கடந்த 08.01.2015 அன்று இலங்கையின் ஏழாவது ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்புகள்
நாடளாவிய ரீதியில் 12314 வாக்களிப்பு நிலையங்களில் இடம்பெற்றது.
1 கோடியே , 55 இலட்சத்து 4ஆயிரத்து 490 பேர் வாக்களிப்பதற்கு தகுதிபெற்றிருந்தனர். 2014 ஆம் ஆண்டுக்கான வாக்காளர்
இடாப்பின் பிரகாரம் தேர்தல் நடைபெற்றது.
இந்தத் தேர்தலில் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களின்
சார்பில் 19 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அதில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின்
வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் பொது எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்குமே
கடுமையான போட்டி நிலவியது.
கடந்த நவம்பர் மாதம்
20 ஆம் திகதி ஜனாதிபதி
தேர்தலுக்கான அறிவிப்பு வெளியான பின்னர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான சிறிலங்கா சுதந்திரக்
கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்திலிருந்து வெளியேறி
பொது எதிரணியின் சார்பில் போட்டியிடுவதாக அறிவித்தார்.
அந்த தினத்திலிருந்து இறுதிவரை அரசாங்கத்திலிருந்து 27 பாராளுமன்ற உறுப்பினர்கள்
வெளியேறி பொது எதிரணியின் வேட்பாளருக்கு ஆதரவு வழங்குவதாக அறிவித்தனர்.
அதன்படி பொது வேட்பாளர் மைத்திரிபா சிறிசேன மற்றும் ராஜித சேனாரத்ன,
துமிந்த திசாநாயக்க,
எம்.டி.கே.எஸ். குணவர்தன,
வசந்த சேனாநாயக்க மற்றும்
நவீன் திசாநாயக்க, பைசர் முஸ்தபா, நந்திமித்ர ஏக்கநாயக்க ஆகியோரே மஹிந்த ராஜபக்ஷவின் சுதந்திரக் கட்சியிருந்து வெளியேறியோராவர்.
மேலும் லிபரல் கட்சியின் தலைவர் பேராசிரியர் ரஜீவ விஜேசிங்க
எம்.பி.யும் வெளியேறினார்.
கண்டி மாவட்டத்தின்
பாராளுமன்ற உறுப்பினர் இராஜதுரையும் மலையக மக்கள் முன்னணியின் ராதா கிருஷ்ணன் எம்.பி.
மற்றும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் திகாம்பரம் எம்.பி. ஆகியோரும் அரசாங்கத்தை
விட்டு விலகினர்.
தொடந்து வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாரூக்கும்
அரசாங்கத்தை விட்டு வெளியேறி ஐ.தே.க. வுடன் இணைந்துகொண்டார்.
அத்துடன் ஜாதிக ஹெல உறுமயவின் எம்.பி.க்களான சம்பிக்க ரணவக்க,
அத்துரலியே ரத்ன தேரர்
ஆகிய இருவரும் அரசாங்கத்திலிருந்து விலகினர்.
இதனையடுத்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் எம்.பி.க்களான ரிஷாத்
பதியுதீன் மற்றும் அமீர் அலி ஆகியோரும் மஹிந்தவின் அரசாங்கத்தை விட்டு வெளியேறினர்.
இந்நிலையில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்களான
ரவூப் ஹக்கீம், பஷீர் சேகுதாவூத், ஹஸன் அலி, பைசல் காசிம், ஹரீஸ், முத்தலிப் பாவா பாரூக், அஸ்லம், தௌபீக் ஆகிய 08 எம்.பி.க்களும் மஹிந்தவின் அரசாங்கத்திற்கான தமது ஆதரவை விலக்கிக்
கொண்டு, பொது வேட்பாளர் மைத்திரிபாலவை
ஆதரித்தனர்.
அதே போல் தேர்தல் பிரச்சாரத்தின் இறுதிக் கட்டத்தில் தமிழ் தேசியக்
கூட்டமைப்பும் தனது ஆதரவை பொது வேட்பாளர் மைத்திரிபால சிரிசேன அவர்களுக்கு வழங்குவதாக
அறிவித்தது.
