ரிஷாட் பதியுதீன் தனது சொந்தக் காரணங்களுக்காகவே அரசாங்கத்தை விட்டு வெளியேறியுள்ளார் என பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
காத்தான்குடி மில்லத் மகளிர் வித்தியாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வாழ்வாதார உபகரணங்களை வழங்கும் வைபவத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள வாழ்வின் எழுச்சி பிரதேச உத்தியோகத்தர் ஏ.எல்.சுல்மி தலைமையில் நடைபெற்ற இந்த வைபவத்தில் தொடர்ந்துரையாற்றிய பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் வேறு எந்த பொது நோக்கங்களுக்காகவும் அவர் அரசாங்கத்தை விட்டு வெளியேறவில்லை. சொந்த நோக்கத்திற்காகவே அவர் அரசை விட்டு வெளியேறியுள்ளார்.
அரசாங்கத்திடமிருந்து முன்னாள் அமைச்சர் அமீர் அலிக்கு பாராளுமன்ற உறுப்பினர் பதவியை கேட்டார். அவருக்கு நாங்கள் பாராளுமன்ற உறுப்பினர் பதவியினை வழங்கினோம்.
ரிஷாதை வன்னிக்கு ஜனாதிபதி தேர்தல் முகவராக நியமிக்குமாறு கோரினார் நாங்கள் அவரை தேர்தல் முகவராக வன்னிக்கு நியமித்தோம்.அமீர் அலியை கல்குடாவுக்கு முகவராக நியமித்தோம். இவைகளை எல்லாம் செய்ததன் பின்னர்தான் கடந்த வாரம் இவர்கள் அரசாங்கத்தை விட்டு வெளியேறினார்கள்.
பொது பல சோன பிரச்சினைக்காக அரசை விட்டு வெளியேறியதாக ரிஷாட் பதியுதீன் கூறுகின்றார். பொது பல சேனாப் பிரச்சினைக்காகத்தான் இவர்கள் அரசை விட்டு வெளியேறினார்கள் என்றால் பொது பல சேனா பிரச்சினை இன்றுள்ள பிரச்சினையா? இரண்டு வருடங்களாக அந்தப் பிரச்சினை நடந்து வருகின்றது.
இரண்டு வருடங்களாக பிரச்சினை இருக்கும் போது ஏன் ஜனாதிபதியிடம் பாராளுமன்ற உறுப்பினர் பதவி கேட்க வேண்டும்.
பாராளுமன்ற உறுப்பினர் பதவி கேட்டு பின்னர் பெற்றுக் கொண்டுதான் அரசாங்கத்தை விட்டு வெளியேறினார்கள்.
பொது பல சேனா பிரச்சினை என்றால் இவர்கள் எப்போதோ அரசாங்கத்தை விட்டு போயிருக்க வேண்டும். அவர்களின் சொந்தப் பிரச்சினைக்காகவே அரசை விட்டு வெளியேறினார்கள் என்பதுதான் உண்மையாகும்.கடந்த 25 வருட அரசியல் வாழ்க்கையில் அனைவரையும் அறிந்து வைத்துள்ளேன்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நிச்சயம் வெற்றி பெறுவார் அவருக்கு இலட்சக்கணக்கான சிங்கள மக்கள் வாக்களிப்பதற்கு ஆயத்தமாக இருக்கின்றனர் நாம் இந்த தேர்தலில் ஜனாதிபதியின் வெற்றியை தீர்மானிப்பவர்களல்ல, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வெற்றியை தீர்மானிப்பவர்கள் சிங்கள மக்கள் என்பதை நாம் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும்.
சிங்கள மக்களின் வாக்குகள் ஒரு கோடிக்கு மேலுள்ளது. அவர்கள் தான் தீர்மானிப்பவர்கள், நமக்கு பிரச்சினை இருந்தால் அவற்றை உரியவர்களுடன் அணுகித்தான் தீர்த்துக் கொள்ள வேண்டும்.
உணர்ச்சிகளுக்கு அடிமைப்பட்டு சமூகத்தை வழிநடாத்த முடியாது. மக்களின் நிலைமையினை பார்த்து சமூகத்தை வழிநடாத்த வேண்டும்.
மைத்திரி வந்தால் நமக்கு பாராளுமன்ற பிரதிநிதித்துவம் கிடைக்காது என்பதை தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும். மைத்திரி வந்தால் மட்டக்களப்பு தொகுதிக்கு பாராளுமன்ற பிரதி நிதித்துவம் கிடைக்காது.
மூக்கில் சளி என்றால் மூக்கை வெட்ட முடியாது. அவ்வாறு வெட்டுகின்றவன் பைத்திய காரன். மூக்கில் சளி என்றால் பொறுமையாக இருந்து மருந்து செய்ய வேண்டும். பொது பல சேனாவின் பிரச்சினை என்றால் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக வாக்களித்து சமூகத்தை அடிமையாக்க முடியாது. நாம் கவனமாக சிந்தித்து நமது வாக்குகளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்க வேண்டுமென மேலும் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ தெரிவித்தார்.
நன்றி தினகரன் 29-12-2014