Wednesday, April 27, 2016

05 இலட்சம் பேர் பதிவு செய்யாமல் வெளிநாடுகளுக்கு சட்டவிரோத பயணம்?

சுமார் 05 இலட்சம் இலங்கையர்கள் தமது தொழில் நிமித்தம் பதிவுகள் செய்யாமல் சட்டவிரோதமான முறையில் நாட்டைவிட்டு சென்றிருக்கலாமென வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் அமைச்சர் தலதா அத்துகோரல நேற்று தெரிவித்தார்.
வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்கள் பற்றிய திருத்தமான தரவுகள் இல்லாமையினால் பணியாளர்களதும் இலங்கையில் வாழும் குடும்பத்தாரினதும் நலன் குறித்து அக்கறை செலுத்துவதில் தாம் பாரிய சிக்கல்களை எதிர்நோக்குவதாகவும் அமைச்சர் கூறினார்.
வெளிநாடு செல்வோரின் தரவுகளை சேகரிக்கும் வகையில் கடந்த ஜனவரி மாதம் முதல் ஆரம்பிக்கப்பட்ட பதிவு முறைமை நான்கு மாதங்களாகியும் வெற்றியளிக்காமை கவலைக்குரிய விடயமெனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் அமைச்சில் நேற்றுக் காலை (26) நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கருத்து தெரிவித்த போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
சுமார் 17 இலட்சம் இலங்கையர்கள் வெளிநாடுகளில் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் குறித்த தகவல்களை பதிவுசெய்யுமாறு இலங்கையில் வாழும் உறவினர்களை நாம் கேட்டிருந்தோம். இருந்த போதிலும் 95 ஆயிரம் பேர் மாத்திரமே இதில் பதிவு செய்துள்ளனர்.
இந்த பதிவுகளுக்கு ஏற்கனவே விதிக்கப்பட்டிருந்த காலக்கெடு நீக்கப்பட்டுள்ளது.
புதிய காலக்கெடு இதுவரை தீர்மானிக்கப்படாததால் சட்டப்பூர்வமாகவோ அல்லது சட்டவிரோதமாகவோ வெளிநாடுகளுக்குச் சென்றோர் பற்றிய தகவல்களை இயலுமானவரை விரைவில் பதிவு செய்யுமாறு அமைச்சர் கேட்டுக்கொண்டார்.
முறைப்படி தம்மை பதிவுசெய்து கொள்ளாமல் வெளிநாடுகளுக்கு பணிப்பெண்களாக செல்வோர் பாரிய பிரச்சினைகளை எதிர்நொக்குகின்றனர். இவர்கள் பற்றிய தகவல்கள் இல்லாமையினால் எம்மால் அவர்களுக்கு உதவ முடியாமல் உள்ளது. எனவே துணை முகாமையாளர் ஒருவருடன் செல்வதாக இருந்தாலும் தவறாமல் பதிவுகளை மேற்கொள்ளுமாறும் அமைச்சர் வலியுறுத்தினார்.
அத்துடன் சவூதி அரேபிய அரசாங்கத்துடன் நடத்திய பேச்சுவார்த்தையின் அடிப்படையில் ஏப்ரல் முதலாம் திகதி முதல் இலங்கைப் பணியாளர்களுக்கு ஆகக்கூடிய சம்பளமாக 300 அமெரிக்க டொலர்கள் வழங்கப்படுவதாகவும் அவர் கூறினார்.
நாட்டின் பொருளாதாரம், ஏற்றுமதி, வெளிநாட்டுக் கையிருப்பு ஆகியன நிறைவை அடைந்ததும் வெளிநாட்டுக்கு பணிப்பெண்களாக செல்வோரின் எண்ணிக்கையை வெகுவாக குறைக்கும் வகையில் பயிற்சி பெற்றவர்களை மாத்திரம் எல்லா நாடுகளுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அமைச்சர் தெரிவித்தார்.
Disqus Comments