Wednesday, April 27, 2016

வடமாகாண சபை தீர்மானங்களை நிறைவேற்றினாலும் பாராளுமன்றமே இறுதித் தீர்மானமெடுக்கும்.

(தினகரன்) வட மாகாண சபை எத்தகைய தீர்மானத்தை நிறைவேற்றினாலும் பாராளுமன்றமே அது தொடர்பில் தீர்மானமெடுக்கும் என அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார்.
வட மாகாண சபையின் தீர்மானத்தை வைத்துக்கொண்டு சிலர் தமது குறுகிய அரசியல் நோக்கத்தை நிறைவேற்ற முயற்சிப்பதாகத் தெரிவித்த அமைச்சர், பிரிவினைவாதத்துக்கோ, நாட்டைப் பிளவுபடுத்தவோ இடமளிக்க முடியாது என்றும் இவ்விடயத்தை அரசாங்கம் மிக அவதானத்துடனேயே கையாளும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
நாட்டில் அனைத்து இன, மத மக்களினதும் உரிமைகளைப் பெற்றுக் கொடுக்கும் பொறுப்பை அரசாங்கம் நிறைவேற்றும் பிளவுபடாத ஐக்கிய இலங்கைக்குள்ளேயே அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.பிரதமரோ ஜனாதிபதியோ அரசாங்கத்தில் வேறு எவருமோ நாட்டைபிளவு படுத்துவதற்கு ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை என்றும் அதிகாரப்பகிர்வு விடயத்திலே கவனம் செலுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்
ஸ்ரீகொத்தவில் நேற்று (26)இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் இது தொடர்பில் விளக்கமளித்த அமைச்சர்;
வட மாகாண சபை நிறைவேற்றியுள்ள தீர்மானத்தை ஐக்கிய தேசியக் கட்சி எந்த வகையிலும் அங்கீகரிக்காது.
இது தொடர்பில் கூட்டு எதிர்க் கட்சி பல்வேறு கருத்துக்களை முன்வைத்து வருகிறது. வட மாகாண சபையின் இந்த விவகாரத்தை உண்மையில் கணக்கிலெடுக்க முடியாது.
அவர்கள் எதனை நிறைவேற்றினாலும் அது தொடர்பில் நடவடிக்கை எடுக்க அவர்களுக்கு எவ்வித அதிகாரமும் கிடையாது. அரசாங்கம் என்ற வகையில் பாராளுமன்றத்துக்கே அந்த அதிகாரம் உள்ளது. பிரிவினைவாதத்துக்கு நாம் ஒரு போதும் இடமளிக்க முடியாது.
நாட்டைப் பிளவுபடுத்தவோ சீர்குலைக்கவோ நாம் இடமளிக்கப் போவதில்லை என்ற சத்தியப் பிரமாணத்தை நாம் ஏற்கனவே செய்து கொண்டுள்ளோம். இது தொடர்பில் எந்தப் பேச்சுக்கும் இடமில்லை.
இந்த விவகாரத்தை சிலர் தமக்கு வாய்ப்பாக்கிக் கொள்ளப் பார்க்கின்றனர். கூட்டு எதிர்க்கட்சியினர் ஏன் வட மாகாண முதலமைச்சரை கைதுசெய்யவில்லை? எனக் கேள்வி எழுப்புகின்றனர்.
எம்மால் அவரைக் கைதுசெய்ய மட்டுமன்றி முழு மாகாண சபையையும் கைதுசெய்ய முடியும். ஏனெனில் பொலிஸ் அதிகாரம் மத்திய அரசிடமே உள்ளது.
சம்பந்தனையே கைதுசெய்தாலும் கூட வட, கிழக்குப் பிரச்சினைகள் தீர்ந்துவிடப் போவதில்லை. எனினும் அத்தகைய ஒரு குழப்பகரமான சூழலையே கூட்டு எதிர்க்கட்சி எதிர்பார்க்கிறது. மீண்டும் பயங்கரவாதம் அல்லது பிரிவினைவாதத்தை உருவாக்குவதையா அவர்கள் விரும்புகிறார்கள் என நாம் கேட்க விரும்புகின்றோம். நாட்டை அத்தகையதொரு மோசமான சூழ்நிலைக்கு மீண்டும் தள்ளிவிடுவதற்கு நாம் தயாரில்லை.
வட மாகாணத்தின் இந்த நடவடிக்கையை நாம் எதிர்க்கின்றோம் எனினும் மிக அவதானமாகவே இந்த விவகாரத்தைக் கையாள வேண்டியது முக்கியமாகிறது.
பல்வேறு தரப்பிலிருந்தும் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்படுவதால் இது தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் செயற்படுவது அவசியமாகும்.
சில சில சம்பவங்களைத் தூக்கிப் பிடித்துக் கொண்டு அது தொடர்பில் நாம் நடவடிக்கை எடுக்க முடியாது. அவதானத்துடன் செயற்பட்டு இதற்கான தீர்மானங்களை எடுப்பது முக்கியமாகும்.
வடக்கு மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு அதற்காக பிரிவினைக்கு இடமளிக்க முடியாது. தமது குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக மீண்டும் நாட்டில் பயங்கரவாதத்தை தோற்றுவிக்க முயற்சிப்பவர்களுக்கு அரசாங்கம் இடமளிக்க முடியாது.
அரசாங்கம் அதன் பொறுப்பை செவ்வனே நிறைவேற்றும். அனைத்து இன, மத மக்களினதும் உரிமைகளை பிளவுபடாத ஐக்கிய இலங்கையில் பெற்றுக் கொடுக்க உரிய நடவடிக்கை எடுக்கும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார். (ஸ)
லோரன்ஸ் செல்வநாயகம் 
Disqus Comments