ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் புதிய அரசாங்கத்தில் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்களின் பாதுகாப்பு குறைக்கப்பட வேண்டுமென பிரதமர் ரணில் விக்ரமசிங்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.
குறிப்பாக, எந்தவொரு அமைச்சருக்கோ பிரதி அமைச்சருக்கோ முப்படையினரின் பாதுகாப்பு வழங்கப்படக் கூடாது என பிரதமர், பாதுகாப்பு தரப்பிற்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.
அமைச்சுப் பாதுகாப்புப் பிரிவின் உத்தியோகத்தர்களே அமைச்சர்களுக்கும் பிரதி அமைச்சர்களுக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டுமெனவும், இந்தப் பாதுகாப்பும் அமைச்சர்களுக்கு வழமையாக வழங்கப்படும் பாதுகாப்பினைப் போன்றே இருக்க வேண்டும் எனவும் கண்டிப்பான தொனியில் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், அமைச்சர்கள், பிரதி அமைச்சர்களுக்கு எவ்வாறான பாதுகாப்பு வழங்குவது என்பது குறித்து ஆராயும் நோக்கில் குழுவொன்றையும் பிரதமர் நியமிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தக் குழுவின் பரிந்துரைகளுக்கு அமைய அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்களுக்கான பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை நிர்ணயிக்கப்பட உள்ளது.
அதேவேளை, அமைச்சர்கள் பிரதி அமைச்சர்கள் வாகனத் தொடரணிகளுடன் பயணம் செய்வதனை தவிர்த்துக்கொள்ளுமாறு பணிப்புரை விடுத்துள்ளார். அமைச்சர்களின் வாகனங்களுக்கு மேலதிகமாக ஒரு டிபென்டர் ரக வாகனமொன்றை பயன்படுத்தினால் போதுமானது என அவர் அறிவுறுத்தியுள்ளார்.
பாதையில் ஏனைய மக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் அமைச்சர்கள் பிரதி அமைச்சர்கள் பயணங்களை செய்யக் கூடாது என பிரதமர் தெரிவித்துள்ளார்.
