Tuesday, October 23, 2012

கறுப்பு ஒக்டோபா். 22 வருடங்கள் நிறைவு

இரத்தத்தாலும் கண்ணீராலும் எழுதப்பட்ட சோக வரலாற்று நிகழ்வு இது.

1990ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வடக்கில் வாழ்ந்து வந்த சுமார் 78ஆயிரம் முஸ்லிம் மக்கள் வடக்குக்கு வெளியே புலிகளால் விரட்டப்பட்டனர். யாழ்ப்பாணத்துக்கு வெளியே ஏனைய மாவட்டங்களில் வாழ்ந்த முஸ்லிம் மக்கள் தமது வாழ்விடங்களை விட்டு வெளியேற 48 மணிநேர அவகாசம் வழங்கப்பட்டது. யாழ் நகர முஸ்லிம்களுக்கு இரண்டே இரண்டு மணிநேரமே கால அவகாசம் வழங்கப்பட்டது.

1990ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முப்பதாம் திகதி யாழ் நகரப் பகுதிகளில் உறுமிக் கொண்டிருந்த புலிகளின் வாகனங்களிலிருந்த ஒலிபெருக்கிகள் அலறிக்கொண்டிருந்தன.

‘யாழ் நகரத்தில் வாழும் அனைத்து முஸ்லிம்களும் வட மாகாணத்துக்கு வெளியே செல்ல வேண்டும். உடுத்த உடுப்புடனும் ஐந்நூறு ரூபாவுக்கு மேற்படாத பணத்துடனும் அனைத்து முஸ்லிம்களையும் யாழ் ஒஸ்மானியாக் கல்லூரிக்கு வருமாறு இத்தால் அறிவுறுத்தல் விடுக்கப்படுகிறது. இந்த உத்தரவை மீறி நடப்பவர்களுக்குக் கடுமையான தண்டனைகள் வழங்கப்படும்’ - இதுதான் புலிகளின் அந்த அறிவுறுத்தல்.


அன்று நடந்த அவலத்தை ஒரு சகோதரி கண்ணீருடன் பகிர்ந்து கொள்கின்றார்

"அன்று காலையிலேயே ஒலி பெருக்கி அறிவித்தல் ஊரூராக நடை பெற்றுக் கொண்டிருந்தது. 'இன்னும் இரண்டு நாட்களின் பின்னர் புலிகளின் தலைமையகத்திற்கு வந்து வழிப் பாஸ் பெற்றுக்கொள்ள வேண்டுமென்றும், 3 தினங்களுக்குள் ஊரைவிட்டுச் செல்ல வேண்டும் என்றும், வீட்டுச் சாவி கதவிலேயே வைத்து விட வேண்டுமென்றும், விடத்தல் தீவு, பள்ளிமுனை 5 தென்னம் பிள்ளைக் கடல் மூலமே பயணம் செய்ய வேண்டும் என்றும் அறிவிக்கப் பட்டது.

மானமும் உயிரும் காப்பாற்றப்பட வேண்டுமென்ற மக்கள் வழிப் பாஸ் பெறுவதற்காக முண்டியடித்தனர். அன்று தமிழீழ விடுதலைப் புலிகள் இறுக்கமான நிருவாகிகளாகத் தங்களை வெளிக்காட்டினார்கள். கொடூரப் பார்வைகளால் மக்களைக் கொல்லத்துணிந்தார்கள். பாஸ் பெற்றுக் கொண்டவர்கள் திரும்பிப் பார்க்காமல் வெளியேறி விட வேண்டும் என்பது எதிர்பார்ப்பு. பாஸ் பெற்றவர்கள் படிப்படியாக வெளியாகத் தொடங்கினர். என்ன நடக்கிறது, யாருடன் கதைப்பது, மனதில் எழும் கேள்விகளுக்கு பதில் எங்கே பெறுவது, எமது விருப்பு வெறுப்புக்களை யாரிடம் தெரிவிப்பது என்பது பற்றி எதுவுமே தெரியாது. கலங்கிய மனதோடு வெளியேறிவிட வேண்டும் வெளியேறிவிட வேண்டும் என்ற சொற்களே எங்கும் எதிரொலித்துக் கொண்டிருந்தன. விடத்தல் தீவு நீர் வழிப் பாதையில் செல்வதாயின் ஒரு மைல் தூரம் சேற்றில் நடந்தே கறையேற வேண்டும்.