இதனால் 162 ஆக இருந்த அரசாங்கத்தின் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை
135 குறைவடைந்தது. ஆனால்
ஐ.தே.க.விலிருந்து திஸ்ஸ அதநாயக்கவும் ஜனநாயகக் கட்சியிலிருந்து ஜயந்த கெட்டகொடவும்
ஆளும் தரப்பிற்கு தாவியதால் மஹிந்தவின் ஆளும் கூட்டணி எம்.பி.க்களின் எண்ணிக்கை 137 ஆக காணப்படுகின்றது.
இந்நிலையில் இலங்கையில் நடைபெற்று முடிந்த ஏழாவது ஜனாதிபதி தேர்தலில்
புதிய ஜனநாயகக் கட்சியில் போட்டியிட்ட பொது எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன
6217162 வாக்குகளை பெற்று
அமோக வெற்றியீட்டியுள்ளார். அதன்படி இலங்கை ஜனநாயக சோஷலிஷ குடியரசின் ஆறாவது ஜனாதிபதியாக
மைத்திரிபால சிறிசேன நாட்டு மக்களினால் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
பெரும்பான்மை மக்களின் வாக்குகள் இல்லாவிட்டால் ஜனாதிபதித் தேர்தலில்
யாரும் வெற்றி பெற முடியாது என்ற எண்ணத்திலிருந்து பெரும்பான்மை அரசியல்வாதிகள்,
குறிப்பாக முன்னால்
ஜனாதிபதி மஹிந்த மற்றும் அவருடைய கட்சியைச் சேர்ந்தவர்களுக்கு மரண அடியாக முழுக்க முழுக்க
தமிழ் பேசும் இந்து, முஸ்லிம் மக்களின் வாக்குகளினால் இலங்கை வரலாற்றை மாற்றி ஜனாதிபதியாக ஆட்சி அமைத்தார்
பொது வேட்பாளர் மைத்திரிபால சிரிசேன அவர்கள்.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தின் பின்னால் யுத்த வெற்றியை
கூறி அரசியல் நடத்திய மஹிந்த ராஜபக்ஷ, தனது ஜனாதிபதி வாழ்வை நீடித்து கொள்வதற்காக பொது பல சேனாவை உருவாக்கி
அவர்கள் மூலம் முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்களை கட்டவிழ்த்து விட்டதின் மூலமாக
பெரும்பான்மை மக்களுக்கு மத்தியில் சிறுபான்மை பற்றிய இனவாதத்தை உண்டாக்கி அதன் மூலம்
தேர்தலில் வெற்றி பெறலாம் என்று நினைத்தார்.
இன்று அவர் தோற்றுப்
போய் முன்னால் ஜனாதிபதி என்று ஆனதற்கு காரணமே அவர் உருவாக்கிய பொது பல சேனாவின் செயல்பாடுகள்
தான் என்பதில் யாருக்கும் எவ்வித ஐயமும் இல்லை.
நடந்து முடிந்த தேர்தலில் பொது வேட்பாளர் மைத்திரிபால சிரிசேனவின்
வெற்றிக்கான காரணம் “முஸ்லிம் இளைஞர்கள் பேஸ்புக் போன்ற சமூக வலை தளங்களில் செய்த பிரச்சாரமே!,
இந்தத் தேர்தலில் பிரச்சாரம்
செய்வதற்கு நமக்கு போதிய அவகாசம் கிடைக்கவில்லை, பேஸ்புக் பிரச்சாரத்தின் மூலமே நாம் நமது
கருத்துக்களை கொண்டு சேர்த்தோம் அதற்கு முஸ்லிம் இளைஞர்களின் முழுமையான ஒத்துழைப்பே
காரணம்” என்ற முன்னால் எதிர்
கட்சித் தலைவரும் இந்நாள் பிரதமருமான ரனில் விக்கிரமசிங்கவின் கருத்துக்கள் இதற்கு
சான்றாகும்.
