ஜனாதிபதித் தேர்தல் நடப்பதற்கு இன்னும் இரண்டு வருடங்கள் பூரணமாக இருக்கின்ற நிலையில் அவசர அவசரமாக இதனை நடாத்தி முடிப்பதற்கு மஹிந்த அரசாங்கம் முனைப்புக் காட்டியதற்கு பிரதான காரணம் ஊவா மாகாண சபைத் தேர்தலில் அரசாங்கம் எதிர்பார்த்த வாக்கு வங்கி சரிந்து போனமைதான் என்ற கருத்துக்கு மாற்றுக் கருத்து இருக்காது. எனவே இன்னும் இரண்டு வருடம் என்பது மக்கள் எம்மை முற்றாக தூக்கி எறிந்து விடுவார்கள் என்ற அச்சம் தான் தேர்தல் களத்தில் குதிக்கவைத்துள்ளது.
இந்த நாட்டில் என்னை தோற்கடிக்க யாரும் இல்லை. யார் வரப்போகிறார் எங்கே பார்ப்போம்? என இறுமாப்புடன் கூறிய ஜனாதிபதிக்கு அரசாங்கத்துக்குள்ளே இருந்து ஒருவர் வருவார் என்பதை அவர் ஒருபோதும் எதிர்பார்த்கிருக்கவில்லை. மஹிந்த யுகத்திலிருந்து மைத்திரி புதிய யுகம் நோக்கிப் பாய்வார் என்பதை அரசாங்கமும் அதன் அமைச்சர்களும் பகல் கனவு கூட கண்டிருக்க மாட்டார்கள்.
'வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு' என்பதை மஹிந்த அரசாங்கம் உணர்ந்து கொண்டு சற்று அச்சம் கொண்டுள்ளதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. எப்போதும் நாட்டுப் பற்று, சிங்கள மேலாதிக்கம், பௌத்த நாடு, அரசாங்கத்தை ஆதரிப்பவர்கள் நாட்டுப் பற்றாளர், ஆதரிக்காதவர்கள் நாட்டுப் பற்றற்றவர்கள் என்றும் குறிப்பாக அரசாங்கத்தை விமர்சிப்பவர்கள் நாட்டுப் பற்றற்றவர்கள் என்றும் கூறி வந்த கதையை பௌத்த குருமாரும், சிங்கள கல்வியியலாளர்களும், சிங்கள மிதவாத போக்குடையவர்களும், அரசியல் ஆய்வாளர்களும் நிராகரித்துப் பேசுகின்ற ஒரு சூழ்நிலையில் நாட்டிக்குள் அண்மைக் காலமாக அதிகரித்து வந்த போதைப் பொருள் கடத்தல் சம்பவங்கள் அதற்கான சரியான சட்ட நடவடிக்கை எடுக்காமை, குடும்ப மேலாதிக்கம் என்பவைதான் சிங்கள மக்களின் மனதை வெகுவாக பாதித்துள்ளது என்பதை உணர்ந்தே அவசர தேர்தலுக்கு ஜனாதிபதி சென்றார்.
அதே நேரம் மூன்று தசாப்த கால யுத்தம் முடிவுக்கு வந்தாலும் அபிவிருத்தி பற்றி பேசுகின்ற அரசாங்கம் ஏழை மக்களின், தொழிலாளர்களின் வயிற்றுப் பசியைப் போக்க எவ்வித ஆக்கபூர்வ நடவடிக்கையும் செய்யவில்லை. விஷேடமாக கிராமப்புறங்களில் வாழும் மக்கள் இன்னும் அபிவிருத்தி என்ற நாமத்தை மட்டும்தான் கண்டுள்ளார்கள் அதன் பயனை அவர்கள் அடைந்து கொள்ளவில்லை. இதன் பிரதிபலன் உள்ளூராட்சி மன்றங்களின் பிரதிநிதிகள் அதிகளவில் பொது எதிரணியுடன் சேர்ந்துள்ளதை எடுத்துக்காட்டுகின்றது.
