இலங்கைத் தமிழ் மக்களின் நலனில் நிச்சயமாக அக்கறையோடு செயற்படுவேன் என பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடி உறுதியளித்ததாக மக்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க பெற்ற வெற்றியைத் தொடர்ந்து, புதுடில்லியில் உள்ள குஜராத் பவனில் அம்மாநில முதல்வரும், பா.ஜ.க பிரதமர் பதவி வேட்பாளருமான நரேந்திர மோடியை நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்தியுள்ளார் வைகோ.
சுமார் 30 நிமிடங்கள் நீடித்த இந்த சந்திப்பின் போது, இலங்கைத் தமிழர் விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியைப் போல செயற்பட வேண்டாம் என்று நரேந்திர மோடியிடம் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.
5 ஆண்டுகளுக்கு முன்பு, இதே மே மாதத்தில் சோனியா காந்தி தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு அளித்த இராணுவ உதவியைக் கொண்டு இலங்கை இராணுவம், இலட்சக்கணக்கான தமிழ் மக்களைப் படுகொலை செய்தது. காங்கிரஸ் தலைமை செய்த அதே தவறை மோடி தலைமையிலான அரசு ஒருபோதும் செய்யக் கூடாது என்று மோடியிடம் வலியுறுத்தினேன் என்று வைகோ கூறியுள்ளார்.
அத்துடன், இலங்கைத் தமிழர்கள் அனைவரும், உங்களது ஆட்சியில் பாதுகாப்புப் பெறுவார்கள் என நம்புகின்றேன் என்றும் மோடியிடம் தான் கூறியதாக வைகோ குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு பதிலளித்த மோடி, 'இலங்கைத் தமிழர் நலனில் நிச்சயமாக அக்கறையோடு செயற்படுவேன்' என்று உறுதியளித்தார் என வைகோ குறிப்பிட்டுள்ளார். (தினமணி)