ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்யப்பட்ட தினத்திலிருந்து இதுவரையில் 13 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் அடங்கலாக 583 தேர்தல் வன்முறை சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கமான கபே அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் கீர்த்தி தென்னகோன் தெரிவித்தார்.
தேர்தல் வன்முறைகளில் ஈடுபடுவோர் குறித்து பொலிஸ் நிலையங்களில் செய்யப்படும் முறைப்பாடுகளுக்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படுவதில்லை எனவும் இவ்வாறான நிலைமை தொடரும் பட்சத்தில் தேர்தல் தின்ததன்று வன்முறை சம்பவங்கள் மேலும் அதிகரிக்க வாய்ப்புக்கள் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,
தேர்தல் சட்ட மீறல்கள் மற்றும் தேர்தல் வன்முறைகள் குறித்து இதுவரையில் மொத்தமாக 1073 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. அவற்றில் நபர்கள் மீதான தாக்குதல் மற்றும் அச்சுறுத்தல்கள் குறித்து 79 முறைப்பாடுகளும், சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை தொடர்பில் 28 முறைப்பாடுகளும், அரச சொத்துக்கள் துஷ்பிரயோகம் மற்றும் நியமனங்கள் வழங்கல், இடமாற்றங்கள் போன்றவை குறித்து 966 முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளன.
தேர்தல் வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் கைது செய்யப்படுகின்ற போதிலும் அவர்கள் சாதாரண குற்றங்களை இழைத்தவர்கள் போன்று விசாரணை செய்து விரைவில் விடுவிக்கப்படுகின்றனர். இதனால் வன்முறை சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் அச்சமின்றி நடமாடுகின்றனர். இந்த நிலைமை மிகவும் மோசமான வன்முறை சம்பவங்களுக்கு வித்திடுகிறது.
கடந்த ஜனாதிபதித் தேர்தலோடு ஒப்பிடுகையில் இம்முறை பாரியளவிலான அரச சொத்துக்களுக்கு துஷ்பிரயோகம் காணப்படுகின்றது. அத்தோடு சட்டத்தை மதிக்காமல் அச்சமின்றி வன்முறைகளில் ஈடுபடுவதானது சுதந்திரமான தேர்தலுக்கு பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. எனவே, அமைதியை நிலைநாட்டி நியாயமானதும் சுதந்திரமானதுமான தேர்தலை உறுதிப்படுத்துவதற்கான சகல நடவடிக்கைகளையும் எவ்வித பாராபட்சமுமின்றி பொலிஸ் திணைக்களம் மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும் அவர் தெரிவித்தார்.