ரூஸி சனூன்  புத்தளம்
புத்தளம் வலய கல்வி பணிமனையினால் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆசிரியர் இடமாற்றம் தொடர்பாக வடமேல் மாகாண சபை உறுப்பினர்  என்.டி.எம். தாஹிர் அதில் தலையிட்டு வலய கல்வி பணிப்பாளர் விஜேசிங்க அவர்களை அச்சுறுத்தியதாக தெரிவித்து அதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், வடமேல் மாகாண சபை உறுப்பினர்  என்.டி.எம். தாஹிரை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துமாறு கோரியும் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று வியாழக்கிழமை (17) காலை இடம்பெற்றது.
புத்தளம் வலய கல்வி பணிமனைக்கு முன்பாக இலங்கை ஆசிரியர் சங்க செயலாளர் ஜோசப்  ஸ்டாலின் தலைமையில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் உதவி கல்வி பணிப்பாளர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், புத்தளம் வலய கல்வி பணிமனைக்கு உட்பட்ட பாடசாலைகளின் அதிபர்கள் உள்ளிட்ட  வலய கல்வி பணிமனையில் சேவையாற்றும் அனைத்து அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
தலையிடாதே,தலையிடாதே கல்வியில்  தலையிடாதே, கல்வியிலே அரசியலை உட்படுத்தாதே  போன்ற கோஷங்களை ஆர்ப்பாட்டக்கார்கள் எழுப்பியதோடு தாஹிரே உன் அடாவடித்தனத்தை நிறுத்து, கை வைக்காதே, கை வைக்காதே கல்வியிலே கை வைக்காதே, கல்வி என்ன கசாப்பு கடையா, தாஹிரை உடனடியாக கைது செய் போன்ற வாசகங்களை உள்ளடக்கிய பதாதைகளையும் ஏந்தி நின்றனர்.
ஆர்ப்பாட்டாக்காரர்கள் புத்தளம் குருநாகல் வீதி ஊடாக புத்தளம் பிரதான சுற்று  வட்டத்தை தாண்டி ஊர்வலமாக மீண்டும் கல்வி பணிமனையை அடைந்தனர்.
(நன்றி புத்தளம் ஆன்லைன் இணைய தளம்)