புதிய ஜனநாயகக் கட்சியின் சார்பில் அன்னம் சின்னத்தில் போட்டியிட்ட
மைத்திரிபால சிறிசேன மொத்தமாக செல்லுபடியான வாக்குகளில் 51.28 வீதமான வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளார். அவருக்கு எதிராக ஐக்கிய மக்கள்
சுதந்திர முன்னணியின் சார்பில் வெற்றிலை சின்னத்தில் போட்டியிட்ட மஹிந்த ராஜபக்ஷ 5768090 வாக்குகளை பெற்று
தோல்வியடைந்துள்ளார். செல்லுபடியான வாக்குகளில் 47.6 வீதமான வாக்குகளை மஹிந்த ராஜபக்ஷ பெற்றுள்ளார்.
இந்த தேர்தலில் வாக்களிப்பதற்கு 15044490 பேர் தகுதி பெற்றிருந்த
நிலையில் 12264377 வாக்குகளே மொத்தமாக அளிக்கப்பட்டிருந்தன. இது 81.52 வீதமாகும். இவற்றில் 140925 வாக்குகள் நிராகரிக்கப்பட்ட
நிலையில் 12123452 வாக்குகளே செல்லுபடியான வாக்குகளாக கணிக்கப்பட்டன. இது 98.85 வீதமாகும். இதில்
51.28 வீதமான வாக்குகளை
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பெற்றுக்கொண்டுள்ளார்.
தேர்தல் முடிவுகளை 09.01.2015 ம் தேதி மாலை தேர்தல்கள் திணைக்களத்தில்
இடம்பெற்ற எளிய வைபவம் ஒன்றில் தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தேர்தல் முடிவுகளை
அறிவித்ததுடன் புதிய ஜனநாயகக் கட்சியின் சார்பில் அன்னம் சின்னத்தில் போட்டியிட்ட மைத்திரிபால
சிறிசேன நாட்டின் ஆறாவது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்தார்.
நாட்டின் 22 தேர்தல் மாவட்டங்களில் புதிய ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர்
மைத்திரி்பால சிறிசேன 12 மாவட்டங்களிலும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷ
10 மாவட்டங்களிலும் வெற்றிபெற்றுள்ளார்.
அந்தவகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன
- திகாமடுல்ல
- புத்தளம்
- கம்பஹா
- கொழும்பு
- பதுளை
- மட்டக்களப்பு
- யாழ்ப்பாணம்
- கண்டி
- நுவரெலியா
- வன்னி
- பொலன்னறுவை
- திருகோணமலை ஆகிய 12 மாவட்டங்களில் அமோக வெற்றியீட்டியுள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷ
- களுத்துறை
- காலி
- மாத்தறை
- அனுராதபுரம்
- கேகாலை
- இரத்தினபுரி
- அம்பாந்தோட்டை
- மொனராகலை
- குருணாகல்
- மாத்தளை
ஆகிய மாவட்டங்களில் வெற்றியீட்டியுள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திர
முன்னணியின் வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷ சிங்கள மக்கள் செறிந்துவாழும் பகுதிகளில் அதிகளவு
வாக்குகளை பெற்றுள்ள போதிலும் தமிழ் பேசும் முஸ்லிம் இந்து மக்கள் வாழும் வடக்கு கிழக்கு
மாகாணங்கள் மற்றும் தமிழ் முஸ்லிம் மக்கள் செறிந்துவாழும் நாட்டின் மற்ற பகுதிகளில்
மைத்திரிபால சிறிசேன அதிகளவு வாக்குகளை பெற்றுள்ளார்.
உதாரணமாக தென் மாகாணத்தில் மஹிந்த ராஜபக்ஷவின் சொந்த மாவட்டமான
அம்பாந்தோட்டை மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலி தொகுதி தவிர்ந்த காலி மாவட்டத்திலும்
முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கணிசனமான வாக்குகளை பெற்றுள்ளார். அத்துடன் மொனராகலை
மாவட்டம் இரத்தினபுரி மாவட்டம், அனுராதபுரம் கேகாலை, குருணாகல் ஆகியவற்றிலும் மஹிந்த ராஜபக்ஷ அதிகளவு
வாக்குகளை பெற்றுள்ளார்.
