Tuesday, March 3, 2015

கடற்படையினுள்ளேயே வெள்ளை வேன் கடத்தல் பிரிவு - பொலிஸ் ஊடகப் பிரிவு

வெள்ளை வேன்களில் ஆட்களைக் கடத்தும் குழு ஒன்று கடற்படையினுள் செயற்பட்டுள்ளமை குற்றப் புலனாய்வு தினைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளிலிருந்து தெரிய வந்திருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். பொலிஸ் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இச்செயற்பாடுகள் கொழும்பு மற்றும் திருகோணமலை ஆகிய இடங்களிலிருந்தே இடம்பெற்றுள்ளமை தெரியவந்துள்ளன. மட்டக்குளி மற்றும் திருகோணமலை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த உயர் தரம் சித்தியடைந்த, பல்கலைக்கழக அனுமதி கிடைக்கப்பெற்றிருந்து தமிழ், முஸ்லிம் சிங்கள செல்வந்தர்களின் பிள்ளைகள் பத்துப் பேரைக் கடத்திச் சென்று அவர்களின் பெற்றோர்களிடமிருந்து பெரியளவில் கப்பம் பெற்றுக் கொண்டு அவர்களைக் காணாமல் செய்த சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளிலிருந்தே இத்தகவல்கள் வெளிவந்துள்ளன.

இந்த பத்து இளைஞர்கள் காணாமல் போனமை தொடர்பில் கடந்த 2010ம் ஆண்டில் கடற்படை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். இந்தக் கடத்தல் சம்பவங்கள் 2008, 2009ம் ஆண்டுகளில் இடம்பெற்றுள்ளதுடன் இலட்சக் கணக்கான பணம் கப்பமாகப் பெறப்பட்டுள்ளமையும் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

கடற்படையில் விஷேட செயலணி என்ற பெயரில் இந்தப் பிரிவு செயற்பட்டுள்ளது. கடற்படையின் ஒன்பது வீரர்கள் இப்பிரிவில் பணியாற்றியுள்ளனர். முன்னாள் கடற்படை ஊடகப் பேச்சாளர் கெப்டன் தசநாயக்கா இப்பிரிவின் கண்காணிப்பாளராகச் செயற்பட்டுள்ளதாகவும் அவர் இங்கு தெரிவித்தார்.
 
இவ்வாறு கடற்படையினுள் மேற்கொள்ளப்படும் இந்த சட்டவிரோத பிரிவு தொடர்பான விபரங்களை அப்போதைய கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொடவினால் பொலிஸ் மா அதிபருக்கு அப்போது வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு கடத்தப்பட்ட இளைஞர்களின் ஐந்து அடையாள அட்டைகள் கோட்டை கடற்படை தலைமைகத்தில் உள்ள குறித்த பிரிவிலிருந்து கண்டெடுத்துள்ளதாகத் தெரிவித்து கடற்படைத் தளபதி பொலிஸ்மா அதிபரிடம் தெரிவித்திருந்ததாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் இங்கு மேலும் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து குறித்த அடையாள அட்டைகள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு வழங்கப்பட்டு மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

கடத்தப்பட்ட இளைஞர்கள் முதலில் அவர்களது பெற்றோர்களுடன் பேச வைக்கப்பட்ட பின்னரே கப்பம் பெறப்பட்டுள்ளமை தற்போது விசாரணைகளிலின் மூலம் தெரிய வந்திருப்பதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

(நன்றி - லக்பிம)
Disqus Comments