நடக்க முடியாத வயதானவர்களின் நிலையென்ன, கர்ப்பினித் தாய்மார்களின் அவலம், குழந்தைகளின் பரிதாபம்- இத்துன்பத்தை எப்படி விபரிப்பது. அத்தியவசியமாகத் தேவைப்பட்ட பொருட்களையும், கைக் குழந்தைகளையும் தூக்கிய தாய்மார்கள் அவலத்தை எப்படி வர்ணிப்பது. இது போலவே பள்ளிமுனைக் கடற்பாதையில் உறவுகளெலல்லாம் கடல்கடந்து, காடுமேடுகளையெல்லாம் நடந்தே கழித்து, பசியோடும் பட்டினியோடும் பாரச் சுமைகளோடும் வவுனியா போய்ச் சேர்ந்து அங்கிருந்தே வாகனங்கள் மூலம் வேறு இடங்களுக்குச் சென்றுள்ளனர்.

இந்தக் கொடுமைகளுக்கெல்லாம், அம்மீளாத் துயர்களுக் கெல்லாம், இவ்வவலங்களுக்கெல்லாம் எங்களிடம் கண்ணீரைத் தவிர பதிலேதுமிருக்கவில்லை.

என்னையும் எனது நான்கு பிள்ளைகளையும் கூட்டிக்கொண்டு மாறா வடுக்களோடு வீட்டைவிட்டு வெளிக்கிட்டார் எனது கணவர். பெரிய பள்ளிவாசலடியில் நின்று கண்ணீர் மல்கி குனூத்தோதி அல்லாஹ்வையழைத்தோம். எங்கள் பிரார்த்தனையின் வேதனை வார்த்தைகளில் கலந்து, நா தளுதளுத்தது. கைகளிரண்டும் வானை நோக்க பார்வைகள் இறை சன்னிதானத்தைத் தேடியது.

அப்போது நாங்கள் இறைவனிடத்தில் வேண்டியது, இறைவா! யாருக்கும் எந்த கெடுதலும் நினைக்காத எம்மை, இம்மீளாத் துயரிலாழ்த்தி நிர்க்கதிக்குள்ளாக்கிய வர்களை மனம் மாறச் செய்துவிடு! இல்லாத பட்சத்தில் மிகக்கேவலமான முறையில் அவர்களை அழித்து முஸ்லிம்களைப் பாதுகாத்தருள் என்ற இறுதிப் பிரார்த்தனையை எம்மண்ணில் விதைத்துவிட்டுக் கைத் தூக்குகளோடு நாலு மைல் தூரத்தை கால் நடையாகக் கடந்து ஐந்து தென்னம்பிள்ளையடிக்கு வந்து சேர்ந்தோம்.

எம்மைப்போல் பல்லாயிரக் கணக்கான மக்கள் பிண்ணிப்பிணைத்த நெஞ்சோடும், அழுது வீங்கிய கண்களோடும் கடற்கரையை நிரப்பிக் கொண்டிருந்தனர்.

நொண்டி, முடம், நிறைமாதக் கர்ப்பிணிகள், கையிலும் வயிற்றிலும் குழந்தை சுமந்த தாய்மார்கள் நடக்கத் தள்ளாடும் வயோதிபர்கள் நடந்து களைத்த மூதாட்டிகள், வயோதிபர்களைச் சுமந்த பிள்ளைகள், நோயாளிகள், இத்தா முடியாத விதவைகள், தமக்கு நடப்பது என்ன என்பதைக் கூட அறியாத குழந்தைகள் கூட்டம், கொட்டோ கொட்டென கொட்டிய மழை, வெள்ளமாகப் பெருக்கெடுத்தது.

