ஈராக்கிய பிரதமர் நூரி அல் - மலிகி அந்நாட்டு அரசாங்கம்
எதிர்கொண்டுள்ள அரசியல் நெருக்கடியை முடிவுக்கு கொண்டு வரும் வகையில்
பதவி விலகியுள்ளார்.
ஜனாதிபதியால் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள ஹைதர் அல் -
அபாதி அரசாங்கத்தை அமைப்பதற்கு வழிவகை செய்யும் வகையிலேயே அவர் பதவி
விலகியுள்ளார்.
அந்நாட்டு அரசாங்கம் வட ஈராக்கில் முன்னேறி வரும் ஐ.எஸ் போராளிகளால்
பெரும் போராட்டத்தை எதிர்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பாராளுமன்ற பிரதி சபாநாயகர்களில் ஒருவரான அபாதிக்கு அரசாங்கத்தை
அமைப்பதற்கு வழி வகுக்குமாறு மலிகி கடும் அழுத்தத்திற்கு
உள்ளாகியிருந்தார்.
இந்நிலையில் ஈராக்கிய அரசாங்க தொலைக்காட்சியில் அபாதி மற்றும் ஏனைய
ஷியா பெரும்பான்மை கட்சியை சேர்ந்த அரசியல்வாதிகளுடன் தோன்றிய
நூரி மலிகி, தனது பதவி விலகலை அறிவிப்பதற்கு முன் ஈராக் ஐ.எஸ்.
தீவிரவாதிகளிடமிருந்து கடும் அச்சுறுத்தலை
எதிர்கொண்டுள்ளதாக கூறினார்.
''நான் இன்று அரசியல் செயற்கிரமத்தின் இயக்கத்தை இலகுபடுத்தவும்
புதிய அரசாங்கத்தை ஸ்தாபிக்கவும் எனது சகோதரர் கலாநிதி ஹைதர் அல் —
அபாதிக்கு ஆதரவளிக்கவும் பதவி விலகுவதாக அறிவிக்கின்றேன்" என்று
மலிகி தெரிவித்தார்.
பாராளுமன்றத்தின் மிகப் பெரிய கூட்டமைப்பு கட்சி என்ற ரீதியில்
அரசாங்கத்தை அமைப்பதற்கு தனக்கு உரிமை உள்ளதாக அவர் வலியுறுத்தி
வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் மலிகி ஏற்கனவே ஜனாதிபதி புவாத் மஸுமுக்கு எதிராக
செய்யவிருந்த முறைப்பாட்டை கைவிட்டுள்ளதாக மலிகியின் பேச்சாளரான
அலி முஸ்ஸாவி தெரிவித்தார்.
மலிகி ஷியா பெரும்பான்மை இனத்தவர்களுக்கு ஆதரவாக செயற்பட்டு வருவதாக குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருந்தார்.
அவரது இராஜினாமா மூலம் அவரது 8 வருட பதவிக்காலம் முடிவுக்கு கொண்டு
வரப்படுகின்றது.இந்நிலையில் மலிகி பதவி விலகுவதற்கு தீர்மானம்
எடுத்தமை குறித்து அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சூஸன் ரைஸ்
பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
புதிதாக பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள அபாதிக்கு தனது ஆதரவை
வெளிப்படுத்தியுள்ள அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, அபாதி அரசாங்கத்தை
ஒன்றிணைப்பதில் பாரிய சவாலை எதிர்கொண்டுள்ளதாக கூறினார்.
