Monday, July 13, 2015

மஹிந்தவின் மீள்வருகை மேற்கு நாடுகளுக்கு கொஞ்சம் கூட பிடிக்கவில்லை.

(கே. சஞ்சயன்) கொழும்பு அரசியல் களம் முன்னெப்போதும் இல்லாதளவுக்கு சூடுபிடித்துள்ளது. அண்மைக் காலங்களில் நடந்த, அதிகம் பரபரப்பை ஏற்படுத்திய தேர்தல் என்று, கடந்த ஜனவரி மாதம் நடந்த ஜனாதிபதி தேர்தலையே குறிப்பிடலாம். 

ஆனால், அதையும் மிஞ்சிய பரபரப்பையும் எதிர்பார்ப்பையும் இந்த நாடாளுமன்றத் தேர்தல் அறிவிப்பு ஏற்படுத்தியிருக்கிறது. வேட்புமனுத் தாக்கலுக்கான இறுதி நாள் நெருங்கிக் கொண்டிருக்கின்ற போதிலும் கூட, தமது வேட்புமனுவை இறுதி செய்ய முடியாமல் பெரும்பாலான கட்சிகள் இருக்கின்றன. அதைவிட, யார் எங்கு போட்டியிடுவார் என்று சரியாக கணிக்க முடியாத நிலையும் காணப்படுகிறது. 

குறிப்பாக மஹிந்த ராஜபக்ஷவின் அரசியல் மறுபிரவேசம், இந்த தேர்தல் களத்தை மிகவும் பரபரப்பாக்கியிருக்கிறது.   அதுவும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் அவருக்கு போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படுமா அல்லது அவர் தனித்துப் போட்டியிடும் நிலை ஏற்படுமா என்ற கேள்விக்கான விடை, வேட்புமனு  கையளிக்கப்படும் வரை உறுதியாகத் தெரியாத நிலை தோன்றியிருக்கிறது. 

இது அரசியல் களத்தை இன்னும் சூடேற்றி விட்டிருக்கிறது. மஹிந்த ராஜபக்ஷ இந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவது ஏற்கெனவே உறுதியாகிவிட்டது. ஆனால், எந்தக் கட்சியில் - எந்தச் சின்னத்தில் என்பது தான் மர்மமாக இருக்கிறது. அந்தளவுக்கு இந்த விடயத்தில் நிச்சயமற்ற நிலை ஒன்று காணப்படுகிறது. மிகமுக்கியமான ஒரு பிரமுகராக இருந்த போதிலும், அவரால் கூட என்ன நடக்கப்போகிறது - என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று சரியாக கணிக்க முடியாதிருக்கிறது என்பதே உண்மை. 

எவ்வாறாயினும், இந்தத் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ தீர்க்கமான ஒரு சக்தியாகத் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளும் வாய்ப்புகளை நிராகரிக்க முடியாது. அவர் எந்தக் கட்சியில் எந்தச் சின்னத்தில் போட்டியிடுவார் என்பதைப் பொறுத்து, அவரது எதிர்கால அரசியல் நிலை தீர்மானிக்கப்படும். மஹிந்த ராஜபக்ஷ விவகாரத்தில், யாராலும் கணிக்கப்பட முடியாத பல விடயங்கள் நடந்தேறியிருக்கின்றன. நிறைவேற்று அதிகாரத்தைக் கொண்டிருந்தும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால், சில விட்டுக்கொடுப்புக்களைச் செய்ய வேண்டியேற்பட்டிருக்கிறது. 

அதேவேளை, கடந்த ஜனாதிபதி தேர்தலில் 58 இலட்சம் வாக்காளர்களின் ஆதரவைப் பெற்றிருந்த போதிலும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்குள் போட்டியிடுவதற்காக கெஞ்சுகின்ற நிலை மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஏற்பட்டிருக்கிறது. அதுபோலவே, சந்திரிகா குமாரதுங்கவும் சரி ஏனைய அரசியல் தலைவர்களும் சரி, இந்த அரசியல் சூழலைச் சரியாக ஊகிக்கவோ கணிக்கவோ முடியாத ஒரு நிலையே தோன்றியிருக்கிறது. இவை எல்லாவற்றுக்கும் அப்பால் பொதுமக்களால் என்ன நடக்கிறது என்றே கணிக்கமுடியவில்லை. ஒரு நாளைக்கு ஒரு செய்தி என்பதைவிட, ஒரே நாளில் வெவ்வேறு விதமான, ஒன்றுக்கொன்று முரணான தகவல்கள் வெளியாகி குழப்பங்களை ஏற்படுத்துகின்றன. 

