தான், சட்டவிரோதமாக எதனையும் செய்யவில்லை என்றும் சட்டத்துக்கமையவே செயற்பட்டதாகவும் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அவன்காட் நிறுவனத்தின் மிதக்கும் ஆயுத களஞ்சியசாலை விவகாரத்தில் வெளிநாடுகளுக்கு பயணம் செய்வதற்கு தடைவிதித்தமை தொடர்பில் கருத்துரைத்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் தான் ஏற்கெனவே சகல விவரங்களையும் கொடுத்துவிட்டதாக கூறிய அவர், இதுபற்றிய விசாரணை முடியாத நிலையில் தன்னுடைய கடவுச்சீட்டு பற்றிக்கப்பட்டமை பற்றி அவர் குறைகூறினார்.
'எத்தனையோ கஷ்டங்களுக்கு முகம்கொடுத்த போதிலும் நாம் நாட்டைவிட்டு வெளியேறவில்லை. சிலர் எம்மை கொலைக்காரர்களாவும் கள்வர்களாகவும் உலகுக்கு காட்ட முயற்சிக்கின்றனர். ஆனால், நாம் என்ன செய்தோம், நாம் யார் என்பதை நாட்டு மக்கள் அறிவர், நாம் பொதுச்சொத்துக்களை சூறையாடவில்லை. நாட்டுக்காக உழைத்த எமக்கு இவ்வாறு தண்டனை போடுவது அநீதியானது என்றும் அவர் கூறினார்.
சிலர் சுயநல அரசியல் இலாபத்துக்காக தமக்கு எதிரான சூழ்ச்சிகளை மேற்கொள்வதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
ஆனால், இந்த சூழ்ச்சிகளின் பின்னால் உள்ளவர்களின் பெயர்களே இதனால் கெட்டுப்போகும் என்றும் அவர் கூறினார்.
'இதில் சட்டமா அதிபர் திணைக்கள அலுவலர்கள் சிலர் சம்பந்தப்பட்டிப்பதை நான் அறிவேன் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.'
