Monday, September 1, 2014

இலங்கையில் அகதிகள் அந்தஸ்து கோரியுள்ள பாக்., ஆப்கானிஸ்தான் அகதிகள் வழக்கு: இன்று தீர்ப்பு

இலங்கையில் அகதிகள் அந்தஸ்து கோரியுள்ள பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அகதிகள் தொடர்பிலான தீர்ப்பு, மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் இன்று திங்கட்கிழமை 1ஆம் திகதி வழங்கப்படவிருக்கின்றது.

இலங்கையில் அடைக்கலம் கோரியுள்ள பாகிஸ்தானிய பெண்ணான அனீலா இம்ரான் தாக்கல் செய்திருந்த மனுமீதான வாதப்பிரதிவாதங்கள் நிறைவடைந்துள்ளன.

அகதிகளுக்கான ஐ.நா. வின் ஆணையகத்தின் ஆட்சேபங்களையும் பொருட்படுத்தாது பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் புகலிட கோரிக்கையாளர்கள் மீது அரசாங்கம் கடுமையாக நடந்துகொண்டதாகவும் 200 க்கும் மேற்பட்ட பாகிஸ்தானியர்களை நாடு கடத்தியதை தொடர்ந்து இவர், ஒரு வழக்கை தாக்கல் செய்தார்.

பாகிஸ்தானியரை கொண்ட சுமார் 1500 புகலிய கோரிக்கையாளர்கள் தற்போது இலங்கையில் உள்ளனர்.

இவர்களின் உயிர்களுக்கு பாகிஸ்தானில் உயிராபத்து இருந்தது. பாகிஸ்தானில் கிறிஸ்தவர்கள், அஹமடி முஸ்லிம்கள் மற்றும் ஷியா முஸ்லிம்களுக்கு ஆபத்து உள்ளது.

அங்கு சிறுபான்மை இன பெண் பிள்ளைகள் இருவர், காடையர்களினால் அண்மையில் தீ மூட்டப்பட்டனர் என்றும் இம்ரான் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

புகலிடம் கோருவோருக்கு இலங்கை இடம்கொடுப்பதாக ஐ.நா மனித உரிமை பேரவையில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை செய்துள்ளது. சர்வதேச கடப்பாட்டுக்கு அமைய இவர்களுக்கு அடைக்கலம் வழங்குமாறு இலங்கை அரசுக்கு பணிக்குமாறு நீதிமன்றில் அனீலா இம்ரான் கோரியிருந்தார்.

அடைக்கலம் கோருவோருக்கு இடம் அளிப்பதாக இலங்கை, ஐ.நாவுடன் உந்த உடன்படிக்கையிலும் கைச்சாத்திடவில்லை என பிரதி சொலிஸ்ட்டர் ஜெனரல் ஜனக்க சில்வா, நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவந்திருந்தார்.

ஆயினும், தீர்மானங்களை எடுப்பதற்கு முன்னர் கடைப்பிடிக்கவேண்டிய முறைகள் உள்ளன என்றும் அவர் கூறினார்.

புகலிட கோரிக்கையாளர்கள் சிலர் மலேரிய நோய் உள்ளவர்கள். இவர்களுக்கு புகலிடம் வழங்கி சுதந்திரமாக நடமாடவிட்டால் இங்கு ஒழிந்துபோன மலேரியா மீண்டும் பரவும் என்றும் அவர், நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவந்தார்.

வாதப்பிரதிவாதங்களை கேட்டறிந்து கொண்டதன் பின்னரே, இந்த மனுமீதான தீர்ப்பு இன்று திங்கட்கிழமை வழங்கப்படவுள்ளது.

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அகதிகளை நாடுகடத்துவதை உடனடியாக நிறுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம், அதிகாரிகளுக்கு ஓகஸ்ட் 15ஆம் திகதி உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்
Disqus Comments