Tuesday, March 12, 2013

உலமா சபை மேலும் ஆடினால் அதனுடைய கொட்டத்தை எவ்வாறு அடக்குவது என்பது பற்றி எமக்கு நன்கு தெரியும் - BBS Secretary

ஜம்இய்யதுல் உலமா சபை நேற்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் ஹலாலை   நிறுத்துவதாக அறிவித்தது. ஆனால் அது பொய்யாகும். ஹலால் விவகாரம் இன்னும் முற்றுப்பெறவில்லை. பொது பல சேனா அமைப்பு தொடர்ந்தும் ஹலாலுக்கு எதிராக செயற்பட்டுவரும். பெளத்தர்களும் இந்த விடயத்தில் கவனமாக இருக்க வேண்டும் என பொது பல சேனா வின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார். இன்று பிற்பகல் குறித்த அமைப்பின் தலைமையகமான சம்புத்தத்வ ஜெயந்தியில் நடைபெற்ற  ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் ஜனாதிபதியால் நியமித்த அமைச்சரவை உப குழு தனது முடிவினை அறிவிக்க முன்னர் ஜம்இய்யதுல் உலமா சபை ஏன் இந்த முடிவுக்கு  வரவேண்டும்? இன்று நாட்டில் பெளத்த மதத்துக்கு எதிராக சிலர் செயற்பட்டு வருகின்றனர்.முன்னாள் அமைச்சர் மிலிந்த மொரகொட போன்றவர்கள் வெளிநாட்டு நிறுவனங்களின் பணத்தை பெற்றுக்கொண்டு பெளத்த மதத்துக்கு எதராக முன்னின்று செயற்படுகிறார்கள். அதில் ஒரு சில தேரர்களும் இணைந்துகொண்டுள்ளார்கள்.

 ஜம்இய்யதுல் உலமாவின் நேற்றைய முடிவின் படி உள்நாட்டில் ஹலால் இல்லை. எனினும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கு ஹலால் சான்றிதழ் வழங்குவதாக தெரிவிக்கப்பட்டது. அப்படியாயின் உள்நாட்டு உற்பத்திகளுக்கு ஹலால் இலச்சினை மாத்திரம் இருக்காது.ஏனைய சகல ஹலால் நடைமுறைகளும் உள்ளடக்கப்படும். ஹலால் சான்றிதழ் என்பது ஹலால் விடயத்தில் உள்ள இறு திப்படிமுறையாகும்.

நாம் வேண்டிக்கொள்வது  ஹலால் சான்றிதழை  மட்டுமல் விலக்கிக் கொள்வதையல்ல. சகல ஹலால் படிமுறைகளையும் முற்றாக நிறுத்த வேண்டும் என்பதாகும். ஆனால் சூட்சுமமான முறையில் ஹலால் சான்றிதழை மாத்திரம் விலக்கிக்கொண்டு பெளத்தர்களுக்கு ஹலால் உணவுகளை உட்கொள்ள சதி செய்கிறார்கள்.

இந்தநாட்டில் சட்டவிரோதமான முறையில் நடைமுறைப் படுத்திக்கொண்டிருக்கும் ஹலால் விடயத்தை வெளிச்சத்துக்கு கொண்டு வந்து அதுபற்றி தெளிவுபடுத்தியது பொது பல சேனா அமைப்புதான். ஆனால் நேற்றைய ஊடகவியலாளர் மாநாட்டில் உலமா சபை சில பிக்குகளை அழைத்துச்சென்று  முன்னிலைபடுத்தி தமது முடிவுகளை வெளியிட்டது.

அந்த பிக்குகள்  சொல்கிறார்கள் 'எடுத்திருக்கும் முடிவு நாட்டுக்கு கிடைத்த வெற்றியென்று'. ஹலாலுக்கு எதிராக அவர்கள் என்ன செய்தார்கள்?அந்த தேரர்களை கொண்டு முன்னிலைப்படுத்துவதற்கு உலமா சபைக்கு எவ்வாறு அதிகாரம் வந்தது. உலமா சபை மேலும் ஆடினால் அதனுடைய கொட்டத்தை எவ்வாறு அடக்குவது என்பது பற்றி எமக்கு நன்கு  தெரியும் என்றார்.
Disqus Comments