பாட்னா: பெண்களுக்கு தொடர்ந்து, 'மிஸ்டு கால்' கொடுத்து, தொந்தரவு
செய்பவர்களை சிறையில் அடையுங்கள் என, பீகார் போலீசாருக்கு உத்தரவு
பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
பீகார் மாநிலத்தில், முதல்வர் ஜிதன்ராம் மஞ்சி தலைமையிலான, ஐக்கிய ஜனதா
தளம் ஆட்சி நடக்கிறது. இங்கு, பெண்களுக்கு, 'மிஸ்டு கால்' கொடுத்து, தொல்லை
தரும் போக்கு அதிகரித்து உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து,
அம்மாநில உயர் போலீஸ் அதிகாரி அரவிந்த பாண்டே, அனைத்து மாவட்ட
போலீசாருக்கும் அனுப்பியுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: பெண்களுக்கு,
மொபைல்போன் மூலமாக தொல்லை கொடுப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது
இது, பல சட்டவிரோத செயல்களுக்கு காரணமாக உள்ளது. எனவே, பெண்களுக்கு
தொடர்ந்து, 'மிஸ்டு கால்' கொடுத்தால், அவர்களை அடையாளம் கண்டு, கடுமையான
நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களுக்கு சிறைத் தண்டனை வாங்கித் தர
வேண்டும். ஓரிரு முறை, 'மிஸ்டு கால்' கொடுப்போர் மீது நடவடிக்கை எடுக்க
வேண்டியது இல்லை. கவனக்குறைவு காரணமாக கூட இதுபோன்ற சம்பவங்கள் நிகழலாம்.
இவ்வாறு, அவர், அதில் அறிவுறுத்தியுள்ளார்.
போனுக்கெல்லாம், போரா, பெரும் அக்கப்போராக அல்லவா இருக்கிறது என்று இளசுகள்
புலம்புகின்றனர்.
