வெளிநாட்டு
சந்தைக்கு ஏற்றுமதி செய்யப்படும் உற்பத்திகளுக்கு மட்டும் ஹலால் சான்றிதழ்
என்ற தீர்மானத்தின் ஊடாக ஹலாலை விட்டுக்கொடுக்கவில்லை. முன்னர் ஹலால்
சான்றிதழ் கட்டாயம் பொறிக்கப்பட வேண்டும் என இருந்தது. எனினும் தற்போது
அவ்வாறில்லை. விரும்பினால் மாத்திரம் ஹலால் சான்றிதழை பெற முடியும் என அகில
இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் தலைவர் அஷ்ஷெய்க் றிஸ்வி முப்தி
தெரிவித்தார்.
கொழும்பில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது,
இதன் மூலம் ஹலால் விடயம் விட்டுக்கொடுக்கப்படவில்லை. ஹலால் விடயம்
பாரியதொரு பிரச்சினையாக என அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவிற்கு
காணப்படவில்லை. எனினும் சமூகங்களுக்கு மத்தியில் பாரிய பிரச்சினையாக
காணப்பட்டது.
இந்த பிரச்சினை தொடர்பாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா பாரிய
அழுத்தங்களுக்கு முகம் கொடுத்தன. இந்த அழுத்தங்களை கருத்திற்கொண்டு அவசரமான
முடிவொன்றை எடுக்க நேரிட்டது. இதனாலேயே அவசரமாக இந்த தீர்மானம்
மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எனினும் இந்த அமைச்சரவை உப குழுவில் ஹலால் தொடர்பில் மாத்திரம் அறிக்கை
சமர்ப்பிக்காது. அது ஹலால் உட்பட சமூகங்களுக்கு இடையிலான பிரச்சினை
உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் ஆராயவுள்ளது. இதனால் இந்த குழுவிடம் எமது
ஹலால் தொடர்பான தீர்மானமும் சமர்ப்பிக்கப்படும்
இந்த ஹலால் சான்றிதழ் வழங்கும் நடவடிக்கையை இலங்கைக்காக மாத்திரம்
வழங்கவில்லை. சுமார் 65க்கு மேற்பட்ட நாடுகளுக்காகவே நாங்கள்
வழங்குகின்றோம். தற்போது நாட்டில் காணப்படும் ஒற்றைமை ,மனிதநேயம்,
நாட்டின் அபிவிருத்தி மற்றும் பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றுக்கு பங்களிப்பு
செய்யும் வகையிலேயே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சமாதானமும் இன நல்லுறவும்மிக்க இலங்கையைக் கட்டியெழுப்ப வேண்டுமாயின் நாம்
சில விட்டுக் கொடுப்புக்களையும் தியாகங்களையும் செய்ய வேண்டியது
அவசியம்.இதன் அடிப்படையிலேயே உலமா சபை இவ்வாறானதொரு தீர்மானத்திற்கு
உடன்பட்டதாகும்.