மேலே மழை-கீழே மழை வெள்ளம், கடல் நீர் திவலைகள் சுமந்து, மழை நீரோடு சுழன்றடித்த காற்று, ஆர்ப்பரிக்கும் ஆழிப் பேரலையின் பேரோசை, எல்லாவற்றையும் விஞ்சியதாக எங்கள் குழந்தைகளின் அழுகைச்சத்தம் மழைக் குளிரோடு கடலலைக் குளிரும் நடு நடுங்க வைக்க படகுகளின் வருகைக்காகக் காத்திருந்த விழிகள் எதிர்பார்ப்புகளை சமுத்திரத்தை நோக்கி எறிய... இம் மனிதப் பேரவலத்தை விவரிக்க எங்களிடம் வார்த்தைகளேயில்லை.

படகுகள் வந்தன மக்கள் தாய்ம் மண்ணுக்கு விடை கொடுக்கத் துவங்கினார்கள். இரவு வந்தது, அடுத்த நாள் பகலும் வந்தது, இரவும் வந்தது பொழுதும் புலர்ந்தது மக்கள் சிறுகச்சிறுக வெளியேறி எதுவுமே நடக்காத ஓர் மயான அமைதி நிலவியது.எமக்கு இரண்டாம் நாளே படகு கிடைத்தது எமது படகில் குழந்தைகள் உட்பட 30 பேர் இருந்தார்கள் சாதாரணமாக ஒரு படகில் 30 பேர் பயணம் செய்வது என்பது மிகவும் சிரமமான காரியமாகும். என்ன ஆச்சிரியம் பாருங்கள் நாம் பிரயாணத்தை ஆரம்பித்தவேளை கடல் குளம் போல அலை மங்கிக் கிடந்தது.

நாங்கள் சென்ற நேரம் எமது படகு மட்டும் சிலாவத்தறை வரையே எம்மையேற்றிச் சென்றது. சிலாவத்துறையை அடைந்த நாம் கற்பிட்டி செல்ல வழிவகை தெரியாது கடற்கரையிலேயே நின்றோம். சிலாவத்துறை மக்கள் ஏற்கனவே அவ்விடத்தைவிட்டுச் சென்றிருந்ததால் சிலாவத்துறைக் கடற்பிரதேசமும் மனித சஞ்சாரமற்று வெறிச்சோடிக்கிடந்தது. நேரம் பகல் 12.00 மணியைக் கடந்து விட்டது. பசி வேறு தாங்க முடியவில்லை.

அப்போது சிலாவத்துறை இராணுவ முகாம் ஒரு அபாயத்தை எதிர் கொள்ளும் தயார் நிலையில் இயங்கிக் கொண்டிருந்தது. சிலாவத்துறை மக்கள் அனைவரும் வெளியேறியது இராணுவத்தைப் பொறுத்தவரைக்கும் அவ்வளவு பாதுகாப்பானதாக இருக்கவில்லை. எனது கணவர் தனக்குத் தெரிந்த ஒரு இராணுவ அதிகாரி இருப்பதாகவும் அவரைச் சந்தித்தால் ஏதேனும் உதவி பெறலாமென்றும் இரானுவ முகாமிற்குச் சென்றார்கள்.

இறைவனின் நாட்டம் எமது எதிர்பார்ப்பு வீண் போகவில்லை. இராணுவத்தினருக்கு மாவு மூடைகள் ஏற்றிக் கொண்டு டிங்கிப்படகு ஒன்று வருவதாகக் கூறிய இராணுவ அதிகாரி அதை கற்பிட்டி வரையும் செல்வதற்கு ஒழுங்குபடுத்தித் தருவதாகவும் வாக்களித்தார். எமக்கு பகல் போசனத்திற்காக அரிசி, சீனி, பருப்பு, மா போன்றவற்றையும் கொடுத்தனுப்பியிருந்தார்.

