Thursday, October 10, 2013

விருதோடை என்று பெயர் வந்தது எப்படி? ஆதாரப் படங்கள் இணைப்பு

உலகில் இருக்கின்ற எந்த நாடாக அல்லது கிராமமாக இருப்பினும் அதற்கான பெயர் வந்தது எவ்வாறு என்ற ஒரு வரலாற்றைக் கொண்டிருப்பதைக் காண்கின்றோம் அந்த வகையில் புத்தளம் மாவட்டம், முந்தல் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 601ம் இலக்க கிராம சேவகர் பிரிவான விருதோடைக் கிராமத்திற்கு பெயர் வந்தது எப்படி என்று வரலாற்று ஆதாரங்களுடன் ஆராய்வதே இந்த பதிவின் நோக்கமாகும். 

அந்த வகையில் விருதோடைக் கிராமமானது இற்றைக்கு 500 வருடங்களுக்கு மேற்பட்ட வரலாற்றைக் கொண்ட கிராமமாக இருப்பதை வரலாற்று ரீதியாக அறிந்து கொள்ள முடியும்.

பண்டைய கால அரசர்கள் தனது பரிவாரங்களுடன் தனது ஆளுகைக்கு உட்பட்ட இடங்களை சுற்றித் பார்ப்பது வழக்கம். அந்த வகையில் கண்டி இராச்சியத்தை ஆட்சி செய்த மன்னர்களில் 8வது மன்னனான வீரபராக்கிரம நரேந்திர சிங்கன் (1707-1739) தனது ஆட்சிக்குட்பட்ட பகுதியை சுற்றி வரும் போது புத்தளம் மாவட்டத்தின் சில இடங்களுக்கு விஜயம் செய்தான். 

1720ம் ஆண்டு ஜுன் மாதம் 4ம் திகதி விஜயம் செய்த மன்னன் புத்தளம் பெரிய பள்ளி உட்பட இன்னும் பல இடங்களுக்கும் முக்கியத்துவம் வாய்ந்த தரிசிப்பை மேற்கொண்டான். அந்த விஜயத்தின் போது தான் தற்போதைய விருதோடைக் கிராமத்திற்கும் வருகை தந்தான்.

 அக்கரைப்பத்து பகுதியில் எங்கும் இல்லாத மன்னர்களுக்கு விருப்பமான குளம் விருதோடையில் அமைந்திருந்தமையே இதற்குக் முக்கிய காரணமாகும். இங்கு வருகை தந்த மன்னன் விருதோடைக் குளத்தில் நீராடி மகிழ்ந்ததோடு எமது முன்னோர்களான விருதோடை மக்கள் மன்னனை வெகு விமரிசையாக வரவேற்றனர். வரவேற்பின் போது தாங்களுக்குத் தெரிந்த வீர, தீர சாகசங்களை மன்னனுக்கு செய்து காண்பித்தனர். அதில் சீனடி, சிலம்பாட்டம், களிகம்பு போன்றவை காணப்பட்டன. மக்களின் வரவேற்பில் மகிழ்ந்த மன்னன் விருதோடை மண்ணுக்கு பல பரிசில் பொருட்களை அதாவது விருதுகளை வழங்கி வைத்தான். 

அதில் பெரிய குத்துவிளக்கு ஒன்று, இரண்டு துப்பாக்கிகள், ஊதுகுழல், ஆலவட்டம், கூந்தக்குடை, அரச இலட்சினை பதிக்கப்பட்ட கொடி, 7 தலை நாகம் பதிக்கப்பட்ட கொடி ஆகியவை உள்ளடங்கும். மேற்படி விருதுகளை வழங்கிய மன்னன் தனது இந்த விஜயமானது எதிர்கால சந்ததியினர் அறிய வேண்டும் என்பதற்காக இந்த விருதாக கிடைக்கப் பெற்ற பொருட்களை பள்ளிவாயலில் ஒப்படைக்கும் படியும் ஊர்ப் பெரியவர்களுக்கு கட்டளையிட்டான். 

அரசனால் வழங்கப்பட்ட பரிசுப் பொருட்களில் துணியினால் ஆன கொடிகள் காலப் போக்கில் ஊக்கிப் இடமற்றும் போயின. ஆனால் மற்ற பொருட்களில் சில இன்னும் விருதோடை ஜும்ஆப் பள்ளியில் பாதுகாக்கப்படுகின்றன.

ஆக விருதோடை என்ற பதத்திற்கான காரணப்பெயர் அரசனால் விருது வழங்கப்பட்டதனால் ஏற்பட்டதாகும். “விருது பெற்ற ஓடை” என்பதே விருதோடையின் முழுமையான அன்றைய பெயர். ஓடை என்பது விருதோடைக்குளத்தின் முன்னால் அமைந்திருக்கின்ற பகுதியைக் குறிக்கும் சொல்லாகும். அன்றைய காலம் தொட்டு இன்றைய காலம் வரை விவசாயம் செய்யப்படும் நிலமாக விளங்கும் இந்த தாழ்ந்த நிலப்பகுதி மழைநீர் காரணமாக குளம் நிரைந்து நீர் வளிந்து ஓடக்குடிய ஓடையாகும். 

காலம் செல்லச் செல்ல விருது பெற்ற ஓடை என்பது மருவி விருதோடை என்று தோற்றம் பெற்று அந்தப் பெயரே இன்று வரை நிலைத்திருக்கின்றது.

விருதோடை என்னும் போது அது பாரியதொரு நிலப்பரப்பைக் கொண்ட பிரதேசமாக அன்று காணப்பட்டது. இன்றைய புழுதிவயல், பரியாரிதோட்டம், ரெட்பானா, பாலச்சோலை, கச்ச மதுரங்குளிய, சேனைக்குடியிருப்பு, தொங்கல்தோட்டம், மாந்தீவு, கொங்கனிமூலை, பொட்டித்தீவு, எல்லுச்சேனை, நல்லாந்தழுவை, முட்டிபாலக்குளம், தூங்குசேனை, மரைக்காசேனை போன்ற பாரிய பிரதேசமே விருதோடை என்பதாக வழங்கப்பட்டது. அதாவது கிராம சேவகர் பிரிவு 601 என்பதாகும். 

காலச் செல்லச் செல்ல புழுதிவயல், நல்லாந்தழுவை, பாலச்சோலை என்பன மக்கள் தொகை அதிகரிப்பின் காரணமாக தனித்தனி கிராம சேவகர் பிரிவுகளாக உருவாகின. ஆனால் அவை இன்றும் விருதோடைக் கிராம சேவகர் பிரிவின் இலக்கமான 601வுடன் தொடர்புபட்டே காணப்படுகின்றன. 

601A புழுதிவயல்
601B நல்லாந்தழுவை
601C பாலச்சோலை
இதுவே விருதோடைக் கிராமத்தின் பெயர் உருவாவதற்கு காரணமாக இருந்த சம்பவமகும்.
(முஜாஸ் - ரெட்பானா)
குத்துவிளக்கு


அரசனால் வழங்கப்பட்ட இரு கைத் துப்பாக்கிகள்

சிதைவடைந்த ஊது குழலின் ஒரு பகுதி

பூட்டப்படாத குத்து விளக்கு
Disqus Comments