Thursday, January 15, 2015

இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பற்றிய ஒரு பார்வை

நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேன வெற்றிபெற்று இலங்கையின் 6ஆவது ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டார்.
புதிதாக தெரிவுசெய்யப்பட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு உலக நாடுகள் பலவற்றிலிருந்து பாராட்டுகளும் வாழ்த்துக்களும் வந்து குவிந்துகொண்டிருக்கின்ற நிலையில், அவரது வாழ்க்கை வரலாறு பற்றி சற்று பின்னோக்கி பார்க்கலாம்.
பொலன்னறுவையில், விவசாயத்தை வாழ்வாதாரமாகக் கொண்ட ஒரு ஏழ்மைக் குடும்பத்தில் பிறந்தவர்தான் மைத்திரிபால சிறிசேன என அழைக்கப்படும், பெலவத்த கமராலகே மைத்திரிபால யாப்பா சிறிசேன ஆவார்.
1951ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 3ஆம் திகதி பிறந்த இவர், தனது ஆரம்பக் கல்வியை லக்சுயான கல்லூரியில் பயின்றார். பின்னர் கண்டி குண்டசாலை விவசாயக் கல்லூரியில் விவசாயப் பாடநெறியைப் பயின்று டிப்ளோமா பட்டம் பெற்றார்.
63 வயதான மைத்திரிபால சிறிசேனவினது மனைவியின் பெயர் ஜயந்தி புஸ்பா குமாரி. இவர்களுக்கு இரண்டு மகள்மாரும் ஒரு மகனும் உள்ளனர்.
தன்னுடைய மாணவர் பருவத்திலேயே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உள்ளூர் இளைஞர் அணி செயற்பாட்டாளராக திகழ்ந்த மைத்திரிபால சிறிசேன, 1970களின் இறுதியில் அந்தக் கட்சியின் தீவிர உள்ளூர் அரசியல் குழுக்களில் அங்கம் வகித்துள்ளதுடன், கிராம சேவை உத்தியோகத்தராகவும் சிறிதுகாலம் பணியாற்றியிருந்தார்.
1971ஆம் ஆண்டு ஏற்பட்ட ஜே.வி.பி புரட்சியின் போது கைது செய்யப்பட்ட இவர், மட்டக்களப்பு சிறையில் அடைக்கப்பட்டார்.
பின்னர் 1978ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து முழுநேர அரசியலில் ஈடுபட்டார்.
1979ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரக் கட்சியின் மாவட்ட செயலாளராகவும் பணியாற்றினார்.
1980இல் ரஷ்யா மாக்சிம் கோர்க்கி கல்விக்கழகத்தில், அரசியல் அறிவியலில் டிப்ளோமா பட்டத்தையும் பெற்றார். அந்த வருடமே, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய மட்ட அமைப்புகளில் முக்கிய பதவிகளையும் வகிக்கத் தொடங்கினார்.
இதில் 1982ஆம் ஆண்டில் அகில இலங்கை இளைஞர் அணித் தலைவராகவும் பின்னர் கட்சியின் பொலிட் பீரோவிலும் உறுப்பினரானார்.
1989ஆம் ஆண்டு, தனது 38ஆவது வயதில் பொலன்னறுவை மாவட்டத்தில் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று, பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார்.
1994ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் பொலன்னறுவை மாவட்டத்தில் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்று நீர்ப்பாசன பிரதி அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
1997இல் இடம்பெற்ற அமைச்சரவை மாற்றத்துடன் மகாவலி அபிவிருத்தி அமைச்சராக நியமனம் பெற்றார். பின்னர் 2001ஆம், ஆண்டு சுதந்திரக் கட்சியின் செயலாளராக நியமிக்கப்பட்டார்.
அத்துடன் அடுத்த மூன்று ஆண்டுகளில் கெபினட் அந்தஸ்துள்ள அமைச்சர் பதவியொன்றுடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் துணைச் செயலாளராகவும் பதவி வகித்தார்.
பின்னர், அடுத்த மூன்று ஆண்டுகளில் கட்சியின் துணைத் தலைவராக நியமனம் பெற்ற இவர், 2004ஆம் ஆண்டில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராக நியமனம் பெற்றார்.
அதன்பின்னர், தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமைக் காலத்திலும் அதே பதவிநிலையில் நீடித்துவந்த மைத்திரிபால, விவசாயத்துறை அமைச்சராக பதவி வகித்தார்.
அதன் பின்னர், விவசாயம் சம்பந்தப்பட்ட அரசாங்கத்தின் பல்வேறு அமைப்புகளுக்கு தலைமை தாங்கிய இவர், 4 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட அமைச்சரவை மாற்றத்திற்கு அமைய சுகாதார அமைச்சராக பதவி ஏற்றார்.
கடந்த ஜனாதிபதி தேர்தலில், யார் பொதுவேட்பாளர் என அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த தருணத்தில் யாரும் சற்றும் எதிர்பாராத விதமாக, 2014 நவம்பர் 21ஆம் திகதியன்று ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கட்சியிலிருந்து விலகி, மேலும் பல கட்சி உறுப்பினர்களுடன் ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான கூட்டணியில் இணைந்து கொண்டார்.
இதனையடுத்து 2015-01-08 அன்று நடைபெற்ற தேர்தலில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைவிட 449,072 வாக்குகள் அதிகமாக பெற்று வெற்றிபெற்றார்.
இதனையடுத்து, 2015ஆம் ஆண்டு ஜனவரி 9ஆம் திகதி, உயர் நீதிமன்ற நீதியரசர் க.ஸ்ரீபவன் முன்னிலையில் இலங்கையின் 6ஆவது ஜனாதிபதியாக பதவியேற்றார்.
Disqus Comments