யானையைச் சுட்டு பானையில் புதைக்க முயல்கிறார் அரியநேத்திரன்
(சுஐப் எம். காசிம்)வடபுல முஸ்லிம்கள் வடபுலத்தை விட்டுப் புலிகளால் வெளியேற்றப்பட்ட இருபந்தைந்து ஆண்டு நிறைவையொட்டி முஸ்லிம் காங்கிரஸ் கொழும்பி;ல் ஏற்பாடு செய்திருந்த ஒரு கருத்தரங்கிற்கு யாழ். மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி சுமந்திரனும் அழைக்கப்பட்டிருந்தார். இக்கூட்டத்தில் அவர் கருத்து தெரிவிக்கையில், ~வடபுல முஸ்லிம்களை புலிகள் சொந்த மண்ணைவிட்டு விரட்டியமை ஜனநாயக விரோத செயல்| என்றும், எழுபத்தையாயிரம் பேரையும் முற்றாக வெளியேற்றியமை ஓர் இனச்சுத்திகரிப்பு நடவடிக்கை| என்றும் குறிப்பிட்டார்.
உண்மைக்கும் நேர்மைக்கும் மதிப்பளிக்கும் பிரபலமான ஒரு தமிழ்த் தலைவரான சுமந்திரன் அவர்கள் அவ்வாறு குறிப்பிட்டமையையிட்டு, இருபத்தைந்து ஆண்டுகள் இன்னல் வாழ்வை அனுபவிக்கும் வடபுல முஸ்லிம்கள் பெரும் ஆறுதலும் பெருமகிழ்ச்சியும் அடைகிறார்கள். பெரியார் சுமந்திரன் அவர்களின் உண்மைக் கருத்துக்கு தலைவணங்கி தமது மனமுவந்த நன்றிகளை வடபுல முஸ்லிம் சமுகத்தினர் சமர்ப்பிக்கின்றனர்.
சுமந்திரன் அவர்கள் சுதந்திரமாக தமது கருத்தை வெளியிட்டதை மறுத்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன் தெரிவித்துள்ள கருத்துக்கள் வடபுல முஸ்லிம்களின் இதயத்தை புண்பட வைத்துள்ளன. யுத்தக்கெடுபிடியிலிருந்து முஸ்லிம்களை பாதுகாக்கவே, புலிகள் முஸ்லிம்களை விரட்டினார்கள் என்று அப்பட்டமான பொய்யை அரியநேத்திரன் வெளிப்படுத்தியுள்ளார். முஸ்லிம்களின் பாதுகாப்பைப் புலிகள் கருத்தில் கொண்டிருப்பனரா...? இல்லையா...? என்பதை பின்வரும் சம்பவங்கள் வெளிப்படுத்தும்.
இடப்பெயர்வுக்கு முன்னர் யாழ். மாவட்டத்திலுள்ள 55 தனவந்தர்களும் வியாபாரிகளும் புலிகளால் கடத்தப்பட்டு, சிறைவைக்கப்பட்டனர். சித்திர வதைக்குள்ளான இவர்களிடமிருந்து வங்கிப் பணமும் வீட்டிலுள்ள பணமும் நகைகளும் பறிக்கப்பட்டன. வடபுல முஸ்லிம் கடைகளில் வரி அறவிடப்பட்டது. முஸ்லிம்களின் வாகனம், இழுபொறி ஆகியவற்றுக்கு வரி அறவிடப்பட்டது. உழவர்களிடமிருந்து விளைச்சலில் நெல் அறவிடப்பட்டது. அரச ஊழியர்களிடம் பணம் அறவிடப்பட்டது. 1983ம் தொடக்கம் 1990 ஐப்பசி வரை பொருளாதார சுரண்டல்கள் தாராளமாக இடம்பெற்றன. இத்தகைய அராஜக செயல்கள் மூலம் வடபுல முஸ்லிம்களை புலிகள் வருத்தினர். எனவே, பாதுகாப்புக் கருதியே முஸ்லிம்களை விரட்டினர் என்ற அரியநேத்திரனின் கூட்டுக்கு அப்பட்டமான பொய்யாகும்.