மேற்குறிப்பிட்ட பகுதிகளில் மஹிந்த பெற்றுள்ள வாக்குகளுடன் ஒப்பிடுகையில்
சிறிய வித்தியாசத்தில் வாக்குகளை பெற்றுள்ள மைத்திரிபால சிறிசேன வடக்கின் யாழ்ப்பாணம்
மற்றும் கிளிநொச்சி மாவட்டம் மற்றும் கிழக்கு மாகாணத்தின் அம்பாறை, திகாமடுல்ல மற்றும்
மட்டக்களப்பு மாவட்டத்தில் மிக அதிகமான வாக்குகளை பெற்றுள்ளார்.
கண்டி மாவட்டத்தில் முஸ்லிம்கள் செறிந்து வாழும் பல பிரதேசங்களான
ஹரிஸ்பத்துவ தொகுதி உடுநுவர, கம்பளை ஆகிய தொகுதிகளில் மைத்திரிபால சிறிசேன அதிக வாக்குகளை
பெற்றுள்ளார். கொழும்பு மாவட்டத்தில் முஸ்லிம்கள் செறிந்து வாழும் மத்திய கொழும்பு
தொகுதியில் மைத்திரிபால சிறிசேன அமோக வெற்றியீட்டியுள்ளார்.
கொழும்பு மாவட்டத்தில் 725,073 வாக்குகளை மைத்திரிபால சிறிசேன பெற்றுள்ளார்.
மஹிந்த ராஜபக்ஷ 562,614 வாக்குகளையே பெற்றுள்ளார். மேலும் முஸ்லிம்கள் செறிந்துவாழும் காலி மற்றும் நீர்கொழும்பு,
பேருவளை பாணந்துறை
குருணாகல் புத்தளம் மாத்தளை மற்றும் மாவனெல்ல ஆகிய தொகுதிகளில் மைத்திரிபால சிறிசேன
மிக அதிகமான வாக்குகளை பெற்று வெற்றியீட்டியுள்ளார்.
கிழக்கு மாகாணத்தில் திகாமடுல்லை மாவட்டத்தில் சுமார் 112000 வாக்குகளை மேலதிகமாக
பெற்று மைத்திரிபால வெற்றியீட்டியுள்ளார். முஸ்லிம் மற்றும் தமிழ் (இந்து) மக்கள் அதிகமாக
வாழும் கல்முனை, சம்மாந்துறை, பொத்துவில் ஆகிய தொகுதிகளில் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் மைத்திரிபால வெற்றியீட்டியுள்ளார்.
அதேவேளை திகாமடுல்ல மாவட்டததில் சிங்கள மக்கள் செறிந்துவாழும் அம்பாறை தொகுதியில் மைத்திரிபால
தோல்வியடைந்துள்ளதுடன் மஹிந்த ராஜபக்ஷ வெற்றியீட்டியுள்ளார்.
மலையக தமிழ் மக்கள் மற்றும் சிங்களம் பேசும் முஸ்லிம்கள் செறிந்து
வாழும் நுவரெலியா மாவட்டத்தில் பொது வேட்பாளர் மைத்திரிபால சிரிசேன 272,605 வாக்குகளை பெற்று
அமோக வெற்றியீட்டியுள்ளார். இந்த மாவட்டத்தில் மஹிந்த ராஜபக்ஷவினால் 145,339 வாக்குகளையே பெற முடிந்தது.
அத்துடன் யாழ் மாவட்டத்தில் மைத்திரிபால சிறிசேன 253,574 வாக்குகளை பெற்று
பாரிய வெற்றியடைந்துள்ளார். இந்த மாவட்டத்தில் மஹிந்த ராஜபக்ஷவினால் 74,454 வாக்குகளையே பெற முடிந்தது.
அதேபோன்று கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தில் கூடிய வாக்குகளை மைத்திரிபால
சிறிசேன பெற்றுள்ளார்.
அந்த மாவட்டத்தில் மைத்திரி 209,422 வாக்குகளை பெற்று வெற்றிபெற்றுள்ளார். மஹிந்த
ராஜபக்ஷவினால் 41,631 வாக்குகளையே பெற முடிந்தது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெற்றிபெற்றுள்ள 12 மாவட்டங்களில் மாவட்ட
ரீதியாக பெறறுள்ள வாக்குகளின் விபரம் வருமாறு.
