காலி துறைமுகத்தில் வைத்து கைப்பற்றப்பட்ட மிதக்கும் ஆயுத களஞ்சியசாலை தொடர்பான வழக்கு மார்ச் மாதம் 12 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலப்பிட்டிய முன்னிலையில் கடந்த 2ஆம் திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டபோது அவர், இந்த வழக்கை நேற்று திங்கட்கிழமை 9ஆம் திகதி வரையிலும் ஒத்திவைத்திருந்தார்.
இந்நிலையில், அவ்வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டபோது வழக்கு விசாரணையை மார்ச் 12ஆம் திகதி வரையும் ஒத்திவைத்தார். இதேவேளை, காலி துறைமுகத்தில் நங்கூரம் இடப்பட்டிருந்த மிதக்கும் ஆயுத களஞ்சியசாலை விவகாரம் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, கடற்படை முன்னாள் தளபதி வைஸ் அட்மிரல் சோமதிலக்க திஸாநாயக்க, மஞ்சுள குமார யாப்பா மற்றும் கருணாரத்ன பண்டார ஆகிய நால்வரும் வெளிநாடுகளுக்கு செல்வதற்கு நீதிமன்றத்தினால் தடைவிதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த களஞ்சியசாலை தொடர்பில் வெளிவிவகார அமைச்சு மற்றும் பாதுகாப்பு அமைச்சிடமிருந்து ஆலோசனைகளை பெற்று நீதிமன்றுக்கு முன்வைக்குமாறும் நீதவான், குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு பணித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
