக ஆரம்பமான லண்டன் ஒலிம்பிக் போட்டிகள் ஆடம்பரமான மற்றும் பிரம்மாண்டமான நிறைவுவிழா நிகழ்ச்சியுடன் இலங்கை நேரப்படி இன்று அதிகாலை நிறைவடைந்தன. 

கண்கவர் அடையாளங்கள் அழகிய ஒளி நிகழ்ச்சிகள், மற்றும் வண்ண அலங்கார அணிவகுப்புகள் ஆகியவை இவ்விழாவில் இடம்பெற்றன. 

பாப் இசைப்பாடல்களுடன் நிறைவுவிழா நிகழ்ச்சியில் லண்டன் மாநகரின் அடையாளமாகக் கருதப்படும் பல்வேறு பொருள்களின் அணிவகுப்பும் நடத்தப்பட்டது. 

இங்கிலாந்து இளவரசர் ஹாரி, மற்றொரு இளவரசரான வில்லியமின் மனைவி கேத், லண்டன் மாநகர மேயர் ஆகியோர், சர்வதேச ஒலிம்பிக் குழு தலைவரான ஜாக்கஸ் ராக்குடன் விழா மேடையில் அமர்ந்திருந்தனர். 

விழாவின்போது நடைபெற்ற அணிவகுப்பில் 10,800 விளையாட்டு வீரர்கள் கலந்துகொண்டனர். தங்களுக்குப் பிடித்தமான வீரர்களைக் கண்டதும் ரசிகர்கள் மகிழ்ச்சி ஆரவாரமிட, ரசிகர்களைப் பார்த்து வீரர்களும் பதிலுக்கு ஆரவாரம் செய்தனர். 

ஒலிம்பிக் மைதானத்தில் கூடியிருந்த 80,000 ரசிகர்களும் விழாவினை ஆரவாரத்துடன் கண்டுகளித்தனர். மேலும், உலகம் முழுவதும் 300 மில்லியனுக்கும் மேற்பட்ட ரசிகர்கள் இவ்விழாவை தொலைக்காட்சியில் கண்டுகளித்துள்ளனர். 

2012 ஒலிம்பிக் போட்டி முடிவுகளின்படி ஐக்கிய அமெரிக்கா 46 தங்கம் 29 வெள்ளி 29 வெண்கலப் பதக்கங்களுடன் முதலிடத்தைப் பெற்றுக் கொண்டது. 

38 தங்கங்கள், 27 வெள்ளிகள், 22 வெண்கலங்களோடு சீனா இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. 

29 தங்கங்கள், 17 வெள்ளிகள், 19 வெண்கலப் பதக்கங்களோடு பெரிய பிரித்தானியா மூன்றாவது இடத்தை பிடித்துக் கொண்டது. 

இலங்கை சார்பில் 7 வீரர்கள் ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபற்றிய போதும் எவருக்கும் பதக்கம் வெல்லும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்தியா 7 பதக்கங்களை பெற்று தரவரிசை பட்டியலில் 55 இடத்தைப் பிடித்தது.


Disqus Comments