இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று இந்தியாவுக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்த இலங்கை ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன, இன்று வெள்ளிக்கிழமை காலை இலங்கையை வந்தடைந்தார்.
கடந்த மாதம் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று ஜனாதிபதியாக பதவியேற்றுக் கொண்டதன் பின்னர் மைத்திரிபால சிறிசேன மேற்கொண்ட முதலாவது வெளிநாட்டுக்கான விஜயம் இதுவாகும்.
இந்நிலையில் யுஎல்-166 என்ற பயணிகள் விமானத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இலங்கையை வந்தடைந்துள்ளார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பையேற்று கடந்த ஞாயிற்றுக்கிழமை 15ஆம் திகதி மாலை யுஎல்-195 என்ற பயணிகள் விமானத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்தியாவுக்கு பயணமானார்.
அங்கு இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, இந்திய மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே.சின்ஹா மற்றும் உயர் அதிகாரிகள் வரவேற்றனர்.
இதன்பின்னர் அன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் வளாகத்தில் வைக்கப்பட்டு அவலோக்தேஸ்வர போதிசத்வ சிலையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திரைநீக்கம் செய்து வைத்தார்.
தொடர்ந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு; புதுடில்லியில் அமைந்துள்ள ஹைதராபாத் இல்லத்தில் திங்கட்கிழமை பிற்பகல இடம்பெற்றது.
அதே தினத்தில் இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜை புதுடில்லியில் வைத்து சந்தித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இந்திய ஜனாதிபதி மாளிகையில் அமைந்துள்ள மகாத்மா காந்தியின் கல்லறைக்கும் அஞ்சலி செலுத்தினார்.
இதேவேளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும் இலங்கைத் தூதுக்குழுவையும் வரவேற்கும் நிகழ்வு, இந்திய ஜனாதிபதி மாளிகையான ராஸ்ட்ரபதி பவனில் திங்கட்கிழமை நடைபெற்றது. அங்கு சென்ற ஜனாதிபதியையும் இலங்கை தூதுக்குழுவையும் இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியும் வரவேற்றார்கள்.
பின்னர் இந்திய ஜனாதிபதிக்கும் இலங்கை ஜனாதிபதிக்கும் இடையில், சினேகபூர்வமான கலந்துரையாடலொன்று இடம்பெற்றது. இதனைத்தொடர்ந்து இலங்கை – இந்தியாவுக்கான இரு தரப்பு பேச்சுவார்த்தையை ஜனாதிபதியும் இந்திய பிரதமரும் மேற்கொண்டனர்.
இதன்போது, பொருளாதாரம், சக்தி, மீன்பிடி மற்றும் கலாச்சார உறவுகள் ஆகிய துறையில் நான்கு உடன்படிக்கைகளில் கைச்சாத்திடப்பட்டன.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் சுகாதார மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் ராஜித சேனாரத்ன, மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, மீள்குடியேற்ற, புனர்வாழ்வு மற்றும் இந்து விவகார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்டின் பெர்ணான்டோ, ஜனாதிபதி செயலாளர் பி.பி.அபேகோன் ஆகியோரும் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