அரசியலில் என்ன நடக்கப் போகிறது என்று கொஞ்சமும் எதிர்வுகூற முடியாத நிலையில் பல ஊடகங்கள் இதுபற்றி வாய் திறப்பதையே தவிர்த்துக் கொண்டன என்றால் மிகையில்லை. அந்தளவுக்கு தற்போதைய அரசியல்போக்கு முற்கணிப்பீடுகளுக்கு அப்பாற்பட்ட ஒன்றாக மாறியிருக்கிறது. இந்தநிலையைச் சர்வதேச சமூகமும் கூட எதிர்பார்த்திருக்கவில்லை என்றே தெரிகிறது. மஹிந்த ராஜபக்ஷவின் மீள்வருகையை சர்வதேச சமூகம் உன்னிப்பாக கண்காணித்து வந்தாலும், அதையிட்டு கருத்து வெளியிட தயக்கம் காட்டி வருகிறது.

 இது ஓர் உள்நாட்டு விவகாரம் என்று இலகுவாக ஒதுக்கித் தள்ளிவிடக் கூடியதொரு வாய்ப்பு இருந்தாலும், சர்வதேச சமூகம் இந்த விடயத்தில் வாய்திறக்கத் தயாராக இல்லை.  கடந்தவாரம் நியூயோர்க்கில் நடந்த செய்தியாளர் மாநாட்டில், ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனின் பதில் பேச்சாளரான பர்ஹான் ஹக்கிடம், மஹிந்த ராஜபக்ஷவின் மீள் வருகை தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், எந்தக் கருத்தையும் வெளியிட முடியாது என்று கூறிவிட்டார். 

அதுபோலவே, கடந்த 2ஆம் திகதி வொஷிங்டனில் நடந்த- அமெரிக்க இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளரின் நாளாந்த செய்தியாளர் சந்திப்பிலும் ஒரு கேள்வி எழுப்பப்பட்டது. இலங்கையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் தொடர்பாக கருத்து எதையாவது கூற விரும்புகிறீர்களா? என்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் ஜோன் கிர்பியிடம் கேள்வி எழுப்பியிருந்தார் செய்தியாளர் ஒருவர். அதற்கு அவர், இலங்கை தொடர்பான எந்த முன்னாயத்துத்துடனும் வரவில்லை என்று கூறிவிட்டுச் சென்று விட்டார். 

ஜூலை 4ஆம் திகதி அமெரிக்காவின் தேசிய தினம் என்பதால், அதற்கு முந்திய தினமான ஜூலை 3 வெள்ளிக்கிழமை நாளாந்த செய்தியாளர் சந்திப்பு நடக்கவில்லை. அதற்குப் பின்னர் இலங்கை விவகாரம் குறித்து இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் எந்தக் கருத்தையும் கூறாமல் மறந்து போனார்.  ஒருவேளை, கடந்த ஜூலை 3ஆம் திகதி செய்தியாளர் சந்திப்பு நடந்திருந்தால், இலங்கையின் அரசியல் நிலைவரம் தொடர்பான கருத்தை அவர் வெளியிட்டிருக்கக் கூடும். அமெரிக்காவைப் பொறுத்தவரையில் உள்நாட்டு தேர்தல் விடயங்கள் தொடர்பாக நேரடியான கருத்தை பதிவு செய்யாது என்றாலும், மஹிந்தவின் வருகை தொடர்பான தனது சூசகமான நிலைப்பாட்டையெனும் வெளிப்படுத்தியிருக்கலாம்.

 தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர், இலங்கை நிலைவரம் தொடர்பாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் கருத்து எதுவும் வெளியாகவில்லை. எவ்வாறாயினும், அமெரிக்காவோ அல்லது சர்வதேச சமூகமோ, குறிப்பாக மேற்குலகமோ மஹிந்த ராஜபக்ஷவின் மீள்வருகை விடயத்தில் முன்னெச்சரிக்கையுடன் நடந்து கொள்ளும் என்பதே உண்மை. ஏனென்றால், மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தை எதேச்சாதிகார ஆட்சி என்று பகிரங்கமாக ஐ.நா அதிகாரிகளும் அமெரிக்க அதிகாரிகளும் கூறியதை மறந்து விட முடியாது.

