குரோஷியாவின் ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சியை சேர்ந்த கொலிண்டா கிரபர் - கிராரோவிக் வெற்றி பெற்றுள்ளார்.
குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ள கொலிண்டா குரோஷியாவின் முதலாவது பெண் ஜனாதிபதியாக பதவியேற்கவுள்ளார்.
அவர் மேற்படி தேர்தலில் 50.5 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளார். அவரது போட்டியாளரான பதவி விட்டு விலகிச் செல்லும் ஜனாதிபதி ஐவோ ஜொஸிபோவிக் இந்தத் தேர்தலில் 49.5 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றிருந்தார்.
தோல்வியை ஏற்றுக்கொண்டுள்ள ஜொஸிபோவிக், தேர்தலில் வெற்றி பெற்றுள்ள கொலிண்டாவுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
கொலிண்டாவின் தேர்தலிலான வெற்றியானது குரோஷியாவின் ஆட்சி, மத்திய இடது சாரி கூட்டமைப்பிலிருந்து வலது சாரி கட்சிக்கு மாறுவதற்கான அடையாளமாகவுள்ளது.
மேற்படி தேர்தல் இந்த வருட இறுதியில் நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தல் தொடர்பில் பிரதான கட்சிகளுக்கான முக்கிய பலப்பரீட்சையாக நோக்கப்படுகிறது.
முன்னாள் யூகோஸ்லாவியாவிலிருந்து 1991 ஆம் ஆண்டு குரோஷியா விடுதலை பெறுவதற்கு பங்களிப்புச் செய்த குரோஷிய ஜனநாயக ஒன்றிய கட்சியின் உறுப்பினரான கொலிண்டா (46 வயது), கடந்த காலங்களில் வெளிநாட்டு அமைச்சராகவும் நேட்டோ செயலாளர் நாயகத்தின் உதவியாளராகவும் சேவையாற்றியுள்ளார்.
தேர்தல் வெற்றியையடுத்து தலைநகர் ஸக்ரெப்பில் ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றிய கொலிண்டா, குரோஷியாவை சுபீட்சமும் செல்வமும் அற்ற நாடென எவரும் கூறுவதற்கு அனுமதிக்கப் போவதில்லை என சூளுரைத்துள்ளார். அத்துடன் பொருளாதார நெருக்கடியை களைய மக்கள் அனைவரும் தேசிய மட்டத்தில் ஐக்கியத்துடன் செயற்பட வேண்டும் என அவர் அழைப்பு விடுத்தார்.
சட்ட நிபுணரான ஜொஸிபோவிக் 2010 ஆம் ஆண்டிலிருந்து குரோஷியாவின் ஜனாதிபதியாக பதவி வகித்து வந்தமை குறிப்பிடத்தக்கது.அவரது மத்திய இடது சாரி கூட்டமைப்பு அரசாங்கமானது குரோஷியாவை 6 வருட கால பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்கத் தவறியமையே அவரது தோல்விக்கு காரணமாக கூறப்படுகிறது.
குரோஷியா 2013 ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்தது.
