பாகிஸ்தான் அணிக்கெதிரான இரண்டாவது இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டியிலும் தோல்வியடைந்து, தொடரை இழந்த இலங்கையணியின் தலைவர் லசித் மலிங்க, இரண்டாவது போட்டியில் பெறப்பட்ட தோல்விக்கு, தானே காரணம் எனத் தெரிவித்துள்ளார்.
ஆர். பிரேமதாச மைதானத்தில் இடம்பெற்றிருந்த இப்போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடியிலிருந்த இலங்கை அணி 172 ஓட்டங்களைப் பெற்ற போதிலும், பாகிஸ்தான் அணி இறுதி ஓவரில் வெற்றியைப் பெற்றுக் கொண்டது. முதலாவது போட்டியில் 46 ஓட்டங்களை விட்டுக் கொடுத்த மலிங்க, இரண்டாவது போட்டியில் 40 ஓட்டங்களை தனது 4 ஓவர்களில் விட்டுக் கொடுத்திருந்தார்.
இந்நிலையில் கருத்துத் தெரிவித்துள்ள லசித் மலிங்க, தோல்விக்கு தானே காரணம் எனத் தெரிவித்தார். "அடுத்த சில மாதங்களுக்கு நான் கடுமையாகப் பயிற்சியெடுப்பேன். நான் சிறப்பான நிலையை அடைய முடியாவிடின், எனது எதிர்காலம் தொடர்பான முடிவொன்றை எடுக்க வேண்டியிருக்கும்" என ஓய்வு பெறுவதற்கான சமிக்ஞையை வெளிப்படுத்தியூள்ளார்.
உடற்தகுதிக்காகவும் பரவலாக விமர்சனத்தை எதிர்கொண்டிருந்த லசித் மலிங்க, தன்னுடைய உடற்தகுதியில் கவனஞ் செலுத்த முடியூம் என நம்பிக்கை வெளியிட்டதோடு, அணித் தலைவர் பதவியிலிருந்து விலக வேண்டுமென நினைக்கவில்லை எனவும், அணித்தலைமையை தன்னிடமிருந்து வேறொருவருக்கு வழங்குவதற்கு தேர்வாளர்களுக்கு வாய்ப்புக் காணப்படுவதாகத் தெரிவித்தார்.
அணித் தலைவராக இருந்தாலென்ன இல்லாவிட்டாலென்ன, மீண்டும் ஃபோர்மில் வருவதற்கு தனக்கு வாய்ப்பிருக்குமெனத் தெரிவித்த அவர், அவ்வாறில்லையெனில், சிறந்த அணித் தலைவரும் பந்துவீச்சாளரும் தனக்குப் பதிலாகத் தெரிவுசெய்யப்பட்டு, அணியை முன்னோக்கிக் கொண்டு செல்வார்கள் எனத் தெரிவித்தார்.
தன்னுடைய திறமை வெளிப்பாடுகள் தொடர்பாக கடுமையான விமர்சனங்களை முன்வைத்த லசித் மலிங்க, இளைய வீரர்களின் திறமை வெளிப்பாடுகளைப் பாராட்டியதுடன், விமர்சனங்களுக்கு மத்தியிலும் புதிய வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுமெனத் தெரிவித்தார்.