Saturday, February 21, 2015

மார்ச் 31ம் திகதி முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவு

நாட்டுக்கு எதிரான சதிச்செயலில் ஈடுபட்டார், பொதுமக்களின் அடிப்படை உரிமைகளை மீற முற்பட்டமை, என்ற குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உட்பட மேலும் 06 பேருக்கு எதிர்வரும் மார்ச் மாதம் 31ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகும் படி உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

பிரதம நீதியரசர் கே.சிறிபவன், நீதியரசர்களான பிரியசாத் டெப், ஈவா வனசுந்தர தலைமையிலான நீதியரசர்களடங்கிய குழுவே இந்த உத்தரவை நேற்று முன்தினம் பிறப்பித்துள்ளது. முன்னிலை சோசலிசக் கட்சியின் தலைவர் துமிந்த நாகமுவ தாக்கல் செய்த குற்றச்சாட்டுக்கள் அடங்கிய மனுவின் அடிப்படையிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது நாட்டின் 25 மாவட்டங்களிலும் இராணுவ படைகளை குவித்து குழப்ப நிலையை உருவாக்க முனைந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே இம் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 இது அரசியலமைப்பு சாசனத்தின் படி அடிப்படை உரிமை மீறல் செயற்பாடாகும் எனவும் அம்மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மனுவை பரிசீலனைக்கு உட்படுத்திய போதே மேற்கண்ட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. (நியூஸ்.எல்கே)
Disqus Comments