Saturday, September 12, 2015

கட்சி அரசியலை புரம் தள்ளிவிட்டு நாட்டின் அபிவிருத்திக்காக ஒன்றினைவோம். - றிஷாத் பத்தியுத்தீன்

கட்சி அரசியலை ஒரு புறம் வைத்துவிட்டு இந்த நாட்டு மக்களின் அபிலாஷைகளுக்கு முன்னுரிமையளிக்கும் வகையில் நாம் அனைவரும் ஒன்றுபட்டு செயற்படுவோம் என நேற்று தமது அமைச்சுப் பதவிகளை பொறுப்பேற்றுக் கொண்ட கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீன் மேற்கண்டவாறு அழைப்பு விடுத்தார்.

கொழும்பு கொள்ளுபிட்டியில் அமைந்துள்ள தமது அமைச்சின் முன்றலில் இடம் பெற்ற பதவியேற்பு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இந்த நாட்டில் ஒரு நல்லாட்சியினை ஏற்படுத்த வேண்டும் என்பதில் நாம் உறுதியாக இருந்தோம்.அதன் பிற்பாடு புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாக கொண்டுவர நாம் பல தியாகங்களை செய்தோம்.அதன் பின்னர் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக கொண்ட அரசில் பெற்ற அமைச்சின் மூலம் இந்த நாட்டின் அபிவிருத்திக்காக நாம் பணியாற்றியுள்ளோம்.அதன் பிற்பாடு இடம் பெற்ற பொதுத் தேர்தலில் எமது மக்கள் அளித்த வாக்குப்பலத்தின் மூலம் நாம் 5 பாராளுமன்ற பிரதி நிதித்துவத்தை பெற்றுள்ளோம்.

இந்த நாட்டின் பொருளாதார மற்றும் கைத்தொழில் அபிவிருத்திகளை மேம்படுத்த சகலரது பங்களிப்பும் இன்றியமையாதது,குறிப்பாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையிலான அரசில் எனக்கு வழங்கப்பட்டுள்ள இந்த பதவியின் மூலம் கைத்தொழில் துறை மேம்பாட்டுக்கு முழுமையான பங்களிப்பினை வழங்கவுள்ளேன்.

இந்த நாட்டில் 10 இலட்சம் தொழில் வாய்ப்புக்களை பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்கள் உருவாக்கும் பணியினை முன்னெடுக்கவுள்ளார்.அவரது அந்த பணிக்கு எமது பங்களிப்பு இத்துறை மூலம் சேர்க்கப்படவுள்ளது.

ஜக்கிய தேசிய முன்னணி,ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணி,மக்கள் விடுதலை முன்னணி என்று நாம் பிரிந்து நின்றது போதும்,இனி இந்த நாட்டின் நல்லாட்சிக்கும்,அபிவிருத்திக்கும் எமது பங்களிப்பினை நாம் வழங்க வேண்டிய தருணத்தில் இருப்பதாகவும்,அமைச்சர் றிசாத் பதியுதீன் இதன் போது தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.எச்.எம்.நவவி,இஷாக் றஹ்மான்,அப்துல்லா மஹ்ரூப் ,மேல்மாகாண சபை உறுப்பினர் பாயிஸ்,பைரூஸ் ஹாஜியார்,வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன்,ஜனூபர் உட்பட பெரும் எண்ணிக்கையிலானவர்கள் கலந்து கொண்டனர்.


Disqus Comments