Friday, October 11, 2013

அதிபரை வெட்டிக் கொலை செய்த 3 தூத்துக்குடி மாணவா்கள். (படம்)

தூத்துக்குடியில் பொறியியல் கல்லூரி முதல்வரை வெட்டிக் கொலை செய்த 3 மாணவர்களை போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்டம் வல்லநாட்டில் உள்ளது இன்ஃபன்ட் ஜீசஸ் பொறியியல் கல்லூரி. இந்த கல்லூரியின் முதல்வராக நெல்லை மாவட்டம் சுரண்டையைச் சேர்ந்த சுரேஷ் குமார்(55) என்பவர் பணியாற்றி வந்தார்.

இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு பாளையங்கோட்டையில் இருந்து கல்லூரி பேருந்தில் கல்லூரிக்கு வந்த மாணவர்களில் சிலர், மாணவியரை கேலி செய்த காரணத்திற்காக 3 மாணவர்களை சஸ்பெண்ட் செய்தார். 

இதனால் ஆத்திரம் அடைந்த மாணவர்கள் 3 பேரும் இன்று காலை கல்லூரி வளாகத்தில் வைத்து சுரேஷ் குமாரை அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் படுகாயம் அடைந்த சுரேஷ் குமார் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். 

இதனையடுத்து கொலையாளிகளான மாணவர்கள் டேனிஸ், பிச்சைக்கண்ணு, பிரபாகரன் ஆகிய மூவரை முறப்பநாடு போலீசார் கைது செய்தனர். டேனிஸ் சிவகங்கை இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்தவர். பிச்சைக்கண்ணு தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகேயுள்ள வெள்ளரிக்காய்யூரணியை சேர்ந்தவர். பிரபாகரன் நாகப்பட்டிணத்தை சேர்ந்தவர்.

புதுக்கோட்டை காவல் நிலையத்தில் சிறை வைக்கப்பட்டிருந்த மாணவர்களிடம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் துரை விசாரணை நடத்தினார். விசாரணையில் மாணவிகளை நாங்கள் கேலி செய்யாத நிலையில் எங்கள் 3 பேரையும் முதல்வர் சுரேஷ் குமார் சஸ்பெண்ட் செய்தார். அத்துடன் எங்களை தரக்குறைவாகவும் பேசினார். அடிக்கடி எங்களிடம் அபராதம் விதித்து பணம் வசூலிக்கவும் காரணமாக இருந்தார். இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தினாலேயே அவரை வெட்டிக் கொலை செய்தோம் என்று கூறியுள்ளனர். 

சஸ்பெண்ட் செய்த காரணத்திற்காக கல்லூரி முதல்வரை கல்லூரி மாணவர்களே வெட்டிக்கொலை செய்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் பள்ளி மாணவர் ஒருவர் ஆசிரியையை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவத்தின் தொடர்ச்சியாக கல்லூரி முதல்வரை மாணவர்களே வெட்டிக்கொலை செய்துள்ளது கல்வியாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

Disqus Comments