Monday, April 18, 2016

சீதனக் கொடுமை - முஸ்லிம் சகோதரியின் ‘பேஸ்புக்’கில் இருந்த கண்ணீர் மடல். “

அரசியல் மட்டுமல்ல. எமது சமுகத்தில் புரையோடிப் போயுள்ள இது போன்ற இன்னும் பல கேவல நிலைமைகளுக்கும் காரணமாக இருப்பது எம்மவரிடத்தில் முறையான மார்க்கம் இல்லை என்பது எனது அபிப்பிராயம். பெற்றோரிடத்தில் இருந்தால்தானே பிள்ளைகளிடத்தில் வரும்.

அரசியல் ரீதியாக, மார்க்க ரீதியாக, கல்வி ரீதியாக எனது மக்களை அறிவூட்டி, விழிப்புணர வைத்து அவர்களின் இம்மை, மறுமை வாழ்க்கையினை பிரகாசமானதாக மாற்றக் கூடிய பணியினை செய்து முடிக்கும் சக்தியையும், இதில் பிறழ்ந்துவிடாதிருக்கும் மன உறுதியையும் எனக்குக் கொடு யா அல்லாஹ்! என்ற எனது பிரார்த்தனைக்கான காரணத்திற்கு வலு சேர்க்கும் இன்னும் ஒரு  அவலக் குரல், இதோ!

”ஓலை குடிசையில் கூலி வேலை செய்யும் பெற்றோர்களின் வயிற்றில் பெண்ணாக பிறக்க வைத்த என் ரப்பே!என் மன வேதனையை உன்னிடம் தான் தினம் தினம் சொல்லி அழுகின்றேன் விடிவு வராவிட்டாலும் பரவாயில்லை மரணம் என்ற முடிவு வந்தால் போதும் என்ற நிலையில் வாழுகின்றேன் யாருக்கும் பாரமில்லாமல் சென்று விடுவேன் அல்லவா!

வயதுக்கு வந்து பல வருடங்கள் கழிந்து விட்டது கனவுகளை மட்டும் மனதில் சுமந்து கணவன் என்ற உறவுக்காக ஏங்காத நாளில்லை. என்னோடு படித்த தோழிகலெல்லாம் தன் குழந்தைகளுடன் வீதியால் வரும் போது வெட்கத்தில் வீட்டுக்குள் ஓடி ஒழிந்து கொள்ளும் என் நிலையை பார்த்து கதறி அழும் என் தாயின் கண்ணீரை துடைக்க முடியவில்லையே!

பக்கத்து வீட்டு பெண் வந்து உனக்கொரு வாழ்க்கை இன்னும் கிடைக்க வில்லையே என்று முகத்தை பார்த்து பரிதாப படும் போதெல்லாம் என் நிலையை பார்த்து உன்னிடம் தான் கை ஏந்துகின்றேன்.

யாஅல்லாஹ் என் நிலையை போல் இன்னொரு பெண்ணுக்கும் இந்நிலையை கொடுத்து விடாதே என ஆண்களை விட பலகீனத்தை கொண்டு படைக்க பட்ட பெண்ணிடம் வீடும், பணமும் கேட்டால் எங்கே செல்வோம் யா அல்லாஹ் உன்னுடைய சகல கட்டளையையும் பின்பற்ற முடிந்த எங்களுக்கு திருமணம் என்ற கட்டளையை மட்டும் பின்பற்ற முடியாமல் போய் விடுமோ! என்ற அச்சம் எங்களின் உள்ளத்தை வாட்டுகின்றது.

யா அல்லாஹ், என்னை பெண் பார்க்க வந்த எல்லோருக்கும் என் அழகு, அடக்கம், பணிவு, வெட்கம் இறையச்சம்,நேர்மை பிடிக்க வில்லையே மாறாக ஒரு வீடும் பணமும் இருந்தால் போதுமே இப்போதே உன்னை மருமகளாக்கி கொள்வேன் என்று சொல்லி சென்ற எத்தனை மாமி, மதினிமார்களை பார்த்து விட்டேனே இவ்வுலகில்.

இதை விட ஒரு சோதனை இனிமேலும் எனக்கு உண்டா? யா அல்லாஹ், ஆண்களை விலை கொடுத்து வாங்க முடியாத நிலையிலும் விலை பேச கூடிய மண்ணிலும் எங்களை படைத்து சோதனையாக ஆக்கி விட்டாயே!

என் ரப்பே! உன்னுடைய கட்டளையை நிராகரித்து விட்டு வீடு வாங்கி திருமணம் செய்யும் ஆண்களும் சொர்க்கம் செல்வார்கள் என்றிருந்தால் என்னை போல் வாழ்நாளில் வீடு இல்லை என்ற ஒரு காரணத்திற்காக திருமணமே செய்ய முடியாமல் முதிர் கன்னிகளாக காலம் கழித்த பெண்களுக்கு என்ன நியாயம் உள்ளது?”

இப்பெண்மணியைப் போன்ற எண்ணற்ற பெண்களின் துயரத்துக்கு பொறுப்புதாரிகள் யார் ?

மறுமையில் தலைவர்களாக இருக்கும் நீங்கள் இது குறித்தும் விசாரிக்கப்படுவீர்கள் என்பதைமறந்து ஆடம்பர திருமணங்களில் மேடையில் அமர்வதில் உச்சிகுளிர்வதில் எந்த அர்த்தமும் இல்லை. தலைவர் பதவி என்பது வெறும் அதிகாரத்தை மட்டும் அனுபவிக்க உண்டாக்கப்பட்ட பதவி அல்ல.
(நன்றி - அனுப்புனர் - ஸ்ரீலங்கா முஸ்லிம் இணையதளம்.)
Disqus Comments