Tuesday, August 20, 2013

ஷவ்வால் பிறை விவகாரத்தால் சமூகம் பிளவு படவில்லை மாறாக ஒரு தெளிவையே வேண்டி நிற்கின்றது.!

(மஸிஹுத்தீன் இனமுல்லாஹ்)  ஷவ்வால் மாத தலைப்பிறை தொடர்பாகவும் நோன்புப் பெருநாள் தொடர்பாகவும் எழுந்துள்ள சர்ச்சைகள் விமர்சனங்கள் துரதிட்டமானதும் கவலைக்கிடமானதுமாகும், என்றாலும் இஸ்லாமிய வரலாற்றில் இது ஒன்றும் புதிய விடயமும் அல்ல என்பதனையும் நாம் கவனத்தில் கொண்டு ஓரளவு ஆறுதல் அடையவும் இடமிருக்கின்றது.

பிறை விவகாரம்  ரஸூலுல்லாஹ் (ஸல்) அவர்களது காலம் முதல் இன்றுவரை முஸ்லிம்களது வரலாற்றில் முடிவு காணப்படாத விடயமாக தொடர்ந்து கொண்டிருக்கின்றது.

சர்வதேசப் பிறை, உள்நாட்டுப் பிறை, சவூதிப் பிறை, பிராந்தியப் பிறை, வெற்றுக் கண்ணால் பார்த்தல், வானியல் தொழில் நுட்பத்தினால் பார்த்தல், நுஜூம் சாஸ்திரத்தில் பார்த்தல் என பல்வேறு நிலைப்பாடுகள் உலகில் இருக்கின்றன. இன்ஷா அல்லாஹ் இதில்  பல நிலைப்பாடுகள் சூர் ஊதப்பட்டு சூரிய குடும்பம் சுக்கு நூறாகும் வரை தொடரும் என்பதில் சந்தேகமில்லை.

ஒரு சந்திரனை உலகிற்கு நாள் காட்டியாக படைத்த இறைவன் அடுத்த நாள் பிறையை அதற்கு முந்திய நாள் மலையிலேயே கணித்துக் கொள்ளுமாறு கூறி சுமார்  பத்து மணித்தியால கால இடை வெளியை வைத்திருந்தும் இந்த விவகாரம் முடிவுக்கு வராமலிருப்பது வியப்பாகவே இருக்கின்றது. இவ்வளவுக்கும நவீன உலகின் விஞ்ஞான வளர்ச்சிக்கு வித்திட்டவர்கள் நாங்கள் என்ற பெருமையில் எங்களிடம் கருத்து வேறுபாடுகள் கிடையாது.

இந்த பிறை பற்றிய ஆய்வை ஒரு புறம் வைத்து விட்டு தற்பொழுது கையிலுள்ள விவகாரம் குறித்து கருத்து தெரிவிப்பதாயின் இரு தரப்பினரும் தத்தமது நிலைப்பாடுகளில் இருந்து நியாயங்களையும் வாதப் பிரதி வாதங்களையும் முன்வைகின்றமை, அறிக்கைகளை  விடுகின்றமை சமூகத்தை பிளவில் என்பதனை விடகுழப்பத்தில் ஆழ்த்தி இருக்கின்றது.

பெரிய பள்ளிவாயலில் கூடுகின்ற பிறைக் குழுவில் வானியல் நிபுனர்கள், உலமாக்கள், முஸ்லிம் திணைக்கள அதிகாரிகள் என பல தரப்பினரும் இருக்கின்றனர், கடந்த சில வருடங்களுக்கு முன்னர் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா பிறைக்குழு ஒன்றையும் நாடளாவிய பிரதிநிதிகளையும்
நியமித்து உள் நாட்டில் பிறை காணுதல் தொடர்பாக இணைக்கப் பாட்டிற்கு வந்துள்ள வரை முறைகளையும் வகுத்துக் கொண்டிருந்தது.

உண்மையில் இரு தரப்பு நியாயங்களையும் கேட்டறிந்த பொழுது இந்தக் குளறுபடிகளுக்கு காராணம் அகில இலங்கை ஜம்மியாய்துல் உலமாவின் கிண்ணிய கிளையின் தலைவர் யாரு, பிராந்திய  பிறைக்குழு உறுப்பினர்கள் யாவர், என்பதில் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவிற்கு இறுதிக்கட்ட சந்தேகங்கள்எழுத்துள்ளமை தெரிய வருகிறது, அதேவேளை ஜம்மியாய்துல் உலமாவின் பிரதிநிதிகளாக சென்ற இரு மேமன் சமூகத்தினர் மேற்கொண்ட தொடர்பாடல்கள் கேள்விக்கு உற்படுத்தப் பட்டிருக்கின்றன.

