ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன தேவையற்ற வீண் செலவுகளைக் குறைத்து சாதாரணமான முறையில் செயற்பட்டு வருவதால் தனது முதலாவது வெளிநாட்டுப் பயணத்தின் மூலம் அரசுக்கு சுமார் இரண்டு கோடிக்கும் அதிகமான பணம் மிச்சப்படுத்தப்பட்டிருப்பதாக ஜனாதிபதி செயலக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக இன்போஸ்ரீலங்காநிவுஸ்.கொம் என்ற சிங்கள இணையம் செய்தி வெளியிட்டுள்ளது.ஜனாதிபதி தனது முதலாவது வெளிநாட்டுப் பயணத்தை மேற்கொண்டு கடந்த 15ம் திகதி நான்கு நாள் பயணமாக இந்தியாவுக்குச் சென்றிருந்தார். இந்தப் பயணத்திற்காகச் செலவாகிய மொத்தத் தொகை 57 இலட்சத்து 81 ஆயிரத்தி 400 ரூபாவேயாகும். எனினும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இதற்கு முன்னர் இந்தியாவுக்கான உத்தியோகபூர்வ பயணத்தினை மேற்கொண்ட போது அதற்காக இரண்டு கோடியே 61 இலட்சத்தி 428 ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளதாகவும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
இதன்படி இம்முறை ஜனாதிபதியின் இந்திய விஜயத்தினால் அரசுக்கு சுமார் இரண்டு கோடிக்கும் மேற்பட்ட தொகை மிச்சப்படுத்தப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் முதலாவது வெளிநாட்டுப் பயணத்தின் போது அவர் சாதாரண பயணிகள் விமானத்திலேயே இந்தியா சென்றிருந்தார். எனினும் இதற்கு முன்னர் முன்னாள் ஜனாதிபி இந்தியப் பயணத்திற்காக விஷேட விமானத்தைப் பாவித்திருந்ததாகவும், இதற்காகச் செலவிடப்பட்ட தொகை ஒரு கொடியே 16 இலட்சத்தி 73 ஆயிரத்தி 428 ரூபாய் எனவும் அவ்வதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.
(இன்போ சிரிலங்கா நிவுஸ் - www.infosrilankanews.com என்ற சிங்கள இணையத்தளத்தில் வெளியான செய்தியின் தமிழாக்கம்)