எறும்புகள் தங்கள் கூட்டின் ஓரத்தில் கழிவறைகளுக்கென்று தனி இடம் ஒதுக்கி வைத்து வாழ்வதாக ஆய்வொன்றின் மூலம் தெரிய வந்துள்ளது.
ஜெர்மனி நாட்டில் உள்ள ரெகன்ஸ்பர்க் பல்கலைக் கழகத்தில் பணியாற்றும் டாமர் சேக்ஸ் மற்றும் அவரது சகாக்கள் இதுகுறித்த ஆய்வை மேற்கொண்டனர்.
இந்த ஆய்வு முடிவுகள் ‘ப்ளஸ் ஒன்’ எனும் பிரபல அறிவியல் ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்ளன.
இதற்காக 21 கட்டெறும்புக் கூடுகள் தெரிவு செய்யப்பட்டன. அவற்றில் 150 முதல் 300 கட்டெறும்புகள் வாழ்ந்து வந்தன. இந்த ஆய்வு இரண்டு மாதங்கள் நடைபெற்றது.
அந்த எறும்புகளுக்கு சிவப்பு மற்றும் நீல நிற உணவு வகைகள் வழங்கப்பட்டன. பின்னர், எறும்புக் கூடுகளை ஆய்வு செய்தபோது அந்தக் கூடுகளின் ஓரங்களில் என்ன வகையான நிறங்களில் எறும்புகள் உணவு எடுத்துக் கொண்டனவோ, அதே நிறத்தில் அதன் கழிவுகளும் இருப்பது தெரியவந்தது.
இது எல்லா கூடுகளிலும் காணப்படுகிற ஒரு பொது அம்சமாக இருந்தது. மேலும், அந்தக் கூடுகளில், வீணாக்கப்பட்ட உணவோ அல்லது சேமித்து வைக்கப்பட்ட உணவோ காணப்படவில்லை.
இதுகுறித்து சேக்ஸ் கூறும் போது, “மனிதர்களைப் போலவே எறும்புகளுக்கும் சுகாதாரமான இருப்பிடம் கிடைப்பதற்குக் கடினமாக உள்ளது, அவை நம்மைப் போலவே வீட்டின் ஒரு மூலையில்தான் கழிவறைகளை அமைக்கின்றன. அதோடு, தமது கூடுகளையும் சுத்தமாக வைத்துள்ளன” என்றார்.
