Wednesday, June 10, 2015

ஒருநாள் வரலாற்றில் முதல் முறையாக 400 ஓட்டங்களை கடந்தது இங்கிலாந்து

உலகக்கிண்ணத்தில் பெற்ற தோல்விக்கு பின்னர் துவண்டு போயிருந்த இங்கிலாந்து அணி நேற்றைய தினம் இடம்பெற்ற நியூசிலாந்து அணியுடனான போட்டியில் 210 ஓட்டங்களால் அபார வெற்றி பெற்றது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி களத்தடுப்பைத் தீர்மானித்தது. அந்தவகையில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய இங்கிலாந்து அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான ரோய் மற்றும் ஹேல்ஸ் ஆகிய இருவரும் பெரிதக சோபிக்கவில்லை.
இந்நிலையில் ரூட் மற்றும் அணித்தலைவர் இயன் மோர்கன்  சிறப்பாகத் துடுப்பெடுத்தாடி முறையே 104 மற்றும் 50 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டு அணியை சிறப்பான நிலைக்கு இட்டுச்சென்றனர்.
இவர்கள் இருவரும் இணைந்து 121 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றுக்கொண்டனர். இதில் ரூட் 71 பந்துகளில் சதத்தைக் கடந்ததுடன் இது இவரின் 5 ஆவது சதமாகும்.
இவர்கள் இருவரும் ஆட்டமிழந்த  பின்னர் இங்கிலாந்து அணியின் விக்கெட்டுக்கள் வேகமாக சரிந்தாலும் 7 ஆவது விக்கெட்டுக்காக பட்லர் மற்றும் ராசிட் ஆகியோர் 105 பந்துகளில் 177 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்து இங்கிலாந்து அணியை வலுவான நிலைக்கு கொண்டு சென்றனர்.
இதில் பட்லர் 77 பந்துகளில் 129 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டதுடன் 5 ஆறு ஓட்டங்களையும் 13 நான்கு ஓட்டங்களையும் விளாசினார். அத்துடன் ராசிட் 50 பந்துகளில் 69 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார். இதில் 7 நான்கு ஓட்டங்கள் உள்ளடங்கும்.
இவர்கள் பெற்ற 177 ஓட்ட இணைப்பாட்டமானது ஒருநாள் வரலாற்றில் பெறப்பட்ட அதிகூடிய ஓட்டப்பெறுதியாகும்.
இறுதியாக இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 408 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 31.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 198 ஓட்டங்களை மாத்திரம் பெற்று 210 ஓட்டங்களால் படுதோல்வியடைந்தது.
துடுப்பாட்டத்தில் டெய்லர் மாத்திரம் 57 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். துடுப்பாட்டத்தில் கலக்கிய ராசிட் பந்துவீச்சிலும் கலக்கி 4 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினார்.
போட்டியின் ஆட்டநாயகனாக பட்லர் தெரிவுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. பட்லர் பெற்ற சதமானது இங்கிலாந்து அணி வீரரால் பெறப்பட்ட இரண்டாவது அதிவேக சதமாகும். முதலாவது அதிவேக சதமான 61 பந்துகளில் பெறப்பட்ட சதமும் இலங்கை அணிக்கெதிராக பட்லராலேயே பெறப்பட்டது விசேட அம்சமாகும்.
அத்துடன் இங்கிலாந்து அணி முதல் முறையாக 400 ஓட்டங்களைக் கடந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
Disqus Comments