 மஹிந்த ராஜபக்ஷ ஆட்சி அகற்றப்பட்ட பின்னர் தான் அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகளுடன் இலங்கை நெருக்கமான உறவுகளை ஏற்படுத்த முடிந்துள்ளது. அதைவிட மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்காத ஓர் ஆட்சியாகவே மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியை சர்வதேச சமூகம் கருதி வந்தது. இப்படிப்பட்ட நிலையில், மீண்டும் மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்கு வருவதை அதிகாரம் செலுத்த முனைவதை, மேற்குலக நாடுகளால் ஜீரணிக்க முடியாது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு இடமளிக்கப்படும் எனறு சுசில் பிரேமஜயந்த அறிக்கையை வெளியிட்டதும், கொழும்பிலுள்ள மேற்குநாட்டு இராஜதந்திரிகள் அதனை அதிர்ச்சியோடு தான் பார்த்தனர். 

இதுகுறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் அவர்கள் பேச்சு நடத்த முற்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. எவ்வாறாயினும், இந்த விடயத்தில் நேரடியாகவோ வெளிப்படையாகவோ கருத்து எதையும் முன்வைப்பதை வெளிநாடுகள் தவிர்க்கின்றன. உள்நாட்டு விவகாரத்தில் தலையீடு செய்யும் முயற்சியாக அது கருதப்படும் என்றதால் வெளிப்படையாக எந்தக் கருத்தும் முன்வைக்கப்படாது போனாலும், மஹிந்த ராஜபக்ஷவின் வருகையை ஆபத்தின் அறிகுறையாகவே அவர்களால் பார்க்கப்படும் என்பதில் சந்தேகமில்லை. 

தற்போதைய அரசியலமைப்பின் பிரகாரம் பிரதமருக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது, நாடாளுமன்றத்தில் மஹிந்த ராஜபக்ஷ பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியைப் பிடித்தால், மைத்திரிபால சிறிசேனவை வெறும் துரும்பாக மாற்றி விடுவார். நாடாளுமன்றப் பெரும்பான்மை பலத்தைக் கொண்டு, நாட்டின் கொள்கைகளை தீர்மானிக்கும் சக்தியாக மஹிந்த ராஜபக்ஷ மாறக்கூடும். அத்தகைய கட்டத்தில் மைத்திரிபால சிறிசேன வெறும் டம்மியாக மாறிவிடுவார். 

அதைவிட, பெரும்பாலும் அடுத்தமாத இறுதியிலேயே ஐ.நாவின் விசாரணை அறிக்கை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அறிக்கையில், போர்க்குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. ஏற்கெனவே, அரச அதிகாரிகள், இராணுவ அதிகாரிகள் 42 பேருக்கு எதிராக போர்க்குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களில் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. 

இத்தகைய நிலையில், ஐ.நா விசாரணை அறிக்கையை பரிசீலனைக்கு எடுத்து, அதன் பரிந்துரைகளுடன் ஒத்துப்போகின்ற ஒருவராக மஹிந்த ராஜபக்ஷ செயற்படமாட்டார். அவரது கடந்தகால ஆட்சி ஐ.நாவுடனும் சர்வதேச சமூகத்துடனும் முரண்பாடுகளை ஏற்படுத்தும் ஒன்றாகவே இருந்தது. எனவே, மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் ஆட்சி அதிகாரத்துக்கு வருவதை, மனித உரிமைகள், ஜனநாயகம் போன்றவற்றின் அடிப்படையில் சர்வதேச சமூகம் விரும்பாது. அத்தகையதொரு நிலை ஏற்பட்டால் அது ஐ.நா முன்னெடுத்துள்ள பொறுப்புக்கூறல் முயற்சிகளுக்கும் பின்னடைவாக அமையும். 

எனவே, மஹிந்த ராஜபக்ஷவின் மீள் அரசியல் பிரவேசத்தை விரும்பத்தகாத ஒரு விடயமாகவே மேற்குலக நாடுகள் பார்க்கின்றன. உள்நாட்டிலும் சிறுபான்மைச் சமூகங்கள் இதனை ஓர் அச்சத்துக்குரிய விடயமாகவே பார்க்கின்றன. இந்தநிலையில், மஹிந்தவினது மட்டுமன்றி இலங்கையினது எதிர்காலத்தையும் தீர்மானிக்கின்ற - தீர்க்கமான ஒரு தேர்தலாக வரும் நாடாளுமன்றத் தேர்தல் அமையப் போகிறது என்பதில் சந்தேகமில்லை.
Disqus Comments