Monday, March 2, 2015

”விருதோடையின் சுகாதார சீர் கேடும், முதுகெலும்பற்ற அரசியல் தலைமைகளும் ”

ஆரம்பகாலத்தில் விருதோடையானது ஒரு வனப்பு மிக்க கிராமமாகும். கிராமத்திற்கே உரித்தான சுற்றுப்புறச் சூழல், இதமான காற்று, சுத்தமான நீர் நிலைகள் எனக் கூறிக்கொண்டே போகலாம். ஏன் எமது கிராமத்திற்கு விருதோடை (விருது பெற்ற ஓடை )என்ற பெயர் கிடைப்பதற்கு காரணமாக அமைந்ததே எமது கிராமத்தின் அழகிய, சுகாதாரமான  நிலையை கருத்தில் கொண்டாகும்.

இன்றைய காலகட்டத்தில் இச் சூழலானது அவ்வாறே தலைகீழாக மாறி இருப்பதனை அவதானிக்க முடிகிறது. இதற்கு காரணம் என்ன? பல்வேறு காரணங்கள் இருந்த போதிலும் முதன்மை பெறுவது சுகாதாரமற்ற தென்னை வியாபாரமும், தும்பு தொழிற்சாலைகளுமே ஆகும்.
விருதோடை கிராமத்தை சுற்றி முழுக்க சுகாதாரமற்ற தும்பு தொழிற்சாலைகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. வீட்டுக்கு வீடு என்று சொல்லுமளவுக்கு பெருகி இருப்பதனை அவதானிக்க முடிகிறது

இங்கு அமையப்பெற்றுள்ள எந்த ஒரு தொழிற்சாலையும் சுகாதார கட்டமைப்புக்கு ஏற்றால் போல் அமையப்பெறவில்லை. வெறும் இலாப நோக்கை மட்டும் அடிப்படையாக கொண்டு கட்டமைக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர் …

  • சுத்தமான காற்றினை சுவாசிப்பதில் சிக்கல்.
  • பல்வேறு சுவாச நோய்கள் உருவாகுவதற்கு வழி சமைக்கிறது.
  • பாதைகளில் தும்பு ஏற்றிச் செல்லும் இயந்திரங்களால் பாதையின் சீர்மை பாதிக்க படுவதோடு, பாதை முழுக்க குப்பை மேடாக மாற்றமடையச் செய்கிறது.
  • தும்பு ஏற்றிச் செல்லும் இயந்திரங்கள் பயணிக்கும் பதை வழியே ஏனைய பிரயாணிகள் சீராக பயணிப்பதில் சிக்கலை ஏற்படுத்துகின்றமை.(கண்ணுக்குள் தூசி விழுதல் போன்றன )
  • சிறுவர் தொழில் வாய்ப்புக்களை அதிகரித்து மாணவர் கல்விக்கு தடையாக அமைகிறது.
  • பணத்திற்கும்,உடல் சோர்விற்கும் உள்ளாகும் மாணவர்கள்,தவறான பாதைக்கு பயணிக்க ஏதுவான காரணிகளை வழிசமைத்து கொடுக்கிறது (தொழிற்சாலை சூழல் )
  • *பாடசாலைக் கல்வியில் மாணவர்களின் நாட்டத்தை குறைத்து தொழிலில் ஈடுபட தூண்டுகிறது.
  • *நீர் மாசடைதல் ( 6 – 7 வருடங்களுக்கு முன் கிணற்று மற்றும் குழாய்க் கிணறுகளை குடி நீருக்கு பயன் படுத்திய நாம் இன்று காசுக்கு நீர் வாங்கும் நிலை .
  • குடிப்பதற்கு மட்டுமன்றி பாவிக்கும் நீருக்கும் அதே நிலை விரைவில் ….
  • மலைக் காலங்களில் நுளம்புகள் பெருகுவதற்கும்,ஏனைய தொற்று நோய்கள் வருவதற்கும்காரணமாக அமைகிறது .
  • தும்பு ஏற்றும் இயந்திரங்களின் ஓட்டுனர்களாக சிறுவர்கள் பயன்படுத்தப்படுவதால் பல விபத்துக்கள் ஏற்பட வழிசமைக்கிறது .
இன்னும் பல அடுக்கிக் கொண்டே போகலாம் …
எமது வாழ்வு சிறப்புற சிறப்பான சூழல் மிக முக்கியமானதொரு அம்சம். இவ் விடயம் தொடர்பாக எம் ஊர் மக்கள் மத்தியில் எவ்வித தெளிவும், சிந்தனையும் இல்லை, பணம் உழைப்பதை மட்டும் குறிக்கோளாக கொண்டு எம் மக்கள் எமது வாழ்வியல் சூழலை நாசமடையச் செய்கின்றனர் .எதிர்கால தலைமுறையினரைப்பற்றி எவ்வித அக்கறையும் இன்றி செயல்படுகின்றனர். இச் செயற்பாடானது மிக குறுகிய காலத்தில் எமது பிரதேசத்தில் பல்வேறு பிரச்சினைகள் தோன்றுவதற்கும் வழி வகுக்கும் என்பதில் ஐயமில்லை.
தும்புச் தொழிற்சாலைகளின் ஆரம்ப உருவாக்கத்தில் சுகாதாரமான பேணுதல் முறைகளை பின்பற்றி இருந்தால் இவ்வாறான பிரச்சினைகள் உருவாக வாய்ப்பிருக்காது.
எமது முன்னாள் அரசியல் தலைமைகளும் இது பற்றின சரியான அறிவின்மையால் இவ் எதிர்கால பாதிப்பு பற்றி எவ்வித நடவடிக்கையோ விழிப்பூட்டலோ எம் ஊரார் மத்தியில் எடுத்துச் செல்லவில்லை.
இன்றைய சூழலில் எமது கிராமத்தை மையமாக கொண்டு அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களே இது தொடர்பான என்ன திட்டமிடல்களை கொண்டுள்ளீர்கள். இப் பிரச்சினை தொடர்பாக சாதாரண மக்கள் முன்னெடுத்துச் செல்வதை விட நீங்கள் முன்னெடுத்துச் செல்வது சாதகமான பெறுபேறுகளை பெற்றுத்தரும் என நம்புகிறேன் .
”’விருதோடையினை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதிகளே இது உங்களின் கவனத்திற்கு ”’மிக விரைவில் உங்கள் பதில்களை எதிர்பார்க்கிறோம் .
குறிப்பு ;
விருதோடை கிராமத்தில்  ஆசிரியர்கள், ஊடகவியலாளர்கள், பட்டதாரிகள் இருந்தும் இது பற்றி சிந்திக்காமல் இருப்பது எமது சிந்தனை பலவீனத்தை காட்டுகிறது என்பதும் மறுப்பதற்கில்லை .
(Thanks : Viruthodai Politix )





Disqus Comments