Tuesday, March 10, 2015

இங்கிலாந்தை தோற்கடித்த பங்களாதேஷ் காலிறுதிக்குள் நுழைந்தது.

இங்கிலாந்து அணிக்கெதிரான உலகக் கிண்ண லீக் போட்டியில் 15 ஓட்டங்களால் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி காலிறுதிக்கு தகுதிபெற்றுள்ளது.


11 ஆவது உலகக் கிண்ணத் தொடர் அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து மண்ணில் இடம்பெற்று வருகின்றது.

அவுஸ்திரேலியாவின் அடிலெய்டில் இன்று இடம்பெற்ற உலகக் கிண்ண லீக் போட்டியில் குழு “ஏ ” யில் இடம்பெற்றுள்ள இங்கிலாந்து மற்றும்  பங்களாதேஷ் அணிகள் ஒன்றையொன்று சந்தித்தன.

இப் போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி முதலில்  களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய பங்களாதேஷ் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 275 ஓட்டங்களைப் பெற்றது.

பங்களாதேஷ் அணி சார்பாக மஹமதுல்லாஹ் 103 ஓட்டங்களையும் முஸ்பிகுர் ரஹீம் 89 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.

மஹமதுல்லாஹ் தனது கன்னிச்சதத்தை பெற்றுக்கொண்டதுடன்  உலகக் கிண்ண வரலாற்றில் பங்களாதேஷ் அணி பெற்றுக்கொண்ட முதலாவது சதமும் இதுவாகும்.

இங்கிலாந்து அணி சார்பாக பந்து வீச்சில் அன்டர்சன் மற்றும் ஜோர்டான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

276 என்ற வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி பங்களாதேஷ் அணியின் பந்து வீச்சுக்கு தாக்குப்பிடிக்க முடியாது 48.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 260 ஓட்டங்களைப் பெற்று 15 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

இங்கிலாந்து அணி சார்பாக துடுப்பாட்டத்தில் பட்லர் 65 ஓட்டங்களையும் பெல் 63 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.

பந்து வீச்சில் பங்களாதேஷ் அணி சார்பாக ருபெல் குசைன் 4 விக்கெட்டுகளையும் மொட்டர்ஸா மற்றும் அஹமட் ஆகியோர்  தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இப் போட்டியின் ஆட்டநாயகனாக பங்களாதேஷ் அணியின் மஹமதுல்லாஹ் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
Disqus Comments