Sunday, February 15, 2015

பாகிஸ்தானை இந்தியா அணி 76 ஓட்டங்களால் வெற்றி கொண்டது

பாகிஸ்தானுக்கு எதிரான உலகக் கிண்ணத் தொடரின்  லீக் போட்டியில் கோஹ்லியின் சதத்துடன் இந்திய அணி 76 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. துடுப்பாட்டம் மற்றும் பந்து வீச்சில் சோப்பிக்கத் தவறிய பாகிஸ்தான், மீண்டும் இந்தியாவிடம் சரணடைந்தது.
அவுஸ்திரேலியா, நியூசிலாந்தில் 11ஆவது உலகக் கிண்ணத் தொடர் நடைபெற்று வருகின்றது. இன்று அடிலெய்டில் நடந்த லீக் போட்டியில் ‘பி’ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. 
‘மகா யுத்தம்’ என வர்ணிக்கப்பட்ட இந்த மோதலில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணித் தலைவர் டோனி துடுப்பாட்டத்தை தேர்வு செய்தார்.
இந்திய அணிக்கு தவான், ரோகித் சர்மா ஜோடி நிதான துவக்கம் கொடுத்தது. 2 பவுண்டரி விளாசிய ரோகித், 15 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க தவானுடன் கோஹ்லி இணைந்தார்.
இருவரும் இணைந்து உறுதியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.  தவான் ஒருநாள் அரங்கில் 12ஆவது அரைசதம் அடித்தார்.

மறுமுனையில் கோஹ்லி, தன் பங்கிற்கு அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 2ஆவது விக்கெட்டுக்கு 129 ஓட்டங்களை சேர்த்த நிலையில், தவான் (73) துரதிருஷ்டவசமாக ரன் அவுட்டானார்.
இருப்பினும், கோஹ்லியுடன் இணைந்த ரெய்னா வேகமான ஓட்டங்களை சேர்த்தார். இந்த ஜோடியின் சிறப்பான ஓட்ட குவிப்பு கைகொடுக்க, இந்திய அணி 37வது ஓவரில் 200 ஓட்டங்களை எட்டியது.
சமீபத்திய போட்டிகளில் ஏமாற்றிய கோஹ்லி, ஒருநாள் அரங்கில் 22 வது சதம் அடித்தார். யாசிர் ஷா, அப்ரிடி பந்துகளில் சிக்சர் அடித்த ரெய்னா, 34ஆவது அரைசதத்தை எட்டினார்.
இதன் பின் கோஹ்லி (101), ரெய்னா (74) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். டோனி (13), ஜடேஜா (3), ரகானே (0) அடுத்தடுத்த பந்துகளில் ஏமாற்ற இந்திய அணி 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 300 ஓட்டங்களை எடுத்தது. அஷ்வின் (1), முகமது ஷமி (3) ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

பாகிஸ்தான் அணிக்கு யூனிஸ் கான், ஷெசாத் ஜோடி சரியான ஆரம்பத்தை பெற்று கொடுக்கவில்லை.  முகமது ஷமியின் வேகத்தில் அனுபவ வீரர் யூனிஸ் கான் (6) ஆட்டமிழந்தார்.    சற்று தாக்குப்பிடித்த ஹரிஸ் சொகைல் (36) அஷ்வின் சுழலில் வீழ்ந்தார்.
போட்டியின் 24 வது ஓவரை வீசிய உமேஷ் யாதவ் இந்திய அணிக்கு திடீர் திருப்பம் தந்தார். 2வது பந்தில் ஷேசாத்தை (47) வெளியேற்றிய இவர், 4வது பந்தில் மக்சூட்டை எவ்வித ஓட்டமும் பெறாது ஆட்டமிழக்கச் செய்தார். அடுத்த சில நிமிடத்தில் உமர் அக்மலும் ஓட்டமெதுவும் பெறாது அரங்கு திரும்பினார்.
சிறிது நேரம் நீடித்த  அப்ரிடி (22), வகாப் ரியாசை (4) ஒரே ஓவரில் திருப்பி அனுப்பினார் முகமது ஷமி. யாசிர் ஷா 13 ஓட்டங்களை எடுத்தார்.
மனம் தளராமல் போராடிய  மிஸ்பா, 39ஆவது அரைசதம் அடித்து, 76 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். இறுதியில் சொகைல் கான் (7) ஆட்டமிழக்காமல் களத்தில் இருக்க பாகிஸ்தான் அணி 47 ஓவரில் 224 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து 76 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது. போட்டியின் ஆட்டநாயகனாக கோஹ்லி தெரிவு செய்யப்பட்டார்.
Disqus Comments