Wednesday, June 5, 2013

சூதாட்டத்தில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்ட மொஹமட் அஷ்ரப்புல் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோரினார்

பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர் மொஹமட் அஷ்ரப்புல் சூதாட்டத்தில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டதையடுத்து அவரை அணியில் இருந்து இடைநிறுத்தியுள்ளது அந்நாட்டு கிரிக்கெட் சபை.

கிரிக்கெட் சூதாட்டம் விவகாரம் தொடர்பாக பங்களாதேஷ் கிரிக்கெட் சபைக் கூட்டம் டாக்காவில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அப்போது அதன் தலைவர் நஜ்முல் ஹசன் செய்தியாளர்களிடம் கூறியது:

கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதை ஐசிசி ஊழல் தடுப்பு பிரிவினரிடம் அஷ்ரஃபுல் ஒப்புக்கொண்டுள்ளார். எனவே ஐசிசியின் முழுமையான விசாரணை அறிக்கை வரும் வரை எந்தவித கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாட அவர் அனுமதிக்கப்படமாட்டார்.

கிரிக்கெட் சூதாட்டம் விவகாரம் தொடர்பாக அஷ்ரஃபுலிடம் பேசினேன். ஐசிசி ஊழல் தடுப்பு பிரிவினரிடம் தான் செய்த தவறுகளை ஒப்புக்கொண்டதாக என்னிடம் தெரிவித்தார். அதேநேரத்தில் அதுதொடர்பான முழு விவரத்தையும் அஷ்ரஃபுல் என்னிடம் தெரிவிக்கவில்லை என்றார்.

2ஆவது பங்களாதேஷ் பிரிமியர் லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டி கடந்த ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாக்கா கிளாடியேட்டர்ஸ் அணிக்காக விளையாடிய பங்களாதேஷ் அணியின் முன்னாள் அணித் தலைவர் மொஹமட் அஷ்ரப்புல் , இரு முறை கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

அதன்படி பிப்ரவரி 2ஆம் திகதி நடைபெற்ற கிளாடியேட்டர்ஸ்- சிட்டகாங் கிங்ஸ் அணிகள் இடையிலான ஆட்டத்தில் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபடுவதற்கு அவருக்கு ரூ.7 இலட்சத்துக்கான காசோலை வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த காசோலை பணம் இல்லாமல் திரும்பி வந்ததாகவும் பங்களாதேஷ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதன்பிறகு 10 நாட்கள் கழித்து நடைபெற்ற பரிசால் பர்னர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கிளாடியேட்டர்ஸ் அணி தோற்றது. இந்த ஆட்டத்தில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

ஐபிஎல் ஸ்பாட் ஃபிக்ஸிங் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், தற்போது பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர் அஷ்ரஃபுல், கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பங்களாதேஷ் அணியின் முன்னாள் அணித் தலைவரான மொஹமட் அஷ்ரப்புல் , 2001ஆம் ஆண்டு தனது 17ஆவது வயதில் டெஸ்ட் போட்டியில் சதமடித்தார். இதன்மூலம் டெஸ்ட் போட்டியில் சதமடித்த இளம் பங்களாதேஷ் வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார்.

இதன்பிறகு தொடர்ந்து சிறப்பாக விளையாடிய அவர், 2007ஆம் ஆண்டு பங்களாதேஷ் அணியின் தலைவராக உயர்ந்தார்.

2009ஆம் ஆண்டு வரை அந்த அணியின் தலைவராக இருந்த அஷ்ரஃபுல், தற்போது கிரிக்கெட் சூதாட்ட விவகாரத்தில் சிக்கியிருப்பதால் அவரின் கிரிக்கெட் வாழ்க்கை சற்றேறக்குறைய முடிவுக்கு வந்துள்ளது.

நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோரினார் அஷ்ரஃபுல்

கிரிக்கெட் சூதாட்ட விவகாரத்தில் தனது தவறை ஒப்புக்கொண்டுள்ள அஷ்ரஃபுல், அதற்காக தனது நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.

இது தொடர்பாக தனது வீட்டில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் மேலும் கூறுகையில், "நாட்டுக்கு எதிராக நான் செய்த குற்றத்துக்காக நாட்டு மக்களாகிய நீங்கள் அனைவரும் என்னை மன்னித்துவிடுங்கள் என்று மட்டுமே இப்போது நான் கேட்க முடியும்' என்றார்.
 
Disqus Comments