Friday, May 9, 2014

புகைப்பவர்களின் எண்ணிக்கையை 25 சதவீதமாக குறைப்பதே அரசின் நோக்கம்: மைத்திரிபால

இலங்கையில் கடந்த வருடம் சிகரெட் புகைப்பவர்களின் எண்ணிக்கையில் ஏழு சதவீதம் குறைவடைந்த நிலையில் இவ்வருடம் அதனை 25 சதவீதமாக குறைப்பதே அரசின் நோக்கமென சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
இதேவேளை, புகைத்தல் தொடர்பாக மக்களை அறிவுறுத்தும் நிகழ்வுகள் நாடு பூராகவும் ஏற்பாடு செய்யப்படவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். 
புகைத்தலுக்கு எதிராக இன்று வெள்ளிக்கிழமை(9) இராஜகிரியவில் இடம்பெற்ற ஊர்வலத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
மதுவுக்கு தடை விதிக்கும் மஹிந்த சிந்தனை திட்டத்தை அமுல்படுத்தும் நோக்குடன் 2014 ஆம் ஆண்டை மதுவுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் ஆண்டாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ பிரகடனப்படுத்தியுள்ளார். நமது நாட்டில் சிகரெட் புகைத்தலினால் நாளாந்தம் பெருந்தொகையானவர்கள் உயிரிழக்கின்றனர். எனவே, புகைத்தல் மிகவும் பாரதூரமானது.
இந்நிலையில் புகைத்தலுக்கு எதிராக அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் பெரும் முயற்சி எடுத்து வருகின்றனர். கடந்த வருடம் புகைத்தல் தொடர்பாக மக்களை அறிவுறுத்தும் செயற்பாட்டில் களமிறங்கியிருந்தோம். 
மேற்படி செயற்பாட்டின் பிரதிபலனாக கடந்த வருடம் சிகரெட் புகைப்பவர்களின் எண்ணிக்கை 7 சதவீதமாக குறைந்தது. இதன்பிரகாரம் இவ்வருடம் மக்களை அறிவுறுத்தும் செயற்பாட்டில் களமிறங்கி பாரிய வேலைத்திட்டமொன்றை மேற்கொள்ளவுள்ளோம்.
இவ்வருடம் சிகிரெட் புகைப்பவர்களின் எண்ணிக்கை 25 சதவீதத்தாதல் குறைப்பதே அரசின் பிரதான இலக்காகும். எனவே, அரசின் இலக்கை வெற்றிகரமாக முடிப்பதற்கு பொதுமக்கள் உதவ வேண்டும் என்றார்.
Disqus Comments