இவ்வாறான ஒரு நிலையில் இந்த நாட்டில் இந்த முறை உள்நாட்டு வெற்றுக் கண் பிறை பார்ப்பில் இரண்டு வகையான இஜ்திஹாதுகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன. இந்த நிலைப்பாடுகளை  சமரசத்துக்கு ஒரு பொழுதும் கொண்டுவர முடியாது. ஆனால் எதிர் வரும் காலங்களில் இந்த  குளறுபடிகளை எவ்வாறு தவிர்த்துக் கொள்ளலாம் என்பது பற்றியே நாம் கவனம் செலுத்த வேண்டும்.

இவ்வாறான ஒரு மயக்கமான நிலையில் மேற்கொள்ளப் பட்ட இஜ்திஹாதுகளின்  அடிப்படையில்  30 முப்பது நோன்பை பூர்த்தி செய்தவர்கள் தவறிழைத்து விட்டதாக மார்க்கத் தீர்ப்பு வழங்குவதோ, அல்லது 29 இருபத்தி ஒன்பது நோன்பு நோற்றவர்கள் தவறிழைத்து விட்டதாகவும் ஒரு நோன்பை களா செய்தல் வேண்டும் என்று பத்வாக் கொடுப்பதும் தவறானதாகும். மாறாக நோற்ற நோன்புகள் 28 ஆயின் ஒன்றைக் களா செய்து கொள்ள வேண்டும்.

கொழும்பு பெரிய பள்ளிவாயலில் கூடிய உலமாக்கள், முஸ்லிம் திணைக்கள அதிகாரிகள், வானியல் நிபுனர்கள் எடுத்த இறுதி தீர்மானத்தின் படி 30 நோன்பை பூர்த்தி செய்தவர்களது நோன்பும் தாம் நம்புகின்ற தலைமைக்குக் கட்டுப்பட்டு பெருநாள் கொண்டாடியமையும் ஒருபோதும் தவறாக மாட்டது.

அதேபோல் மேற்படி குழுவினர் மேற்கொண்ட தீர்ப்பினை மற்றும் தாம் தலைமை வகிக்கும் நிறுவனத்தின் நிலைப்பாட்டை அடிப்படையாக வைத்து ஊடகங்களுக்கு அஷ் ஷெய்க் ரிஸ்வி முப்தி அவர்கள் வழங்கியுள்ள பெரும்பாலான கருத்துக்களும் நியாயமானவையே.

அகில இலங்கை ஜம்மியாய்துல் உலமாவும் அதன் தலைமையும் பல்வேறு குறை நிறைகளுக்கு மத்தியிலும் இந்த நாட்டு முஸ்லிம்களுக்கு வரலாறு நெடுகிலும் பல்வ்பேறு துறைகளிலும்  மகத்தான சேவைகளை வழங்கி வருவதனை கருத்தில் கொண்டு முஸ்லிம் சமூகம் தற்பொழுது எதிர் கொண்டுள்ள சவால்களுக்கு மத்தியில்ஊடகங்களில்  அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவையோ அதன் தலைவர் அஷ்-ஷெய்க் ரிஸ்வி முப்தி அவர்களையோ விமர்சனத்திற்கு உள்ளாக்குவதனை நான் தனிப்பட்ட  முறையில் விரும்பவில்லை.

இன்ஷா அல்லாஹ்  புனித ரமழான் கற்றுத் தந்த உயரிய இஸ்லாமிய ஒழுக்கவியல் பண்புகளை பேணி மிகவும் கண்ணியமாகவும், பண்பாடாகவும் அழகிய சொற் பிரயோகங்களுடன், கனிவான கருத்துப் பரிமாறல்களுடன் எமது முரண்பாடுகளை நாம் இயன்றவரை பெரும் தன்மையோடு கையாள பழகிக் கொள்ள வேண்டும்.

அல்லாஹ்வுக்காக அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவும், கிண்ணியா ஜம்மியத்துல் உலமாவும் மேற்படி இரு தரப்பிற்கும் சார்பானவர்களும் எதிரானவர்களும் உடனடியாக ஊடக அறிக்கைப் போட்ட போட்டியை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் அங்கமான கிண்ணிய ஜம்மியாயதுள் உலமா மீது சுமத்தப் படுகின்ற குற்றச் சாட்டுக்களுக்கு பதில் அளிக்கும் உரிமையும் அவற்றை அறிந்து கொள்ளும் உரிமை மக்களுக்கும் இருப்பதனை எவரும் மறுக்கவும் முடியாது.

இந்த முறை உள்நாட்டில் வெற்றுக் கண்ணால் பிறை பார்க்கும் விவகாரத்தில் ஏற்பட்ட கவலைக்குரிய துரத்திட்ட வசமான குளறுபடியினை குறிப்பிட்ட ஒரு சர்வதேச பிறைக் குழுவினர் மிகவும் மட்ட ரகமான, வழமையான தமது அநாகரீகமான வசைபாடல்களின் மூலம் பூதாகரமாக்கி சமூக ஊடகங்களில் சமூகத்தை சந்தி சிரிக்க வைத்துக் கொண்டிருப்பது மிகவும் பொறுப்பற்ற செயலாகும்.

ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்ற மனப் பாங்கில் அவ்வப்போது முஸ்லிம்கள் மத்தியில் பிரச்சினைகள் தோன்றும் பொழுது ஆவேசமாகவும் அட்டகாசமாகவும் ஆரவாரமாகவும் மாற்றுக் கருத்துள்ளவர்விவகாரங்களிலும் மூக்கை நுழைத்து “சேவல் கூவியதால் பொழுது விடிந்தது” அல்லது “நாய் குறைத்ததால் நிலா மறைந்தது” என உரிமை கோர எத்தனிக்கும் ஒரு கூட்டம் கொக்கரிக்கவும் குறைக்கவும் வழி பார்த்துக் கொண்டிருக்கின்றது. இவர்கள் தான் பிரிவினைகளை   விதைப்பார்களேயன்றி அகில இலங்கைஜம்மியத்துல்உலமாவோ கிண்ணியா
ஜம்மியத்துல் உலமாவோ அல்ல.

கௌரவப் பிரச்சினைகளுக்கு அப்பால் சம்பந்தப் பட்ட தரப்புக்கள் கொழும்பில் கூடி இனி எதிர்காலத்தில் உள் நாட்டில் பிறை காணும் விவகாரத்தை இன்னும் சிறப்பாக எவ்வாறு கையாளமுடியும் என்பதனை ஆராய்வதில்கவனம் செலுத்தல் வெண்டும்.

குறிப்பாக விஞ்ஞான பூர்வமான வானியல் விளக்கங்களை மாத்திரமன்றி இலங்கை வானியல் ஆய்வு நிலையத்தின் பங்களிப்பை எந்த அளவுக்கு இந்த விவகாரத்தில் பெற்றுக் கொள்ள முடியும் என்பதனையும் எமது தலைமைகள் கவனத்திற் கொள்ள வேண்டும்.

இன்ஷா அல்லாஹ், எதிர்வரும் காலங்களில் மாவட்ட ரீதியிலான பிறைக் குழுக்களையும் நியமனம் செய்வதோடு பிறை பார்ப்பதற்கு குறைந்தது ஒரு வாரத்திற்கு முன்பாகவேனும் அவர்களது தொடர்பு இலக்கங்களை அவர்கள் கூடும் இடங்களை மக்களுக்கு பகிரங்கப் படுத்தல் சிறந்தது என அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவிடம் பணிவுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.

*ஷவ்வால் தலைப்பிறையால் விமர்சனங்களுக்கு ஆளாகும் இஸ்லாமிய தலைமைகள்..!*

ஷவ்வால் தலைப்பிறை தொடர்பாக அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் பிறைக்குழு பெரியபள்ளி நிர்வாகம்,மற்றும் முஸ்லிம் திணைக்களம் ஆகியவற்றின் தீர்வினை தேசத்தின் முன்வைத்தமைக்காக ஜம்மியாஹ்வின் தலைவர் அஷ் ஷெய்க் ரிஸ்வி முப்தி அவர்கள் காரசாரமான விமரிசனங்களுக்கு ஆளாவதும்

அதே ஷவ்வால் தலைப்பிறை சர்ச்சை குறித்து தனது தனிப்பட்ட (நிறுவனத்தின் அல்ல) மாற்றுக் கருத்துக்களை இலங்கை ஜமாத்தே இஸ்லாமி அமைப்பின் அமீர் உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர் அவர்கள் முன்வைத்தமையால் இலங்கை ஜமாத்தே இஸ்லாமி விமர்சனங்களுக்கு ஆளாவதும்…

*கவலை தருகிறது…*

விமர்சனங்கள் அமானிதங்கள்… சமூகத்தின் மற்றும் தேசத்தின் நன்மை கருதி முரண்பாடான சிந்தனைகளும் அணுகுமுறைகளும் ஆக்கபூர்வமான கருத்தாடல்களுக்கு உற்படுவதில் தவறு இருப்பதாக நான் கருதவில்லை.

ஆக்கபூர்வமான அவ்வாறான விமர்சனங்கள் யாவும் எமது சமூக நிறுவனங்களை மற்றும் தலைமைகளைமென்மேலும் பலப்படுத்தவும் எதிர்காலத்தில் தெளிவான நிலைப்பாடுகளையும்  ஒருமைப்பாட்டையும் நோக்கி எம்மை நகர்த்தவும் மாத்திரமே உதவ வேண்டும் இன்ஷா அல்லாஹ்.
Disqus Comments