எகிப்தைச் சேர்ந்த பழங்கால பூனைச் சிலை ஏலத்தில் 52 ஆயிரம் பவுண்டுகளுக்கு விற்கப்பட்டுள்ளது.
2,500 வருடங்கள் பழமையானதாகக் கருதப்படும் இந்தச் சிலை, மேற்கு கார்ன்வால் பகுதியில் ஒரு வீட்டைக் காலி செய்யும்போது கண்டெடுக்கப்பட்டது.
5 ஆயிரம் பவுண்டு முதல் பத்தாயிரம் பவுண்டு வரை விலை போகும் என்று கருதப்பட்ட இந்தப் பூனை சிலையை லண்டனைச் சேர்ந்த, கலைப் பொருட்களை வாங்கி விற்கும் வர்த்தகர் ஒருவர் வாங்கியுள்ளார்.
இந்தப் பூனைச் சிலையை வைத்திருந்தவர்களுக்கு இதன் உண்மையான மதிப்புத் தெரியவில்லை என்பதால், இதனைத் தூக்கி எறியவிருந்தார்கள் என இந்தப் பூனைச் சிலையை ஏலம் விட்ட டேவிட் லே என்பவர் கூறினார்.
2003ஆம் ஆண்டில் இறந்துபோன டக்ளஸ் லிட்வெல் என்பவர் இந்தப் பூனைச் சிலையை வைத்திருந்ததாக கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
ஸ்பிங்க் & சன் என்ற பழங்கால எகிப்தியப் பொருட்களை விற்கும் நிறுவனத்தில் நிர்வாக இயக்குனராக இருந்த டக்ளஸ் 1987ல் கார்ன்வெல்லில் குடியேறினார்.
பிரிட்டிஷ் மியூசியத்தில் உள்ள முன்னணி நிபுணர்கள் இந்தச் சிலையின் பழமையை உறுதிப்படுத்தியுள்ளனர்.
கி.மு. 700 முதல் 500 வரையிலான காலத்தைச் சேர்ந்த இந்தப் பூனைச் சிலையை மிக உயர்ந்த அந்தஸ்திலுள்ள ஒரு எகிப்தியர் செய்யச்சொல்லியிருக்கலாம் என டேவிட் லே கூறியிருக்கிறார்.
