Tuesday, October 1, 2013

வடமேல் மாகாண சபைக்கான வாக்குகளை மீள எண்ணுமாறு ரீட் மனு



வடமேல் மாகாண சபைக்கான வாக்களிப்பை மீள எண்ணுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரீட் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வடமேல் மாகாண சபைக்கான புத்தளம் மாவட்டத்தில் வாக்கெண்ணும்போது பல்வேறுபட்ட முறைக்கேடுகள் இடம்பெற்றுள்ளதாகவும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகையால் அந்த மாகாண சபைக்கான வாக்குகளை மீளவும் எண்ணுமாறு உத்தரவிடுமாறு கோரியே இந்த ரீட் மனு நேற்று திங்கட்கிழமை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஜனசெத முன்னணியின் தலைவர் வண.பத்தரமுல்லே சீலரத்ன தேரரே இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனுவில் தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய,உதவி தேர்தல் ஆணையாளர் ஆர்.எம். ரட்னாயக்க,புத்தளம் மாவட்ட செயலாளர் எம்.கிங்ஸ்லி பெர்ணான்டோ, தேர்தலில் போட்டியிட்ட கட்சிகளின் செயலாளர்கள் ஆகியோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

புத்தளம் மாவட்டத்திற்கான வாக்குகளை மீள எண்ணாவிடின் புத்தளம் மாவட்டத்தில் மறுதேர்தல் நடத்துமாறும் தெரிவு செய்யப்பட்டிருக்கும் உறுப்பினர்களை அதுவரையிலும் நியமனம்செய்யப்படுவதற்கு தடையுத்தரவு பிறப்பிக்குமாறும் தனது மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வாக்குரிமையை பேணுவது என்பது வெறும் வாக்களிப்பதுடன் நின்று விடுவதில்லை என்றும், வாக்குகளை முறையாக எண்ணி நீதியான முடிவுகள் தெரிவிக்கப்படவேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்
Disqus Comments