நாணய சுழற்சியில் வென்ற நியூசிலாந்து, பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதைத் தொடர்ந்து களமிறங்கிய ஸ்கொட்லாந்தின் தொடக்க ஆட்டக்காரர் கைல் கோட்சர் 1 ஓட்டத்துடனும், கலம் மேக்லியோட் ஓட்டம் ஏதும் எடுக்காமலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ஹேம்ஸ் கார்டினரும், அணித்தலைவர் பிரிஸ்டோன் மோம்சனும் முதல் பந்திலேயே டக் அவுட் ஆனார்கள்.
எனவே அந்த அணி 4.2 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இந்த நிலையில்தான் மோட் மச்சான் மற்றும் ரிச்சே பெர்ரிங்டன் ஆகியோர் முறையே 56 மற்றும் 50 ரன்கள் விளாசி அணி கவுரவமான ஓட்ட எண்ணிக்கையை எட்ட உதவினர்.
இருப்பினும் அதன்பிறகு வந்த வீரர்கள் முன்வரிசைகாரர்களை போல நடையை கட்ட, ஸ்கொட்லாந்து அணி, 36.2 ஓவர்களில் 142 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. டானியல் வெட்டோரி மற்றும் அன்டர்சன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினர்.
அதன் பின்னர் துடுப்பாட்டத்ததை ஆரம்பித்த நியூசிலாந்தும் ஸ்கொட்லாந்து பந்து வீச்சில் தடுமாற்றத்தையே சந்தித்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் மார்டின் குப்தில் 17 ஓட்டங்களுடனும், மக்கலம் 15 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்து ஏமாற்றினர். கேன் வில்லியம்சன் 38 ஓட்டங்களுடனும், ரோஸ் டெய்லர் 9 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர்.
17.5 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 106 ரன்கள் எடுத்திருந்த நியூசிலாந்துக்கு அடுத்தடுத்து அதிர்ச்சியளித்தனர் ஸ்கொட்லாந்து பந்துவீச்சாளர்கள். இதனால், 23.4 ஓவர்களில் அந்த அணி 137 ஓட்டங்களுக்குள் 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இருப்பினும் டானியல் வெட்டோரி 8 ஓட்டங்களுடனும், அடம் மில்னே 1 ஓட்டத்துடனும் கடைசி வரை களத்தில் நின்று வெற்றியை உறுதி செய்தனர்.
24.5 வது ஓவரில் வெட்டோரி பவுண்டரி அடிக்க நியூசிலாந்து 7 விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் எடுத்து போராடி வெற்றி பெற்றது. குட்டியணியான ஸ்காட்லாந்து, பலம்வாய்ந்த நியூசிலாந்தை அதன் சொந்த மண்ணிலேயே மிரட்டிவிட்டது என்றுதான் கூற வேண்டும்.
151 பந்துகள் மிச்சமிருந்த நிலையிலும், 3 விக்கெட் வித்தியாசத்தில்தான் நியூசிலாந்து வெற்றி பெற்றுள்ளது. இத்தனை பந்துகள் மிச்சமிருந்த நிலையில் வெறும் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில்தான் ஒரு அணி வெற்றி பெற்றது உலக கிரிக்கெட் வரலாற்றிலேயே இதுதான் முதல் முறையாகும். அந்த வகையில் சோதனையிலும் ஒரு சாதனை படைத்துள்ளது நியூசிலாந்து.
