Monday, March 2, 2015

ஞானசார தேரருக்கு சுகயீனம் : வழக்கு ஏப்ரல் 27 இற்கு ஒத்திவைப்பு (Video)

புனித அல்குர்ஆன் அவமதிப்பு மற்றும் நிப்போன் ஹோட்டலில் இடம்பெற்ற வட்டரக்க விஜத தேரரின் ஊடகவியலாளர் மாநாட்டை குழப்பியமை தொடர்பில் பொதுபலசேன அமைப்பின் தேரர்களுக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கு இன்று கொழும்பு கோட்டை நீதிமன்றத்தில் நீதவான் திலினி கமகே முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டது.
அதற்கமைய புனித அல்குர்ஆன் அவமதிப்பு தொடர்பான வழக்கில், பொதுபலசேன அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் சுகயீனம் காரணமாக கலந்துகொள்ளவில்லை என அவரது சட்டத்தரணி நீதவானிடம் அறிவித்தார். இதனையடுத்து எதிர்வரும் 27ஆம் திகதி இடம்பெறவுள்ள வழக்கு விசாரணையின் போது ஞானசார தேரர் ஆஜராக வேண்டும் என அறிவித்த நீதவான், சுகயீனம் தொடர்பில் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ அறிக்கையினை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.
நிப்போன் ஹோட்டலில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பை குழப்பியமை தொடர்பிலான வழக்கில் தேரர்கள் 8 பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் சுகயீனம் காரணமாக ஞானசார தேரர் ஆஜராகவில்லை, மேலும் மூன்றாவது சந்தேக நபரான வெலிமட சந்திர ரத்தன ஹிமி, ஐந்தாவது சந்தேக நபரான ஆரியவன்ச ஹிமி மற்றும் எட்டாவது சந்தேக நபரான பதிரனகே குணவர்தன ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. அவர்களுக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.
பொதுபலசேனா அமைப்பின் சார்பில் தேசிய அமைப்பாளர் விதாரந்தனிய நந்த தேரர் தலைமையில் ஐந்து தேரர்கள் ஆஜராகினர். அதேவேளை பொதுபலசேன அமைப்புக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்த எம்.தாஜுதீன் உட்பட சிரேஷ்ட சட்டத்ததரணி சிராஸ் நூர்தீன் மற்றும் ருஷ்தி ஹபீப் ஆகியோர் நீதிமன்றுக்கு ஆஜராகியிருந்தனர். 


Disqus Comments