Tuesday, April 30, 2013

மின் பாவனையாளர்களுக்கு நிவாரணம் வழங்க முடியாது - மின்சார சபை

மின்சார பாவனையாளர்களுக்கு மேலும் நிவாரணம் வழங்க முடியாது என இலங்கை மின்சாரசபை அறிவித்துள்ளது.
கடந்த மின்சாரக் கட்டணத் திருத்தத்தின் போது அரசாங்கம் பாவனையாளர்களுக்கு பெருமளவு நிவாரணத்தை வழங்கியுள்ளதாக மின்சார சபையின் தலைவர் டபிள்யூ.பி.கனேகல தெரிவித்துள்ளார்.

குறிப்பாக ஒரு மின் அலகை உற்பத்தி செய்வதற்காக செலவாகும் தொகையை விட 50 வீத விலைக் கழிவுடனேயே பாவனையாளர்களுக்கு மின்சாரம் வழங்கப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனால் இலங்கை மின்சார சபைக்கு பெரும் நட்டம் ஏற்பட்டதாகவும், இதனால் பெற்றோலியக் கூட்டுத்தாபனம், வங்கி மற்றும் மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு பெருந்தொகை பணத்தை செலுத்த வேண்டியுள்ளதாகவும் மின்சார சபையின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

மாற்று வழிகள் இல்லாததால் மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

தற்போதைய கட்டண அதிகரிப்பினால் இலங்கை மின்சார சபைக்கு 45 மில்லியன் ரூபா வருமானம் கிடைக்கும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இதுவொரு இடைக்கால நடவடிக்கையாகவே அமைந்துள்ளதாகவும் மேலதிகமாக கிடைக்கும் பணத்தைக் கொண்டு நிலுவைக் கட்டணங்களை செலுத்த முடியும் எனவும் இலங்கை மின்சார சபையின் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறு நிலுவைக் கட்டணத்தை செலுத்தினால் மாத்திரமே மக்களுக்கு 24 மணித்தியலமும் தடையின்றி மின்சாரத்தை விநியோகிக்க முடியும் என அவர் குறிப்பிட்டார்.

இலங்கை மின்சார சபையின் பல்வேறு மட்டங்களில் ஊழல் மோசடிகள் இடம்பெற்றுள்ளது என்பதை தாம் மறுக்கவில்லை எனவும், எதிர்காலத்தில் அத்தகைய ஊழல்கள் இடம்பெறுவதற்கு இடமளிக்கப்போவதில்லை எனவும் இலங்கை மின்சார சபையின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Disqus Comments