உலகில் முதன்முதலாக செவ்வாய் கிரகத்திற்கு செல்வதற்காக விண்ணப்பித்தவர்கள் பட்டியலில் 3 இந்தியர்களும் இடம்பெற்றுள்ளனர்.
சிவப்பு கிரகம் என அழைக்கப்படும் செவ்வாயில், உயிர்கள் வாழ ஏற்ற சூழல் நிலவுகிறதா என விஞ்ஞானிகள் தீவிர ஆய்வு நடத்தி வருகின்றனர்.
இந்தியாவின் மங்கள்யானும் இந்தத் தேடலில்தான் தீவிரமாக இறங்கியுள்ளது. இது ஒருபுறமிருக்க, அங்கு மனிதர்களைக் குடியேற்றும் திட்டத்தை உலக நாடுகள் மேற்கொண்டு வருகின்றன.
அதன்படி சுமார் 40 பேரைக் கொண்ட ஒரு காலனியை அங்கு நிறுவத் திட்டமிடப்பட்டுள்ளது.
நெதர்லாந்தை மையமாகக் கொண்டு செயற்பட்டு வரும் தனியார் நிறுவனமான “மார்ஸ் ஒன்” அமைப்பு இதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது.
இதற்கான அறிவிப்பு வெளியான உடனே, உலகம் முழுவதிலும் இருந்து 2 இலட்சத்து 2 ஆயிரத்து 586 பேர் செவ்வாய்ப் பயணத் திட்டத்திற்கு விண்ணப்பித்தனர்.
இது ஒரு வழிப் பயணம் ஆகும். செவ்வாய் கிரகத்துக்கு பத்திரமாக போய் சேர்ந்தால் அங்கு இருந்து திரும்பி வர முடியாது.
இந்த வினோதப் பயணத்திற்காக உலகம் முழுவதும் இருந்து விண்ணப்பித்தவர்களின் பட்டியலில் இருந்து 3 சுற்று சோதனைகள் நடத்தி, 50 ஆண்கள், 50 பெண்கள் கொண்ட 100 பேர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பட்டியலில் அமெரிக்காவில் இருந்து 39 பேர், ஐரோப்பியர் 31, ஆசியாவில் இருந்து 16, ஆப்பிரிக்கா மற்றும் ஓசியானியாவில் இருந்து தலா 7 பேர் அடங்குவர்.
இந்தப் பட்டியலில் புளோரிடாவில் ஆய்வுக்கல்வி பயின்று வரும் தரண்ஜீத் சிங், துபாயில் வசித்து வரும் ரித்திகா சிங், கேரளாவைச் சேர்ந்த இளம்பெண் சாரதா பிரசாத் ஆகிய 3 இந்தியர்களும் இடம்பெற்றுள்ளனர்.
