Tuesday, August 20, 2013

எதிர்வரும் மாகாண சபைத் தோ்தலுக்கு முன் முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்தில் இருந்து வெளியேற வாய்ப்பு

மாகாண சபைத் தேர்தல் முடியும் முன்னர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்தில் இருந்து வெளியேற வாய்ப்பிருப்பதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிப்பதாக சிலோன் டுடே ஆங்கிலப் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.

முஸ்லிம் வாக்காளர்களிடம் இருந்து கொடுக்கப்படும் அழுத்தங்கள் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்தின் கைபாவையாக மாறி விட்டது என்று முஸ்லிம் மக்கள் சுமத்தி வரும் குற்றச்சாட்டுமே இந்த நிலைமை ஏற்பட காரணமாக அமைந்துள்ளது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் சபீக் ரஜாப்தீன் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளார். முஸ்லிம் காங்கிரஸை அரசாங்கத்தில் இருந்து வெளியேற்றும் சூட்சுமான சூழ்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என தெரிவித்துள்ள அவர்,  அரசாங்கம் தமது கட்சியின் கழுத்தை அறுக்க தயாராகி வருகின்றது என்றால் தொடர்ந்தும் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படும் இயலுமை தமது கட்சிக்கு இல்லை என குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்தின் கூட்டணி கட்சிகளில் ஒன்றான ஜாதிக லெ உறுமய,  பொதுபல சேனா என்பன இனவாதத்தை தூண்டி,  முஸ்லிம் காங்கிரஸை அரசாங்கத்தில் இருந்து வெளியேற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன. முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளர் பஷீர் சேகுதாவூதை பயன்படுத்தி கட்சியில் பிளவை ஏற்படுத்த அரசாங்கம் முயற்சித்து வருகிறது. இதற்கு எந்த
சந்தர்ப்பத்திலும் இடமளிக்கப்பட மாட்டாது.

தற்போது 14 பள்ளிவாசல்கள் உடைக்கப்பட்டுள்ளன.  இது தொடர்பாக அரசாங்கம் இதுவரை எந்த நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.  இதனால் மக்கள் முஸ்லிம் காங்கிரஸிடம் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

கிராண்ட்பாஸ் பள்ளிவாசல் சம்பவம் தொடர்பாக அரசாங்கம் இதுவரை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸூடன் எந்தவிதமான பேச்சுவார்த்தைகளையும் நடத்தவில்லை.  அத்துடன் இந்த அடிப்படைவாதத்தை கண்டிக்கவும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவித்துள்ளார்.

மாகாண சபைத் தேர்தலில் அரசாங்கத்துடன் இணைந்து போட்டியிடுமாறு ஜனாதிபதியும், அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களும் விடுத்த கோரிக்கைக்கு முஸ்லிம் காங்கிரஸ் தலைமை இணங்கவில்லை என்பதால் அரசாங்கத்தின் தலைவர்கள் இடையில் அதிருப்தி ஏற்பட காரணமாக அமைந்துள்ளது.

அதேவேளை தேர்தலுக்கு பின்னர் அமைச்சர் ஹக்கீமின் அமைச்சு பதவியில் மாற்றங்கள் செய்யப்படும் என அரசியல் தகவல்கள் தெரிவித்திருந்தன.  எனினும் அரசாங்கத்தில் இருந்து தம்மை விலக்கும் வரை அதில் இருந்து விலக போவதில்லை என ஹக்கீம், ஜனாதிபதியிடம் கூறியிருந்தாகவும்
தெரிவிக்கப்படுகிறது.

Disqus Comments