Sunday, March 22, 2015

அமெரிக்கா எம்மைத் தாக்கினால் திருப்பி தாக்க அணு குண்டுகள் தயார் - வடகொரியா

எந்த நேரத்திலும் எங்களால் அணு ஏவுகணைகளை வீச முடியும் என கூறியுள்ள வடகொரியா, அமெரிக்கா தாக்கினால் திருப்பி தாக்குவோம் என எச்சரிக்கை விடுத்து உள்ளது.

கூட்டு ராணுவப்பயிற்சி
கிழக்கு ஆசிய பிராந்தியத்தில், கொரிய தீபகற்பத்தின் வட பகுதியில் அமைந்துள்ள வடகொரியா, தனது அண்டை நாடான தென்கொரியாவுடன் தொடர்ந்து மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிறது. எனவே வடகொரியாவின் சவாலை சமாளிப்பதற்காக, அமெரிக்காவுடன் தென்கொரியா கூட்டு சேர்ந்துள்ளது.

கொரிய தீபகற்பத்தில் வடகொரியாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் இரு நாடுகளும் இணைந்து அடிக்கடி கூட்டு ராணுவப்பயிற்சிகளை நடத்தி வருகின்றன. இது வடகொரியாவுக்கு மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்தி வருகிறது.

அணு ஏவுகணைகள்
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நீண்டதூர ஏவுகணைகளையும், அணு ஆயுதங்களையும் அடிக்கடி வடகொரியா சோதித்து பார்க்கிறது. அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் இருந்து கடந்த 1993–ம் ஆண்டு விலகிய வடகொரியா, கடைசியாக கடந்த 2013–ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் 3 அணுகுண்டுகளை சோதித்தது.

எனினும் அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் நீண்டதூர ஏவுகணைகளை வடகொரியா இன்னும் சோதனை நடத்தவில்லை. ஆனால் இந்த ஏவுகணைகளை தயாரிக்கும் திறன் அந்த நாட்டுக்கு இருப்பதாக, தென்கொரியாவில் முகாமிட்டுள்ள அமெரிக்க ராணுவ கமாண்டர் ஏற்கனவே கூறியிருந்தார்.

வடகொரிய தூதர்
இந்த நிலையில் தங்களால் எந்த நேரமும் அணு ஏவுகணைகளை வீச முடியும் என வடகொரியா கூறியுள்ளது. இது குறித்து இங்கிலாந்துக்கான வடகொரிய தூதர் ஹியுன் ஹக்–பாங், செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறும்போது, ‘அணு ஆயுத தாக்குதல் என்பது அமெரிக்காவுக்கான ஏகபோக உரிமை அல்ல’ என்றார்.
அப்படியானால் அணு ஏவுகணைகளை வீச வடகொரியாவால் இப்போது முடியுமா? என்று கேட்டதற்கு, ‘ஆம். எப்போது வேண்டுமானாலும், எந்த நேரத்திலும் முடியும்’ என்று பதிலளித்தார்.

அணு ஆயுத போருக்கு தயார்
அவர் மேலும் கூறும்போது, ‘நாங்கள் போரை விரும்பவில்லை. ஆனால் அமெரிக்கா எங்களை தாக்கினால், நாங்கள் திருப்பி தாக்குவோம். அது வழக்கமான போரென்றால் அதற்கும், அணு ஆயுதப்போர் என்றால் அந்த ரீதியான போருக்கும் நாங்கள் தயார்’ என்று தெரிவித்தார்.
முன்னதாக வடகொரிய வெளியுறவு மந்திரி ரி சு யாங் இந்த மாத தொடக்கத்தில் கூறும்போது, ‘அமெரிக்காவிடமிருந்து அதிகரித்து வரும் அணு ஆயுத அச்சுறுத்தலை தடுப்பதற்காக, தேவைப்பட்டால் முன்கூட்டியே தாக்குதலை நடத்தவும் தயங்கமாட்டோம்’ என கூறியிருந்தார்.
அமெரிக்காவும் தயார்
இதற்கிடையே ஜப்பான் மற்றும் தென்கொரியாவில் முகாமிட்டுள்ள அமெரிக்க படைகளை குறிவைத்து நூற்றுக்கணக்கான ஏவுகணைகளை வடகொரியா தயாராக வைத்திருப்பதாக அமெரிக்க அதிகாரிகள் கடந்த சில நாட்களுக்கு முன் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
எனினும் வடகொரியாவால் அணு ஏவுகணை தாக்குதல் நடத்த முடியும் என உளவுத்துறை தகவல் எதுவும் உள்ளதா? என்ற கேள்விக்கு அமெரிக்க அதிகாரிகள் பதிலளிக்க மறுத்தனர். எனினும் வடகொரியாவின் அச்சுறுத்தலுக்கு பதிலடி கொடுக்க முழு அளவில் தயாராக இருப்பதாக அவர்கள் கூறினர்.
Disqus Comments