Wednesday, June 5, 2013

பொதுபல சேனாவின் கல்முனை ஊடுருவல் இனக்கலவரத்திற்கு வழிவகுக்கும் - SLMC

சிங்கள கடும்போக்குவாத அமைப்பான பொது பல சேனா கல்முனையில் ஊடுருவ மேற்கொள்ளும் முயற்சியானது முஸ்லிம்களை சீண்டி கலவரத்திற்கு வழியேற்படுத்தும் சதித் திட்டமாகும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் இளைஞர் காங்கிரஸ் தேசிய அமைப்பாளரும் கிழக்கு மாகாண சபையின் முஸ்லிம் காங்கிரஸ் குழுத்தலைவருமான ஏ.எம்.ஜெமீல் தெரிவித்துள்ளார்.

இதனை அரசாங்கம் அனுமதிக்குமாயின் பாரதூரமான விளைவுகள் ஏற்படலாம் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

இந்த விடயம் குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதாவது;

"பொது பல சேனா அமைப்பு எதிர்வரும் ஒன்பதாம் திகதி கல்முனையில் பிரசாரக் கூட்டமொன்றை நடத்தவிருப்பதாக இணையத்தளங்களில் தகவல்கள் வெளிவந்துள்ளன. இது உண்மையாக இருக்குமாயின் அக்கூட்டத்தை தடுத்து நிறுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும்.

முஸ்லிம்களுக்கு எதிராக விசமத்தனமான பிரச்சாரங்களை மேற்கொண்டு ஹலால் தொடக்கம் ஹபாயா வரை முஸ்லிம்களின் புனித மார்க்க விடயங்கள் அனைத்திலும் கைவைத்து அவர்களின் வர்த்தக நடவடிக்கைகளையும் சீர்குலைத்து முஸ்லிம் மக்களை நெருக்கடிக்குள் தள்ளி விட்டுள்ள பொது பல சேனா அமைப்பினர் இந்த நாட்டில் சிங்கள- முஸ்லிம் கலவரமொன்றை ஏற்படுத்துவதற்கான பிரயத்தனங்களில் ஈடுபட்டுள்ளனர்.

கொழும்பு, கண்டி, குருநாகல் மற்றும் தென்னிலங்கையில் பொது பல சேனா அமைப்பினர் மேற்கொண்டுள்ள அத்தனை அக்கிரமங்களையும் மிகப்பொறுமையுடன் எதிர்கொள்ளும் வகையில் முஸ்லிம்களை அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவும் முஸ்லிம் அரசியல் தலைமைகளும் ஒரு கட்டுக்கோப்புக்குள் வைத்து நெறிப்படுத்தி வருகின்றன.

குறிப்பாக அரசின் பங்காளிக் கட்சியாகவும் அமைச்சரவையில் அங்கம் வகித்தும் இருக்கின்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் அதன் தலைமைத்துவமும் பேரினவாதிகளின் முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவதற்கும் முஸ்லிம் மக்களை அஹிம்சா வழியில் நெறிப்படுத்துவதற்கும் பலத்த சவால்களுக்கு மத்தியில் காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

இவ்விடயத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமைத்துவம் ஒரு புறம் அரச மட்டத்திலும் பேரின அமைப்பினராலும் கழுகுப் பார்வையுடன் நோக்கப்படுவதுடன் மறுபுறம் முஸ்லிம் சமூகத்திற்குள்ளும் விமர்சனங்களை எதிர்நோக்கி வருகின்றது.

அதேவேளை கிழக்கு மாகாண சபையில் நாம் பொது பல சேனா அமைப்புக்கு எதிராக கண்டனப் பிரேரணையை சமர்ப்பித்து அதனை ஏகமனதாக நிறைவேற்றி அரசின் கவனத்தை ஈர்த்து பேரின நடவடிக்கைகளை கட்டுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினோம்.

அரசாங்கத்தின் பங்காளிக் கட்சி என்பதற்காகவும் அதன் தேசியத் தலைவர் ரவூப் ஹக்கீம் அமைச்சராக பதவி வகித்துக் கொண்டிருக்கிறார் என்பதற்காகவும் முஸ்லிம்களுக்கு எதிரான பேரினவாதிகளின் கொடூர நடவடிக்கைகளை நாம் சும்மா பார்த்துக் கொண்டிருக்கவில்லை. அதனை முஸ்லிம் காங்கிரஸ் போராளிகள் அனுமதிக்கவும் மாட்டார்கள்.

முஸ்லிம்களுக்கு எதிரான பேரினவாத நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதிலும் முஸ்லிம்களை பொறுமை காக்கச் செய்வதிலும் எமது தேசியத் தலைவரான அமைச்சர் ரவூப் ஹக்கீம் தனது உயிரையும் அமைச்சுப் பதவியையும் துச்சமாகக் கருதி அதிகபட்ச முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார்.

இந்நிலையில் முஸ்லிம்களை கலவரத்திற்கு தூண்டும் பேரினவாதிகளின் அத்தனை நடவடிக்கைகளும் தவிடுபொடியாகியுள்ள சூழ்நிலையில் தற்போது முஸ்லிம் சுயாட்சி மாகாணத்தின் முக வெற்றிலையாகவும் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் வர்த்தக கேந்திர நகரமாகவும் திகழ்கின்ற கல்முனையில் களமிறங்கி முஸ்லிம்களின் ஆத்திரத்தைக் கிளறி வன்முறைகளையும் கலவரங்களையும் தூண்டி விடுவதற்கு பொது பல சேனா எத்தனிக்கிறது.

இவ்வாறான ஒரு சதித் திட்டத்துடனேயே பொது பல சேனா அமைப்பினர் கல்முனையில் பொதுக் கூட்டமொன்றை நடத்துவதற்கு முயற்சிப்பதாக கருதுகின்றோம். இதற்கு அரசாங்கம் ஒரு போதும் அனுமதி வழங்கக் கூடாது.

பேரினவாத அமைப்புகளின் இவ்வாறான நடவடிக்கைகளை அரசு தொடர்ந்தும் அனுமதிக்குமாயின் முஸ்லிம்களின் அதிகபட்ச ஆணையைப் பெற்று கிழக்கு மாகாண ஆட்சிக்கு ஆதரவு கொடுத்துள்ள எமது முஸ்லிம் காங்கிரஸ் மாற்றுத் தீர்மானங்களை எடுக்க நேரிடும் என்கின்ற செய்தியை மாகாண சபையின் குழுத் தலைவர் என்ற ரீதியில் சொல்லி வைக்க விரும்புகின்றேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
Disqus Comments