Monday, April 18, 2016

இளநீரில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பணம், நகைகள் அபகரிப்பு!

(TW) கம்பளையிலிருந்து புசல்லாவைக்கு செல்வதற்காக கம்பளை பாலமருகே பஸ்ஸுக்காககாத்திருந்தவரை முச்சக்கர வண்டியில் ஏற்றி வந்தவர் அவருக்கு செவ்விளநீரில் மயக்கமருந்து கலந்து பருகக் கொடுத்து பணம், தங்க மோதிரம் என்பன சூறையாடப்பட்ட சம்பவமொன்று கடந்த செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக இளம் குடும்பஸ்தர் தெரிவிக்கையில்,
சித்திரை புதுவருடத்தை கொண்டாடுவதற்காக தனது குடும்பத்துக்கு கம்பளை புடவைக் கடையொன்றில் புத்தாடைகளை வாங்கிக்கொண்டு புசல்லாவைக்கு வருவதற்காக கம்பளை பாலமருகே பஸ்ஸுக்காக காத்திருந்த போது முச்சக்கர வண்டியில் வந்த இருவர் தாங்கள் புசல்லாவைக்கு செல்கிறோம் எனக் கூறி அவரை முச்சக்கர வண்டியில் அழைத்து வந்துள்ளனர்.
புசல்லாவைக்கு வரும் வழியில் செவ்விளநீரை அவருக்கு பருக கொடுத்துள்ளனர். அதனை பருகி சில நிமிடங்களில் அவர் மயங்கி விழுந்துள்ளார்.
அதன் பின்னர் அவரிடமிருந்த வெளிநாட்டு நாணயம், (டொலர்) கையில் அணிந் திருந்த மோதிரம் மற்றும் புதுவருடத்திற்கென வாங்கி வந்த புது உடைகள் அனைத்தையும் அபகரித்துக் கொண்டு ஆள் நடமாட்டமற்ற இடத்தில் அவரை இறக்கிவிட்டுச் சென்றுள்ளனர்.
பின்னர் வீட்டார் புதுஉடை வாங்கச் சென்றவர் வீடு திரும்பாததால் தேடிச் சென்ற போது மயக்க நிலையில் இருந்தவரை உடனடியாக மீட்டெடுத்து வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
செவ்விளநீரில் மயக்க மருந்து கலந்து கொடுத்து தன்னை ஏமாற்றியது பின்னர்தான் அவருக்கு தெரியவந்தது.
இவ்வாறான சம்பவம் கம்பளை பகுதியில் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதால் இது குறித்து பொது மக்களும் பயணிகளும் அவதானமாக இருக்குமாறும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Disqus Comments