- திகாமடுல்லை – 233360 ( 65.22 வீதம் )
- புத்தளம் – 202,073 (50.04 வீதம்)
- கம்பஹா – 669007 (49.83வீதம்)
- கொழும்பு – 725073 ( 55.93வீதம்)
- பதுளை – 249524 ( 49.21வீதம்)
- மட்டக்களப்பு – 209422 ( 81.62வீதம்)
- யாழ்ப்பாணம் – 253574 ( 74.42வீதம்)
- கண்டி – 466994 ( 54.56வீதம்)
- நுவரெலியா – 272605 (63.88வீதம்)
- வன்னி – 141417 (78.47வீதம்)
- பொலன்னறுவை – 147974 ( 57.80வீதம்)
- திருகோணமலை – 140338 (71.84வீதம்) என்ற ரீதியில் பெற்றுக்கொண்டுள்ளார்.
மஹிந்த ராஜபக்ஷ வெற்றிபெற்றுள்ள 10 மாவட்டங்களில் மாவட்ட ரீதியாக பெற்றுள்ள
வாக்குகள் வருமாறு.
- காலி – 377126 (55.64வீதம் )
- மாத்தறை – 297823 (57.81 வீதம்)
- அநுராதபுரம் – 281161 (53.59வீதம்)
- கேகாலை 278130 (51.82 வீதம்)
- இரத்தினபுரி – 379053 (55.74)
- அம்பாந்தோட்டை – 243295 (63.02வீதம் )
- மொனராகலை – 172745 (61.45வீதம் )
- குருணாகல் – 556868 (53.46 வீதம் )
- மாத்தளை – 158880 (51.41வீதம்)
- களுத்துறை – 395,890 (52.65 வீதம்) என்ற அடிப்படையில் மஹிந்த ராஜபக்ஷ வெற்றிபெற்றுள்ளார்.
மஹிந்த ராஜபக்ஷ கடந்த 10 வருடங்களாக நாட்டின் ஜனாதிபதியாக நாட்டில்
பதவி வகித்தார். கடந்த 2005 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐந்தாவது ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்ற
ஜனாதிபதி மஹிந்த ஐந்து வருடங்கள் பதவி வகித்தார்.
எனினும் நான்கு வருடங்களிலேயே 2010 ஆம் ஆண்டில் ஆறாவது ஜனாதிபதி தேர்தலை நடத்தினார்.
அந்தத் தேர்தலிலும் மஹிந்த ராஜபக்ஷ வெற்றிபெறறிருந்தார். இந்நிலையில் எதிர்வரும் 2016 ஆம் ஆண்டு நவம்பர்
மாதம் வரை மஹிந்த ராஜபக்ஷ பதவி வகிப்பதற்கு காலம் இருந்தும் அவர் 2015 ஆம் ஆண்டில் நாட்டின்
ஏழாவது ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கான அறிவித்தலை விடுத்தார்.
எதிர்கட்சித் தலைவர் ரனில் விக்கிரமசிங்கதான் தனக்கு எதிரான
போட்டியாளராக வருவார் ஆகையினால் தான் அமோக வெற்றியை வெற்று விடலாம் என்ற எண்ணத்திலேயே
தேர்தலை முற்கூட்டி நடத்தினால் மஹிந்த. ஆனால் தனது கட்சிக்குள்ளிருந்தே ஒருவரை பொது
வேட்பாளராக எதிர்தரப்பு அறிவிக்கும் என்பதை மஹிந்த கடைசி வரை உணரவில்லை.
08ம் திகதி தேர்தலுக்குப் பின்னும் நான் தான் ஜனாதிபதி என்று மேடை
தோறும் கூறித்திரிந்த மஹிந்த ராஜபக்ஷ இன்று இலங்கையின் முன்னால் ஜனாதிபதி என்ற நாமத்துடன்
தனது சொந்த ஊரான அம்பாந்தோட்டைக்கு குடியேறியுள்ளார்.
நன்றி:-
www.rasminmisc.com - 2013-2014 http://rasminmisc.com/prasident-maithri/ |
Rasmin Misc