பாத்திரங்கள் உள்ள ஒரு வீட்டில் அவசர அவசரமாகச் சமைத்து பசிதீர்த்துக் கொண்டு இரவைக்கும் உதவலாம் என்ற எண்ணத்துடன் ரொட்டிக்காக மாவைப் பிசைந்து எடுத்துக்கொண்டோம். சரியாக இரண்டு மணிக்குப்படகு வந்தது. அதிலிருந்த 40 மூடை மாவையும் மருமக்களும் பேரப்பிள்ளைகளும் கூட இருந்த ஏனைய ஆண்களும் முதுகில் சுமந்து கரை சேர்த்தனர். அதே வேளை பெண்கள் இரவுணவுக்காக ரொட்டியைச் சுட்டெடுப்பதில் கவனம் செலுத்தினோம். சரியாக 3.00மணிக்கு கற்பிட்டி நோக்கிப் பயணப்படவேண்டியேற்பட ரொட்டி சுட்ட அரைவாசியோடு புறப்பட்டோம்.

அதிகாலை இரண்டு மணிபோல படகு குதிரை மலையை அடைந்தது. குதிரை மலைப்பிரதேசத்தில் வைத்து கடல் கொந்தளிக்கத்துவங்கியது. படகு கவிழ்ந்து விடுமோவென அச்சம் கொண்டு அனைவரும் இறைவனிடம் பிரார்த்தனையில் ஈடுபட்டோம் ஒரு மணி நேரப் போராட்டத்தின் பின் அதிகாலை மூன்று மணியளவில் கற்பிட்டிக் கரையை அடைந்தோம்.

வடபுல முஸ்லிம்களின் துன்ப நிலையறிந்து அவர்களை அழைத்துச் செல்ல உறவினர்கள் குழுமியிருந்தனர். குடாப்பகுதி மக்கள் கடல்மார்க்கமாப் போராடி ஓரளவு குறைந்த துன்பங்களுடன் தாய் மண்ணை விட்டும் வெளியேறினர். ஆனால் ஏனைய மக்கள் நிலை மிகவும் பரிதாபத்திற்குறியதாகியது. காடுகளையும் களனிகளையும் பொடிநடையாகவே கடந்து வந்துள்ளனர். வரலாற்றில் எங்கேனும் இப்படியோர் துன்பம் துணை செய்த மக்களாலேயே நிகழ்த்தப்பட்டிருக்கிறதா? எமது ஊன் உண்ட உறவுகளாளேயே உடமைகளும் உரிமைகளும் பறிக்கப்பட்ட சோகத்தை என்னவென்று சொல்வது. எமது எண்ணங்களுக்கு எல்லைகளே இருக்கவில்லை நாம் பட்ட துன்பங்களுக்கு அளவீடுகளே இருக்கவில்லை.

ஆதரவு தருபவர் யார் என்ற ஏக்கம் அனைவர் மனதிலும் குடிகொண்டிருந்தது. அரவனைத்து ஆறுதல் தருபவர் யார் என்ற கலக்கம் மேலோங்கியிருந்தது. ஒரு போதும் கனவில் கூட நினைத்திருக்காத பெருந்துன்பத்தை தமிழீழ விடுதலைப்புலிகள் எமக்குத் தந்தனர் அப்போது மனமுருகி நாம் விட்ட சாபம் எல்லைகள் கடந்து இறை சந்நிதானத்தைத்தட்டி இருக்கிறது"

நன்றி: Jafna Muslim


இவ்வாறு முஸ்லிம் அந்த நாட்களில் பட்ட துன்பங்களை எம்மால் எழுதி முடிக்க முடியாது. அல்ஹம்து லில்லாஹ் சத்தியம் வெல்லும். இப்போது அந்த தீய சக்திகள் அழிக்கப்பட்டு வடக்கில் முஸ்லிம்கள் வாழ நிம்மதியான சூழல் ஓரளவு ஏற்பட்டிருக்கின்றது என்பது யாவரும் அறிந்த விடயம். என்றாலும் அந்த கொரூர சம்பவத்தை மறக்க முடியாது. மறைக்கவும் முடியாது.
Disqus Comments