இச் சூழ்நிலையில் சிறுபான்மை சமூகமான தமிழ், முஸ்லிம் மக்கள் தனக்கும் தான் சார்ந்த அரசாங்கத்துக்கும் வாக்களிக்க மாட்டார்கள் என்பது ஜனாதிபதிக்கு தௌ்ளத் தெளிவாக தெரிந்த விடயமாகும். இதனை அவர் நடந்து முடிந்த வடக்கு, கிழக்கு, மேல் மற்றும் ஊவா மாகாண தேர்தல்கள் மூலம் விளங்கிவைத்துள்ளார்கள். இருந்தாலும் தனக்கு சார்பான ஒரு சிலரை வைத்துக் கொண்டு காலத்தை கழித்து வருகின்றார். உண்மையில் தமிழ் முஸ்லிம் மக்கள் இந்த ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவை நிராகரித்து பொது எதிரணி வேட்பாளர் மைத்திரியை ஆதரிப்பதற்கான நியாயமான காரணங்கள் நிறையவே இருக்கின்றன. தமிழ் மக்களைப் பொறுத்த வரை யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ள போதும் தமிழ் மக்களுக்கான நியாயமான அரசியல் தீர்வு இன்னும் எட்டப்படாத நிலையில் உள்ளது. அதே நேரம் வடக்கு, கிழக்கு என்று உருவாக்கப்பட்ட மகாண சபைக்குரிய அதிகாரங்களைக் கூட நடைமுறைப்படுத்த முடியாத இழுபறிநிலையே இற்றை வரை காணப்படுகின்றது. இவை தவிர தமிழ் பிரதேசங்களில் திட்டமிட்ட சிங்கள குடியேற்றம், இராணுவத் தேவைக்காக தமிழ் மக்களின் காணிகள் சுவீகரிக்கப்படுகின்றமை, அபிவிருத்தியில் தமிழ் பிரதேசங்கள் புறக்கணிக்கப்படுகின்றமை போன்ற காரணங்களை அடிக்கிக் கொண்டே செல்லலாம்.
முஸ்லிம்களைப் பொறுத்தவரை அண்மைக்காலமாக முஸ்லிம் சமூகத்தின் மீது கட்டவிழ்து விடப்பட்ட அட்டூழியங்கள்; குறிப்பாக கிறீஸ்மேன் பிரச்சனை மற்றும் பொதுபலசேனாவின் பெயரில் நடந்துவரும் அநியாயத்திற்கும் அக்கிரமத்திற்கும் சரியான நியாயம் கிடைக்காமை, அவர்கள் சட்டத்தின்முன் கொண்டு வரப்படாமை, குறிப்பாக 1915ல் ஏற்படுத்தியது போன்ற ஒரு இனக் கலவரத்தை அளுத்கமையில் வெற்றிகரமாக நடாத்தி முடித்தமை, தொடர்ச்சியான அச்சமான சூழ்நிலையை ஏற்படுத்துகின்றமை, முஸ்லிம்கள் இந்தநாட்டின் சொந்தக்காரர்கள் இல்லை, என்பதுடன் அவர்கள் தீவிரவாதத்தை வளர்க்கின்றார்கள் என்ற குற்றச்சாட்டுக்கு மத்தியில் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றமை, கிழக்கில் தீர்க்கப்படாத காணிப் பிரச்சனை,வடக்கில் முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் இழுத்தடிப்பு போன்ற காரணங்கள் முஸ்லிம்களையும் இத்தேர்தலில் பொது எதிரணியின் பக்கம் திசை திருப்பியுள்ளது.
இச் சூழ் நிலையில் தமிழ், முஸ்லிம் கட்சிகளின் தலைமைகள் மௌனம் சாதித்த போதும் அம்மக்களின் முடிவிற்கு தலைசாய்கின்ற ஒரு நிலையே காணப்படுகின்றது. இதில் தமிழ் மக்களின் சார்பில் அவர்களின் அமோக வரவேற்பை பெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பும், முஸ்லிம்களின் சார்பில் அமோக வரவேற்பை பெற்ற கட்சியான முஸ்லிம் காங்கிரஸூம் நிதானமான, தீர்க்கமான, சாதகமான முடிவை எடுப்பார்கள் என்ற நம்பிக்கை அம்மக்களுக்கு உண்டு. இதனை கட்சித் தலைமைகளும் நன்கு அறிந்து வைத்துள்ளனர் என்ற பதிலை வெகு சீக்கிரதில் மக்கள் கண்டு கொள்வார்கள்.
Thanks.
*கே. கான்*
**-ET-*
*கே. கான்*
**-ET-*