புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள மைத்ரிபால சிறிசேன தனது தேர்தல் விஞ்ஞாபன திட்டத்திற்கமைவான 100 நாட்களில் புதிய இலங்கை எனும் திட்டத்தைச் செயற்படுத்தும் நடவடிக்கைகளை இன்று முதல் ஆரம்பிக்கிறார்.
இதன் முதற் கட்டமாக இன்றைய தினம் 25 பேர் கொண்ட அமைச்சரவை அமையப்பெற இருக்கிறது. ஒரு சில பாராளுமன்ற சவால்கள் எதிர்கொள்ளப்படவிருக்கின்ற போதிலும் இன்றைய தினம் அமைச்சரவை நியமனம் இடம்பெறும் என ஜனாதிபதியின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதனைத் தொடர்ந்து 100 நாள் திட்டத்தின் அடுத்த கட்டமாக நாளைய தினம் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகளின் பங்கேற்புடன் தேசிய ஆலோசனைக் குழுவொன்று அமைக்கப்படுவதோடு எதிர்வரும் 19ம் திகதி பாராளுமன்றம் கூட்டப்படும்.
அதனைத் தொடர்ந்து 21ம் திகதி முதல் அரசியல் அரங்கில் பெருமளவில் எதிர்பார்க்கப்படும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிக்கும் பணிகள் ஆரம்பமாகும்.
இக்கால இடைவெளியில் கள நிலவரங்கள் எத்தகைய மாற்றங்களை சந்திக்கப்போகிறது என அரசியல் மட்டத்திலும் சர்வதேச அரங்கிலும் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது
